தமிழ்நாடு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், சட்ட மேதை அம்பேத்கரின் 121வது பிறந்தநாள் விழா, அந்த சங்கத்தின் தலைவர் உதயபானு தலைமையில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.
அதில் பேசுய இக்பால், மும்பையில் உள்ள தனது வீட்டில் 50,000க்கும் மேற்பட்ட நூல்களை அம்பேத்கர் வைத்திருந்தார். அவர் ஒரு தீவிர வாசிப்பாளராக இருந்ததையே இது காட்டுகிறது. இத்தகைய வாசிப்பு பழக்கம்தான் அவரை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றது. அம்பேத்கரைப் போலவே இன்றைய வழக்கறிஞர்களும் வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நீதிமன்றத்துக்கு வெளியே எந்த அரசியல் கட்சியின் ஆதரவாளர்களாகவும் வழக்கறிஞர்கள் இருப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால், நீதிமன்ற வளாகத்தினுள் அரசியல் கட்சி சார்பற்றவர்களாக வழக்கறிஞர்கள் இருக்க வேண்டும். அவர்களுக்குள் அரசியல் கட்சிகளின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகள் இருக்குமானால், அது அவர்களுக்கும் நல்லதல்ல; இந்த நீதிமன்றத்துக்கும் நல்லதல்ல.
தான் படித்த வகுப்பறையில் சக மாணவர்களுக்கு இணையாக குடிநீர் அருந்தக்கூட இயலாத அளவுக்கு தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டவர் அம்பேத்கர். ஜாதியின் அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்தக் கூடாது என்ற கருத்தை சமூகம் சகித்துக் கொள்ளாத காலம் அது. இந்திய வரலாற்றில் அவையெல்லாம் கறுப்பு நாள்கள்.
அந்த சூழ்நிலை இன்று எவ்வளவோ மாறிவிட்டது. அந்த மாற்றத்தை ஏற்படுத்த தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை ஒன்று திரட்டி அம்பேத்கர் பல போராட்டங்களை நடத்தினார்.
தமிழகத்தில் பெரியாரின் அயராத உழைப்பின் காரணமாகத்தான் இன்று ஒரு சில குக்கிராமங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சாதி பாகுபாடு துடைத்தெறியப்பட்டது. பெரியாரின் குரலை அடுத்துதான், இடஒதுக்கீட்டு கொள்கையை தமிழக அரசு கடைபிடிக்கத் தொடங்கியது. தமிழகத்தில் இன்று பல்வேறு துறைகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் போன்ற சாதியினருக்கு வேலை கிடைப்பதற்கான வழியை அமைத்துக் கொடுத்தவர் பெரியார்தான்.
எனினும், இங்கு இன்னும் சில கிராமங்களில் இரட்டை டம்ளர் முறை தொடர்வது வேதனை அளிக்கிறது. இந்த பாகுபாடுகள் முற்றாகக் களையப்பட வேண்டும் என்றார் இக்பால்.