ஒடிசாவில் மாவோயிஸ்ட் அமைப்பின் ஒரு பிரிவினர், இத்தாலிய சுற்றுலா பயணி பாவ்லோ பாசஸ்கோவையும், மற்றொரு பிரிவினர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆளும் பிஜு ஜனதா தளம் எம்.எல்.ஏ., ஜினா ஹிகாகாவையும் கடத்தியுள்ளனர். அவர்கள் இருவரையும் விடுவிக்க, ஒடிசா மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், மாவோயிஸ்ட்கள் தங்களின் முடிவையும், நிபந்தனைகளையும் அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதால், இருவரையும் விடுவிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
ரூ.10 லட்சம் பரிசு :எம்.எல்.ஏ.,வை கடத்திய மாவோயிஸ்ட் பிரிவினர், சிறையில் இருக்கும் படுபயங்கர நக்சலைட்டான சென்டா பூசனம் என்ற காசி உட்பட 30 மாவோயிஸ்ட்களை விடுவிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். அவர் கூறும் 30 பேரில், காசி என்பவர், பாலிமேடு நீர்த்தேக்கம் அருகே ஆலம்பாகா என்ற இடத்தில், மாவோயிஸ்ட்கள் நடத்திய படுபயங்கர தாக்குதலில், 38 போலீசார் பலியாகக் காரணமாக இருந்தவர். அந்த சம்பவத்தில் முக்கிய மூளையாகச் செயல்பட்டவர். இது தவிர, மால்கான்கிரி மாவட்டம் கலிமேலா என்ற இடத்தில் நிகழ்ந்த கண்ணி வெடி தாக்குதலில், 17 போலீசார் சாவதற்கு காரணமானவர். இவர் மீது ஆந்திராவிலும் 35க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஆந்திர மாநில அரசு, காசியின் தலைக்கு 10 லட்சம் ரூபாய் பரிசும் அறிவித்திருந்தது.
அரசு தயக்கம் :இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி, செமிலிகுடா என்ற இடத்தில், காசியை ஒடிசா மாநில போலீசார் கைது செய்தனர். தற்போது கோராபுட் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரையும், மற்றவர்களுடன் சேர்த்து விடுவிக்க வேண்டும் என, மாவோயிஸ்ட்கள் நிபந்தனை விதித்துள்ளனர். பல கொடூரமான தாக்குதல் சம்பவங்களுக்கு காரணமான காசியை விடுவிக்கும்படி, மாவோயிஸ்ட்கள் நிபந்தனை விதிப்பதால், ஒடிசா மாநில அரசு மிகுந்த தயக்கம் காட்டி வருகிறது. அதனால், "எம்.எல்.ஏ.,வை கடத்தியவர்களின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றலாமா என, மாநில போலீசாரின் கருத்தை அரசு கேட்டுள்ளது' என, ஒடிசா மாநில தலைமைச் செயலர் பட்நாயக் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், எந்த முடிவும் எடுக்கப்படும் முன், சட்ட ரீதியான அம்சங்களும் பரிசீலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
போர்க்கொடி:இதற்கிடையில், சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட்களை விடுவிப்பது என, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் எடுத்துள்ள முடிவால், போலீசார் அதிருப்தி அடைந்துள்ளனர். இது தொடர்பாக ஒடிசா போலீஸ் சங்கத்தினர் கூறுகையில், "கொடூர தாக்குதல்களில் ஈடுபட்ட மாவோயிஸ்ட்களை, மாநில அரசு விடுவிக்கக் கூடாது. அப்படி விடுவித்தால், மாவோயிஸ்ட் வன்முறையால் பாதித்த பகுதிகளில், போலீசார் வேலை செய்ய மாட்டார்கள்; பணியை புறக்கணிப்பர். மாவோயிஸ்ட்களை விடுவித்தால், போலீசாரின் நேர்மையான செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும்' எனக் கூறியுள்ளனர்.