நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த கீழப்பாவூரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். அவருடைய மகன் கதிரேசன் (23). பால் வியாபாரம் செய்து வந்தார். அவர் அதே பகுதி படையாச்சி தெருவைச் சேர்ந்த கணபதி என்பவருடைய மகள் ஜெயலட்சுமியை காதலித்து வந்தார். இவர் கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
ஜெயலட்சுமி கல்லூரிக்கு சென்று வரும்போது கதிரேசன் அவரை ரகசியமாக சந்தித்து பேசி வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்தனர்.
பணத்தேவைக்கு சங்கிலி
இந்த நிலையில் கதிரேசன் தொழில் தொடங்குவதற்கு பணம் தேவைப்பட்டது. இது குறித்து ஜெயலட்சுமியிடம் கூறியுள்ளார். இதற்கு தன்னுடைய தங்கச் சங்கிலியை ஜெயலட்சுமி கழற்றிக் கொடுத்து, அதை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். காதலனிடம் நகையை கொடுத்ததை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்து இருந்தார். ஆனால் கதிரேசனுக்கு நகையை கொடுத்ததை அறிந்த ஜெயலட்சுமியின் பெற்றோர்கள், தனது மகள் கல்லூரிக்குச் சென்றபோது நகையை அபகரித்துக் கொண்டதாக பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் கதிரேசன் மீது புகார் செய்தனர்.
ஒரே நாளில் தற்கொலை
போலீசார் தன்னை தேடுவதை அறிந்து கதிரேசன் போலீசிடம் பிடிபட்டு விடுவோமோ என்று பயந்து கடந்த சனிக்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமியும் விஷம் குடித்தார். பின்னர் எங்கே தன்னை காப்பாற்றி விடுவார்களோ என்று நினைத்து, வீட்டு உத்திரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரே நாளில் கல்லூரி மாணவியும், அவருடைய காதலரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து சாவில் இணைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாவூர்சத்திரம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.