சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு தமிழக அரசு ஆதரவாக உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.திமுக பொருளாளர் முக ஸ்டாலினின் 60வது பிறந்தநாளையொட்டி ராயப்பேட்டையில் நடந்த தென் சென்னை திமுகவினர் சார்பில் ரூ. 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு தன் கையால் உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது,
திமுக ஆட்சியில் அங்கும், இங்குமாக மின் தட்டுப்பாடு இருந்ததை நான் மறுக்கவில்லை. ஆனால் மின் தட்டுப்பாடு பிரச்சனையை தீர்க்க டெல்லிக்கு அலைந்து பல மாநில அரசுகளுடன் பேசி மின்சாரம் வாங்கி அதை தமிழகத்திற்கு கொண்டு வந்து மக்களை நிம்மதியாக இருக்கச் செய்தோம்.
ஆனால் இன்று அப்படி இல்லை. கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் காரியம் அல்லவா இங்கு நடக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1000 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் அந்த அணுமின் நிலையத்தை மூடக்கோரி போராட்டம் நடத்துபவர்களுக்கு தமிழக அரசு ஆதரவாக உள்ளது.
கூடங்குளத்தில் போராட்டக்காரர்களை அரசு தூண்டிவிடுகிறதா அல்லது பின்னால் இருந்து கொண்டு உதவி செய்கிறதா என்றால் அதற்கு பதில் இல்லை. அவர்கள் மௌனம் சாதித்தாலும் உலகம் அதை உணர்ந்து கொண்டிருக்கிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை கடந்த 8 மாதமாக இயங்க வைத்திருந்தால் இந்நேரம் இருள் அகன்றிருக்கும். அனைவருக்கும் மின்சாரம் கிடைத்திருக்கும். கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் இதுவரை எந்த ஆபத்தாவது ஏற்பட்டதுண்டா? இல்லையே. அப்படி இருக்கையில் கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அரசு ஏன் மறைமுகமாக ஆதரவளித்து வருகிறது என்பது புரியாத புதிராக உள்ளது.
எத்தைனையோ குழுக்கள் அமைத்து அவை கூடங்குளத்தில் ஆய்வு நடத்தி கூறியதையெல்லாம் கேட்க போராட்டக் குழுவினர் தயாராக இல்லை. இந்நிலையில் தமிழக அரசு 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்த குழு தனது ஆய்வறிக்கையை நேற்று சமர்பித்தது. அதன் பிறது கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால் இதுவரை நடத்ததின் ரகசியம் தான் என்ன என்றார்.