ரேஷன் கார்டை இன்னும் புதுப்பிக்கலையா?

சென்னை: ரேஷன் கார்டுகளை புதுப்பிக்க நாளை தான் கடைசி நாள். அதற்குள் புதுப்பிக்காவிட்டால் வரும் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாது.

இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்கு பதில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படவிருக்கிறது. இதற்காக குடும்ப உறுப்பினர்களின் கைரேகை, கண்விழி பதிவுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு தயாரிக்கப்படுகிறது. அதுவரை பழைய ரேஷன் கார்டுகளை ரேஷன் கடைகளில் கொடுத்து அதில் இணைப்புத் தாள் ஒட்டி ஒரு ஆண்டுக்கு புதுப்பித்துக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதற்காக 2 மாத அவகாசம் கொடுத்திருந்தது. அந்த அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில் 11 லட்சம் கார்டுகள் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் புதுப்பிக்கப்படாத கார்டுகள் ரத்து செய்யப்படும் என்றும், வரும் மார்ச் 1ம் தேதி முதல் அந்த கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது,

தமிழகத்தில் 1,97,70,682 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் 1 கோடியே 86 லட்சம் பேர் ரேஷன் கார்டுகளை புதுப்பித்துள்ளனர். ஆனால் மீதமுள்ள சுமார் 11 லட்சம் பேர் கார்டுகளை புதுப்பிக்கவில்லை.

நாளைக்குள் அவர்கள் ரேஷன் கார்டுகளை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது. கார்டுகளை புதுப்பிக்காதவர்கள் அந்தந்த உதவி ஆணையர் அலுவலகங்களுக்கு சென்று அதற்கான காரணத்தைக் கூறிவிட்டு புதுப்பித்துக் கொள்ளலாம். அவர்கள் தெரிவிக்கும் காரணங்கள் திருப்தியளிப்பதாக இருக்க வேண்டும். புதுப்பிக்காத ரேஷன் கார்டுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: