18 ஆண்டுகள் பாலைவன வாழ்க்கைக்கு விடை கொடுத்த பெரியசாமி! – மனைவி மறுமணம் புரிந்தது கூடத் தெரியாது !



பெரியசாமிரியாத்:தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் 
மங்கலமேடு தாலுக்காவில் உள்ள காரைக்குடி 
கிராமம். இக்கிராம மக்கள் மகிழ்ச்சியில் 
ஆழ்ந்துள்ளனர். இவ்வளவு காலம் மரணித்துவிட்டார்
 என்று கருதிய பெரியசாமி 18 ஆண்டுகளுக்கு பிறகு ஊர்
 திரும்ப உள்ளார். ஆனால், மரணித்துவிட்டார் என்று
 ஊராரும், உற்றாரும் கூறிய வேளையிலும் உலகத்தின்
 ஏதோ ஒரு மூலையில் தனது அன்பிற்குரிய மகன்
 உயிரோடு இருப்பான் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வந்தார் பெரியசாமியின்
தாயார் அலமேலு.
மகன் திரும்பி வருகிறார் என்ற செய்தியை கேட்டவுடன் அலமேலுவுக்கு மகிழ்ச்சியில்
 தலை, கால் புரியவில்லை. திருமணம் முடிந்து 5 மாதங்கள் கழிந்தவுடன் 1993-ஆம் ஆண்டு
 சவூதி அரேபியாவிற்கு வேலைக்காக பயணமானார் பெரியசாமி.
சவூதி அரேபியாவின் ஹைல் என்ற பகுதியில்  இருந்து  220 கி.மீ தொலைவில்
 உள்ள பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் பணியில் சேர்த்து விடப்பட்ட பிறகு ஒரு
 முறை கூட பெரியசாமிக்கு ஊருக்கு செல்ல அனுமதிக்காத 70 வயதான ஸ்பான்சர் 
18 ஆண்டுகள் அடிமையைப் போல வேலையை வாங்கியுள்ளார். பெரியசாமிக்கு
 முதல் 2 மாதங்கள் மட்டுமே சம்பளம் கிடைத்தது. 800 ரியால் ஊருக்கு அனுப்ப கூட 
இயலாமல் ஒட்டகங்களுக்கும், ஆடுகளுக்கும் இடையில் பெரியசாமியின் வாழ்க்கை
 அமைந்தது. பல தடவை ஓடி தப்பிவிடலாம் என முயற்சித்த பெரியசாமி, 
பாலைவனத்தில் திசை தெரியாமல் குடிப்பதற்கு வெள்ளம் கூட கிடைக்காமல்
 மரணித்து விடுவோம் என அஞ்சி அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.
 தற்கொலைச் செய்துவிடலாம் என்று கூட பெரியசாமி சிந்துத்துள்ளார்.
ஒரு மாதம் முன்பு ஸ்பான்சரை தேடி பாலைவனத்திற்கு வந்த சவூதி இளைஞர்
 ஒருவர் பெரியசாமியின் வாழ்க்கையில் திருப்புமுனைக்கு காரணமானார். அவரிடம்
 தனது வாழ்க்கையின் துயரங்களை பெரியசாமி பகிர்ந்து கொண்டுள்ளார். இதனைத்
 தொடர்ந்து அந்த சவூதி இளைஞர் இச்சம்பவம் குறித்து ஹைல்
 போலீசாருக்கு தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் பாலைவனத்திற்கு வந்து 
பெரியசாமியை மீட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் உள்ள தீவிரத்தன்மையை உணர்ந்து மனித உரிமை அமைப்பு 
தனிக்குழுவை  ஹைல் போலீஸ் ஸ்டேசனுக்கு அனுப்பி விசாரணை நடத்த 
நியமித்துள்ளது. சட்ட நடவடிக்கைகளை சந்திக்காமல் இருக்க ஸ்பான்சர் 
பெரியசாமியை பல வருடங்களுக்கு முன்பே ஹுரூப்(தலைமறைவானவர்) 
ஆக்கியுள்ளார். இதனை ஹைல் ஜவாஸத் இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளது. 
ஹைல் ஆளுநர் சவூத் பின் அப்துல் முஹ்ஸின் பின் அப்துல் அஸீஸ் ஸ்பான்சரை 
கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் பெரியசாமிக்கு இவ்வளவு நாள் வேலைப் 
பார்த்த சம்பளத்தை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். ஆனால், தன்னிடம் பணம் எதுவும்
 இல்லை என்றும், சம்பள பாக்கியை அளிக்க இயலாது என்றும் ஸ்பான்சர் வாதிட்ட
 பிறகும் ஆளுநர் அதனை அங்கீகரிக்கவில்லை. பின்னர் ஸ்பான்சரின் உற்றார்.
 உறவினர்கள் வசூல் செய்து 82,500 ரியால் பணத்தை அளித்தனர்.
ஜித்தாவில் இந்திய தூதரக அதிகாரிகள் சமூக ஆர்வலர்களின் உதவியுடன் பெரியசாமியின்
 ஊரில் தகவல்களை சேகரித்து காரைக்குடி கிராமத்தில் உள்ள சகோதரன்
 கண்ணப்பனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். நீண்ட பல ஆண்டுகள் ]
அரபி அல்லாத வேறு எந்த மொழியும் பேசாததால் தமிழ் மொழியை மறந்துபோன 
பெரியசாமி நேற்று தனது சகோதரர் கண்ணப்பனுடன் பேசுகையில் வார்த்தைகள்
 கிடைக்காமல் தடுமாறினார்.
தந்தை பொன்னுசாமி இறந்துபோன சம்பவமும், தன்னை குறித்து அழுது வாழும்
 தாயைக் குறித்தும் தகவல்களை கேட்டு விதும்பி அழுத பெரியசாமியை ஆறுதல்
 படுத்த அதிகாரிகளுக்கு அதிக நேரம் பிடித்தது.
கண்ணப்பனை தவிர, துபாயில் வேலை பார்க்கும் திருநாவுக்கரசு, சென்னையில் 
பணியாற்றும் விஜயகுமார் ஆகிய இரண்டு சகோதரர்கள் பெரியசாமிக்கு உள்ளனர்.
17 ஆண்டுகளாக இவருக்காக காத்திருந்த மனைவி கடந்த ஆண்டு
 உறவினர்களின் வற்புறுத்தலுக்கு ஏற்ப இன்னொரு நபரை திருமணம் புரிந்துள்ளார்.
பெரியசாமியை 2 தினங்களுக்குள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்போம்
 என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: