மத்திய தரைக்கடல் பகுதியில் ஈரான் போர்க்கப்பல்கள்: போர் மூளும் அபாயம்


ஈரான் நாட்டைச் சேர்ந்த போர்க்கப்பல்கள் சூயஸ் கால்வாயைக் கடந்து மத்திய தரைக் கடல் பகுதிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து ஈரான், இஸ்ரேல் இடையேயான பதட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு, மத்திய ஆசியாவில் பனிப் போரை உருவாக்கும் என பிரிட்டன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக் எச்சரித்துள்ளார்.
இந்தியா, தாய்லாந்தில் சமீபத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்கள் ஜார்ஜியாவில் தாக்குதலுக்கான முயற்சி ஆகியவற்றின் பின்னணியில் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் ஈரானின் ஐ.ஆர்.என்.ஏ செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தியில், அந்நாட்டின் ஷாகித் காண்டி மற்றும் கார்க் ஆகிய போர்க் கப்பல்கள் சூயஸ் கால்வாயைக் கடந்து மத்திய தரைக் கடலுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய கடற்படைத் தளபதி ஹபீபுல்லா சயாரி இது குறித்துக் கூறுகையில், கடந்த 1979ம் ஆண்டில் ஈரானில் நிகழ்ந்த இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் இரண்டாவது முறையாக ஈரான் போர்க் கப்பல்கள், மத்திய தரைக் கடலுக்குச் சென்றுள்ளன. இந்த நடவடிக்கை அண்டை நாடுகளுக்கு ஈரானின் வலிமை, நட்பு மற்றும் அமைதி விருப்பத்தை வெளிக்காட்டும் என்றார்.
எனினும் எத்தனை கப்பல்கள் மத்திய தரைக் கடலுக்குச் சென்றுள்ளன என்பது பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. இந்நிலையில் ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு குறித்து நேற்று பேட்டியளித்த பிரிட்டன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக், ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கத் தொடங்கினால் மத்திய ஆசியாவில் பிற நாடுகளும் அதற்கு ஆசைப்படும். இதனால் அந்த மண்டலத்தில் பனிப் போர் ஏற்படும் என்றார்.
இதற்கிடையில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நேற்று பேட்டியளித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா, ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடக் கூடாது. அதை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது.
ஹோர்முஸ் நீரிணை சர்வதேசத்திற்கு உரியது. அதை மூடுவதற்கு ஈரான் முயன்றால் அதைத் தடுக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்துவது குறித்து அமெரிக்கா ஆலோசிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: