தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆசிரியர்- மாணவர் இடையே இடைவெளி: கலாம்


ஆசிரியர்-மாணவர், பெற்றோர்-குழந்தைகள் ஆகியோருக்கு இடையிலான இடைவெளியை தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி அதிகரித்து விட்டது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் 16-வது மாநில மாநாட்டில் அவர் பேசியதாவது:

ஆசிரியர் பணி அறப்பணியாகும். இன்று தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் ஆசிரியர்-மாணவர், பெற்றோர்-குழந்தைகள் ஆகியோருக்கு இடையிலான இடைவெளி அதிகமாகி விட்டது.

குழந்தை வன்முறை அதிகரிப்பு

முன்பெல்லாம் குழந்தைகள் மகிழ்ச்சியில் திளைப்பார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கு விடுமுறை கிடைப்பது இல்லை. விடுமுறை நாட்களில் கூட ஏதாவது சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

தகவல் தொழில்நுட்பத்தால் நன்மைகள் கிடைத்தாலும் வன்முறையும் அதிகமாகி விட்டது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் அதிகமான நேரத்தை செலவு செய்ய வேண்டும்.

வகுப்புகளில் விவாத மேடைகள், நாடகம், நடனம், கவிதை, கலாசார கருத்தரங்குகள் நடைபெற வேண்டும். அப்போதுதான் அறிவார்ந்த சமுதாயம் உருவாகும். வெற்றி தோல்வியை மாணவர்கள் ரசிக்க வேண்டும். இன்றைய கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும். பாடச்சுமையை குறைக்க வேண்டும்.

6-ம் வகுப்புவரை பெற்றோர்கள் அரவணைப்பில் மாணவர்கள் படிக்கும்படி பாடங்கள் இருக்க வேண்டும். 7- ம் வகுப்பிற்கு மேல் சிந்திக்கும் திறனையும், கனவு காணும் திறனையும் வளர்க்க வேண்டும்.

ஆசிரியர்கள் கடமை

மாணவர்களை கேள்வி கேட்க விடவேண்டும். மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு ஆசிரியர்கள் சரியான பதிலை கூறவேண்டும். மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டியது ஆசிரியரின் கடமை. அப்போதுதான் அறிவார்ந்த சமுதாயம் உருவாகும்.

பள்ளியில் கட்டமைப்பு வசதி இருந்தால் மட்டும் போதாது. திறமையான ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே தரமான கல்வியை கொடுக்க முடியும்.

நான் படித்த ராமேஸ்வரம் பள்ளி ஓலைக்கூரைதான். இருந்தாலும் அங்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் அனைவரும் மகான்கள். என்னுடன் 55 மாணவ-மாணவிகளும் மேல்படிப்புக்கு சென்றார்கள். பள்ளியின் கட்டிடத்தாலோ, விளம்பரத்தாலோ தரமான கல்வியை தரமுடியாது.

கேரள அனுபவம்

கடந்த 2 மாதத்திற்கு முன் கேரள மாநிலத்தில் உள்ள பரவூருக்கு சென்றேன். அங்கு 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் முன்னிலையில் உரையாற்றினேன்.

அப்போது அதில் 10 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து கேள்வி கேட்குமாறு கூறினேன். அதில் ஒரு மாணவி "தனக்கு மனோதத்துவம் (சைக்காலஜி) பாடம் படிக்க விருப்பம் இருப்பதாகவும், ஆனால் அவருடைய தாய்-தந்தை என்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும், எனவே நீங்கள்தான் எனக்கு விளக்கம் தர வேண்டும் என்று அந்த மாணவி கேட்டாள்.

நான் அதற்கு பதில் அளிக்கும்போது "என்ஜினீயரிங் படித்தால் உடனே வேலை கிடைக்கும் என்று உங்களது பெற்றோர் நினைப்பது சரிதான். ஆனால் சாதிக்க முடியாது. ஆனால் மாணவ-மாணவிகள் விரும்பும் பாடத்தை படித்தால் சாதனை புரியலாம்'' என்றேன்.

அப்போது அந்த கூட்டத்தில் இருந்த அந்த மாணவியின் பெற்றோரும் மாணவியின் விருப்பப்படியே படிக்க விட்டு விடுவதாக'' கூறினார்கள் என்றார் அவர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: