தடையில்லா மின்சாரம் கிடைக்க அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்-ஜெ.

Jayalalitha சென்னை: மின்வாரியம் அறிவித்துள்ள மின்வெட்டு காரணமாக பத்து மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதற்காக அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளுக்கு அரசு ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்தித் தரும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

புதிய மின்வெட்டுத் திட்டத்தை .தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. இது நாளை முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு எடுக்காத காரணத்தால், தமிழ்நாடு தற்போது மின் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. ஐந்து ஆண்டு கால தி.மு.க. ஆட்சி காலத்தில் 206 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கூடுதலாக ஏற்படுத்தப்பட்டது.

என்னுடைய முந்தைய ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மின் உற்பத்தித் திட்டங்களைக் கூட முந்தைய தி.மு.க. அரசு செயல்படுத்த தவறிவிட்டது. மேலும், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களும் உரிய காலத்தில் முடிக்கப்படாததால், நமக்குத் தேவையான மின்சாரம் கிடைக்கப் பெறவில்லை.

முந்தைய தி.மு.க. அரசு அன்றாடம் வெளிச் சந்தையிலிருந்து மின்சாரம் வாங்குவதையே வழக்கமாக கொண்டிருந்தது. எனவே, நீண்டகால மின்சார கொள்முதலுக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தினை பெற இயலவில்லை.

இது தவிர, மின் கடத்தும் மின் தொடர் அமைப்பில், அதாவது, மின் தொடர் நெருக்கடி உள்ளதன் காரணமாக, வெளி மாநிலங்களிலிருந்து தேவையான மின்சாரம் பெற இயலவில்லை. உதாரணமாக, குஜராத் மாநிலத்திலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் பெறுவதற்கான ஒரு ஒப்பந்தம் தற்போது நடைமுறையில் இருந்தாலும், தற்போதுள்ள மின் தொடர் நெருக்கடியின் விளைவாக, அதிலிருந்து தற்போது 235 மெகாவாட் அளவிற்கே மின்சாரம் பெற இயலுகிறது. இதன் விளைவாக, மின் இருப்புக்கும், மின் தேவைக்கும் இடையேயான இடைவெளி அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின் பற்றாக்குறை குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் 17.2.2012 மற்றும் 23.2.2012 ஆகிய நாட்களில் நான் விரிவாக ஆய்வு நடத்தினேன். தமிழ்நாட்டில் தற்போது மின் தேவையின் அளவு 11,500 முதல் 12,500 மெகாவாட் என்று உள்ள நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி நிலையங்கள், மத்திய மின் தொகுப்பு மற்றும் இதர இனங்களிலிருந்து பெறப்படும் மின்சாரம் 8,500 மெகாவாட் என்ற அளவில் தான் உள்ளது.

அதாவது, 3000 முதல் 4,000 மெகாவாட் வரை மின் பற்றாக்குறை உள்ளது. எனவே, கிடைக்கப் பெறும் மின்சாரம் குறையும் போது, அறிவித்ததற்கும் மேலான மின்வெட்டு தவிர்க்க இயலாததாகிறது என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு முறையாக அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தி உள்ளேன்.

தற்போதுள்ள இக்கட்டான மின் நிலைமையை சமாளிக்கும் வகையிலும், தொழில் துறையினர் மற்றும் நுகர்வோர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்த உள்ள மின் விநியோக கட்டுப்பாட்டு முறைகளை 25.2.2012 அன்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தால் செயல்படுத்த உள்ள இந்த மின்வெட்டு காரணமாக, பொதுத் தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதால், அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கு மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், அவ்வாறு இயலாத சூழ்நிலையில், மின்வெட்டு உள்ள நேரங்களிலும், தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும் வகையில், அரசே ஜெனரேட்டர்களை வாடகைக்கு பெற்று வழங்கும். ஜெனரேட்டர்களை இயக்குவதற்கான டீசல் உட்பட அனைத்துச் செலவையும் அரசே ஏற்கும்.

இதே போன்று அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இயக்கிக் கொள்ளலாம். அதற்கு ஏற்படும் கூடுதல் செலவினை அரசு அவர்களுக்கு ஈடு செய்யும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: