டெல்லி: 5,000 கிமீ வரை சென்று கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அக்னி V ஏவுகணை ஒரிசாவின் வீலர் தீவில் இன்று சோதிக்கப்படுகிறது.
ஒரிசா மாநிலம் சண்டிப்பூர் பாதுகாப்புத் தளப் பகுதியிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள வீலர் தீவு ஏவுதளத்தில் இருந்து அக்னி V ஏவுகணை இன்று சோதனை செய்யப்படுகிறது. இந்த ஏவுகணை 5,000 கிமீ வரை சென்று கண்டம் விட்டு கண்டம் தாக்கக்கூடிய திறன் வாய்ந்தது.
இந்த சோதனையின்போது இராணுவ அதிகாரிகளும், ஏவுகணையை உருவாக்க உதவியாக இருந்த பிற ஏஜென்சிகளும் அங்கு இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் மட்டும் தான் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தகக்து.
அடுத்த ஓராண்டில் இதுபோன்ற மேலும் சில சோதனைகளை செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 3,500 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் அக்னி 4 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அக்னி V ஏவுகணை 3 அடுக்குகளைக் கொண்டது, அதன் உயரம் 17 மீட்டர் ஆகும்.