புதுடில்லி : தலைநகர் டில்லியில், இந்திய ராணுவப் படையின் பாராசூட் மற்றும் கவச வாகனப்படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக முன்னணி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக்கு, பிரதமர் மன்மோகன் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.ராணுவ தளபதி வி கே சிங் வயது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்த நேரத்தில் மத்திய அரசை மிரட்டுவதற்காக, தலைநகர் டில்லி அருகே ராணுவ படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டதாக முன்னணி பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அணுஆயுத நீர்மூழ்கி கப்பலான ஐ. என்.எஸ். சக்ரா முறைப்படி இன்று இந்திய கப்பற்படையில் இணைக்கப்பட்டது. அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ கே அந்தோணி கூறியதாவது, அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் சிறிதளவும் உண்மையில்லை என்றும், நாட்டில் ஜனநாயக முறைப்படியே அனைத்து செயல்பாடுகளும் நடைபெற்று வருவதாக கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, இந்த விவகாரம் தொடர்பாக நான் ஏற்கனவே பதிலளித்து விட்டேன். தலைநகர் டில்லி அருகே, இந்திய ராணுவப்படையின் பாராசூட் மற்றும் கவச வாகனப் படைகள் வந்து பயிற்சி மேற்கொள்வது சாதாரணமாக நடைபெற்று வரும் நிகழ்வேயன்றி, மத்திய அரசை மிரட்ட இவ்வாறு டில்லியில் படைகள் குவிக்கப்பட்டிருப்பதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குரியது. பனி நிறைந்த நாட்களில், படைகளை வேகமாக இடம் நகர்த்துவதற்கான பயிற்சிக்காகவே, இப்படைகள் டில்லி அருகே கொண்டுவரப்பட்டதேயன்றி, இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று அவர் கூறினார்.
மனதுக்கு வேதனை : அந்நிய சக்திகளிடமிருந்து இந்திய நாட்டைக் காப்பதில் ராணுவம், கப்பற்படை, விமானப்படை வீரர்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற செய்தி வெளிவருவது மனதுக்கு வேதனையளிக்கிறது. அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி ஆதாரமற்றது என்று மீண்டும் கூறிக்கொள்வதாக அவர் கூறினார்.
பிரதமர் மறுப்பு : பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி திரித்து எழுதப்பட்டுள்ளதாகவும், இதற்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்க வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். ராணுவதளபதி சர்ச்சை தொடர்பாக பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது, நாட்டிலேயே மிகவும் பெருமைமிக்க அலுவலமாக ராணுவ தளபதி அலுவலகம் உள்ளது. இங்கு, நாட்டிற்கு கவுரவத்தை சீர்குலைக்கும் எவ்வித செயல்களும் நடைபெறவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்வதாக என்று அவர் கூறியுள்ளார்.