சென்னை, டிச. 30- சென்னையில் நேற்று இரவு வீசிய சூறைக்காற்றில் 54 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த மரங்கள் அனைத்தும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன. பாண்டி பஜாரில் மரம் விழுந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் சேதம் அடைந்தது.
மயிலாப்பூர் இசபெல்லா ஆஸ்பத்திரி அருகில் வேரோடு மரம் சாய்ந்தது. வேளச்சேரி ராஜலட்சுமி நகர், சைதாப்பேட்டை சி.ஐ.டி. நகர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்தன. ஓட்டேரி, அண்ணா சாலை ஜிம்கானா கிளப் அருகில் ஆகிய 2 இடங்களில் மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால் அப்பகுதியில் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது.
சென்னையில் கடலோர பகுதிகளில் வசித்து வந்தவர்களில் 2,730 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் 10 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. 8 பள்ளிகள், 2 சமுதாய கூடங்களில் நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.
இவர்களுக்கு உணவு வழங்குவதற்காக 4 இடங்களில் சமையல் கூடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளவர்களுக்கு நேற்று மட்டும் 15 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்று காலையில் 9 ஆயிரத்து 500 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. 4 ஆயிரத்து 500 பிரட் பாக்கெட்டுகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள சுரங்க நடைபாதைகள் மற்றும் ரெயில்வே மேம்பாலங்களுக்கு அடியில் தேங்கும் தண்ணீரையும் மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றி வருகிறார்கள். மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் 88 பம்புகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழை வெள்ளம் தேங்கினால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல, 6 படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் இணைந்து நிவாரண ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர்.
maalaimalar.com