புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கில் வழக்கறிஞர்களின் வாதம் இன்று தொடங்கவுள்ளது.காஞ்சி சங்கரமட மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ராமசாமியுடன் ஜெயேந்திரர் பேரம் பேசிய சிடி வெளியானதையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டு, வழக்கை நீதிபதி சி.எஸ்.முருகன் விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர், சங்கரமட மேலாளர் சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன் உள்பட 21 பேர் ஆஜரானார்கள். ரஜினிகாந்த், 'தில்' பாண்டியன், அருண் ஆகியோர் ஆஜராகவில்லை.
வழக்கு விசாரணை காலை 11.10 மணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிமன்றத்தில் சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் அமர வைக்கப்பட்டனர். மற்றவர்கள் நின்று கொண்டிருந்தனர்.
வழக்கு விசாரணையின்போது பத்திரிகையாளர்கள், வழக்குக்கு தொடர்புடையவர்கள் தவிர அனைவரையும் வெளியேற்ற நீதிபதி உத்தரவிட்டார். அதன்பின் வழக்கு விசாரணை நடந்தது.
சங்கராச்சாரியார்கள் தரப்பில் வெங்கட சுப்ரமணியம், லட்சுமண ரெட்டியார் உள்பட மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராயினர்.
விசாரணை 12.15 மணி வரை நடந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞரின் விளக்கம் நேற்றுடன் நிறைவுபெற்றது.
இதைத் தொடர்ந்து இன்றும் இந்த வழக்கு விசாரணை மீண்டும் நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார். இன்று வழக்கறிஞர்கள் விவாதம் தொடங்குகிறது. விவாதம் முடிந்த பின் விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இன்று நடக்கும் விசாரணையில் நேரில் ஆஜராவதில் இருந்து ஜெயேந்திரருக்கும், விஜயேந்திரருக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.