தேங்காய் பறிப்பை மதிப்புமிக்க தொழிலாக மாற்றிய வாலிபர்: கார், மொபைல்போன், பிரத்யேக வெப்சைட் என அசத்துகிறார்


திருவனந்தபுரம்:கேரளாவில் தென்னை மரம் ஏறி, தேங்காய் பறிக்க ஆட்கள் கிடைக்காத நிலையில், இளைஞர் ஒருவர், அதை உயர் தொழில்நுட்ப வேலை போல செய்து வருகிறார். கார், மொபைல்போன் மற்றும் பிரத்யேக வெப்சைட் என, அசத்தி வருகிறார்.

கேரள மாநிலத்தில் தென்னை மரங்கள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. ஆனால், மரத்தின் மீதேறி, தேங்காய் பறித்துப்போட ஆட்கள் கிடைப்பதுதான் குதிரை கொம்பாகி விட்டது.

கவுரவமான வேலை :தேங்காய் பறித்துப் போடுவதை, கேரள இளைஞர்கள் பலர், மதிப்புக் குறைவான வேலையாக நினைக்கும் நேரத்தில், கோட்டயம் மாவட்டம் செங்கணாசேரி பகுதியைச் சேர்ந்த செல்வின் சாக்கோ, 37, என்பவர், அதை கவுரவமான வேலையாக நினைத்து செய்வதோடு, சந்தோஷமாகவும் செய்து வருகிறார். காலமாற்றத்திற்கு ஏற்ப, வாடிக்கையாளர்கள் தன்னை எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக, மொபைல்போன் மற்றும் வெப்சைட் போன்ற வசதிகளையும் பயன்படுத்தி வருகிறார். மேலும், தேங்காய் பறிக்க எங்கு சென்றாலும், காரில்தான் செல்கிறார். இதனால், தனக்கு நேரம் மிச்சமாகிறது என்றும் கூறுகிறார்.

இதுதொடர்பாக, செல்வின் சாக்கோ கூறியதாவது:

கடனில் சிக்கினேன் : முதலில் பஸ் கண்டக்டராகப் பணியாற்றினேன். பிறகு இரு பஸ்களை வாங்கி இயக்கினேன். பஸ் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடனில் சிக்கினேன். பல நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு வேலை கேட்டேன். அதிலும் பயனில்லை. இறுதியில் நிலையான வருமானம் தரும் வேலை ஒன்றைச் செய்ய முடிவு செய்தேன். பல தேடுதல்களுக்குப் பிறகு, தேங்காய் பறிப்பு, நல்ல வருமானம் தரும் தொழில் என முடிவு செய்தேன். கோட்டயம் குமரகம் அருகே, "கிரிஷி விஞ்ஞான் கேந்திரா' என்ற அமைப்பு அளித்த, தேங்காய் மரம் ஏறும் பயிற்சியில் பங்கேற்று, மரம் ஏறுவதில் தேர்ச்சி பெற்றேன். தற்போது, எனக்கு தேங்காய் பறிக்க வரும்படி தினமும் 100க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.

மாதம் ரூ.30 ஆயிரம்:மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தினமும் என்னை ஏராளமானோர் அணுகுகின்றனர். நான் தினமும் 40 முதல் 45 மரங்கள் ஏறி வருகிறேன். இதன் மூலம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறேன். "சங்காதி கூட்டம்' என்ற பெயரில் வெப்சைட் ஒன்றைத் துவக்கி, அதில், என்னுடைய மொபைல்போன் நம்பர் மற்றும் என்னைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டுள்ளேன்.

பெட்ரோல் செலவு :தேங்காய் பறிப்பதற்கு உரிய கூலியைப் பெற்று விடுவதோடு, மாவட்டத்தை விட்டு வெளியே சென்றால், காரின் பெட்ரோலுக்குரிய செலவையும் சேர்த்து வாங்கி விடுவேன். தேங்காய் பறிப்பு தொழிலில் நான் இறங்கிய போது, என் குடும்பத்தினரும், சமூகத்தினரும் நான் அவர்களை அவமானப்படுத்திவிட்டதாகக் கூச்சலிட்டனர். இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றவர்களோ, நான் குறைவான கூலி வாங்குவதாக விமர்சித்தனர். இவ்வாறு செல்வின் சாக்கோ கூறினார்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: