ஜெயேந்திரர் ஆட்கள் மிரட்டுகின்றனர்: சாட்சி புகார் !


காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு எதிராக அரசு சாட்சியாக உள்ள ஆடிட்டர் ராதாகிருஷ்ணன், தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதால் பாதுகாப்பு அளிக்கக் கோரி சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை, மந்தைவெளி, வடக்கு முதல் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் இவர் முக்கிய அரசு தரப்பு சாட்சியாவார். இவர்,
சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

"கடந்த 2002ம் ஆண்டு செப். 20ம் தேதி, என் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்தவர்களையும், ராதாகிருஷ்ணனாகிய என்னையும் கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். இதுகுறித்து, பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை மெதுவாக நடந்து வந்தது.
இந்நிலையில், 2004ம் ஆண்டு, காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வழக்கு விசாரணை, சிறப்பு புலனாய்வுப் பிரிவிற்கு மாற்றப்பட்டது. அந்த சம்பவத்தில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு தொடர்பிருப்பதாக தெரிய வந்ததையடுத்து, அவர், சுந்தரேச அய்யர், அப்பு, ரவி சுப்ரமணியம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு தொடர்பாக, 600 பக்க குற்றப் பத்திரிகையை சென்னை, கூடுதல் செசன்ஸ் நீதிபதி முன் விசாரணை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, வரும் 20ம் தேதி முதல் துவங்குகிறது. இதில், அரசு தரப்பில் சாட்சியான என்னை, வரும் 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் வந்துள்ளது. இந்நிலையில், தற்போது என் வீட்டைச் சுற்றி, சங்கர மடத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத பலர் கண்காணித்து வருகின்றனர். அவர்கள், என்னை சமாதானப்படுத்தி, ஆசை வார்த்தை மூலம் என்னை, எதிரான சாட்சி சொல்ல விடாமல் செய்ய முயற்சித்தனர்.

அதற்கு நான் ஒப்புக் கொள்ளாத நிலையில், காஞ்சி ஆச்சார்யாருக்கு எதிராக சாட்சி மற்றும் ஆதாரங்கள் தரக்கூடாது; மீறி தந்தால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என, மிரட்டி வருகின்றனர். இதன் பின்னணியில், காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளதாக அறிகிறேன்.

அவர், பல்வேறு ஆட்களை அனுப்பி, என்னை சாட்சியளிப்பதில் இருந்து பின்வாங்க வைக்க முயற்சி செய்து வருகிறார். ரவுடிகளும், சமூக விரோதிகளும் என் வீட்டைச் சுற்றி அவ்வப்போது வந்து செல்கின்றனர். அவர்கள், என்னுடைய நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
உள்ளூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. எந்த நேரமும் எனது உயிருக்கு ஆபத்து நேரலாம் என்பதால், தேவையான நடவடிக்கை எடுத்து எனக்கும், என் குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்."
மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள இப்புகார் மனு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: