http://img.dinamalar.com/data/gallery/gallerye_231948842_376872.jpg


 ""துரோக கும்பலுக்கு மன்னிப்பே கிடையாது,'' என, அ.தி.மு.க., பொதுக்குழுவில் சூளுரைத்த முதல்வர் ஜெயலலிதா உடனடியாக, கட்சியில் துரோக கும்பலின் ஆதரவாளர்களை களையெடுக்கும் பணியையும் துவக்கி விட்டார். ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை அ.தி.மு.க.,வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு இனி நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. கோவையில் குடியிருந்தபடி அதிகார மையமாக செயல்பட்டு வந்த சசிகலாவின் நெருங்கிய உறவினரான ராவணன் மீது கடும் கோபத்தில் ஜெயலலிதா இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதை நிரூபிக்கும் வகையில், ராவணனுடன் நெருக்கமாக இருந்த பலர் மீதும், அடுத்தடுத்து நடவடிக்கைகள் பாய்கின்றன. கோவை, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் ராவணனின் ஆணைக்கேற்ப செயல்பட்டு, உண்மையான கட்சிக்காரர்களைக் கலங்கடித்த கோவை விஜயகுமார், ஈரோடு மோகன் உள்ளிட்ட பலரும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அசோகன், சீனிவாசன், ராஜமாணிக்கம், ஆசைத்தம்பி, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்மணி, லியோ உள்ளிட்ட எட்டு பேர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புடன், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் விஜயகுமார் தான், ராவணனுக்கு வலது கரமாக செயல்பட்டு, கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும், உத்தரவுகளை பிறப்பித்து வந்தவர். உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வில், இவரது ஆதிக்கம் அதிகம் என, அப்போதே புகார்கள் கிளம்பின. இவரது வீட்டின் மீது, தாக்குதலும் நடந்தது; கோமதி நாயகம் என்ற, தொண்டர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மோகன் பற்றியும், எக்கச்சக்கமான புகார்கள் வாசிக்கப்படுகின்றன. ராவணன் பெயரில், கொங்கு மண்டல அமைச்சர்களை, இவர் ஆட்டுவித்தார் என்பது முக்கிய குற்றச்சாட்டு. இவர்களை, கட்சியை விட்டு நீக்கியதை போல, ராவணனின் ஆதரவில் குறுக்கு வழியில் பதவி பெற்ற பலரையும், அந்தப் பதவிகளில் இருந்து இறக்க வேண்டுமென்ற கோரிக்கையும், வலுக்கத் துவங்கியுள்ளது. ராவணனின் சிபாரிசில் பதவி பெற்றவர்கள் பட்டியலில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என பலரும் இடம் பெறுகின்றனர். அதேபோல, எம்.எல்.ஏ., மற்றும் கவுன்சிலர்கள் பலரும், "சீட்' வாங்கியதன் பின்னணியையும், கட்சித் தலைமை விசாரிக்க வேண்டும் என்பதே, தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கோவை மாநகராட்சியில் முக்கியமான பதவியிலுள்ள ஒருவரும், ராவணனின் ஆதரவிலேயே அந்த பதவியைக் கைப்பற்றினர். நில அபகரிப்பு, போலி ஆவணம் தயாரித்தது என பல புகார்கள், அவர் மீதிருக்கும் நிலையில், அவருக்கு அந்த பதவி தரப்பட்டபோதே, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பிரபல லாட்டரி அதிபருக்கு, நிலங்களை வாங்கிக் கொடுத்து, அவருக்கு "பார்ட்னர்' ஆக செயல்பட்ட ஒருவருக்கும், கோவை மாநகராட்சியில் "மண்டல' பொறுப்பு தரப்பட்டது. இதற்காக, இவர்கள் ராவணனுக்கு செலுத்திய தொகை பற்றி, முன்னுக்குப் பின் முரணாக பல தகவல்கள் உலவுகின்றன. கட்சிக்கு தொடர்பில்லாமலும், கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்காமலும், ராவணனின் ஆதரவால் பதவி பெற்ற பலரும், இப்போது தங்கள் பதவிக்கு, எப்போது ஆபத்து வருமோ என்ற அச்சத்தில், கதி கலங்கிப் போயுள்ளனர். காலம் காலமாக, கட்சிக்கு விசுவாசமாக இருந்து, தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த பலரும், கட்சித் தலைமையின் அதிரடியில், ஆனந்தக் கூத்தாடுகின்றனர். மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் குறித்து உளவுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டசபை தேர்தலில் "சீட்' கேட்டு கிடைக்காதவர்களிடம், அதற்கான காரணங்கள்; வெற்றி வாய்ப்பு இருந்தும், மாவட்டத்தில் சில தொகுதிகள் கூட்டணிக்கு தாரைவார்க்கப்பட்டது குறித்து விசாரணை நடக்கிறது. ஒரு மாவட்ட நிர்வாகியின் சமீபகால நடவடிக்கைகள், தி.மு.க., ஆட்சியில் அவரது வளர்ச்சி, தி.மு.க.,வினருடன் உள்ள "உள்குத்து' குறித்தும் அலசப்படுகிறது. சட்டசபை தேர்தலின் போது, கொடைக்கானல் வந்த டாக்டர் வெங்கடேஷை, மாவட்ட நிர்வாகிகள் சிலர், "சீட்' கேட்டு சந்தித்தனர். இதுகுறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. பழைய விஷயங்களை, உளவுத் துறையினர் தோண்டுவதால், அ.தி.மு.க., நிர்வாகிகள் "கிலி'யில் உள்ளனர். அதிகார மையங்களால் ஓரங்கட்டப்பட்டவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமலர் 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: