பீஜிங் : "சீனாவை அடக்கி வைப்பதற்காக இந்தியாவோடு உறவாடி வருகிறார் ஜப்பான் பிரதமர்' என சீனாவின் அதிகாரபூர்வ நாளிதழ் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளது. ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடா, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது குறித்து, சீனாவின் அதிகாரபூர்வ நாளிதழான "சைனா டெய்லி' யில் நிபுணர்கள் கூறியதாக எழுதப்பட்டிருப்பதாவது: ஆசிய பசிபிக் நாடுகளுடன் ஜப்பான் தனது உறவுகளை அதிகரித்து வருகிறது. இந்த நாடுகளுடனான பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகள் மூலம் சீனாவை கொஞ்சம் அடக்கி வைக்கலாம் என ஜப்பான் கருதுகிறது.இந்த அடிப்படையில் தான் ஜப்பான் பிரதமர் நோடா, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த இரு நாடுகளும், தங்கள் மண்டல ஒத்துழைப்பை பாதுகாப்பு ரீதியில் மட்டுமல்லாமல், வர்த்தக ரீதியிலும், சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. ஜப்பானின் இந்த ஒத்துழைப்பு இதுவரை, இரு முனை உறவாக இருந்து வந்தது. தற்போது, பலமுனை உறவாக அதாவது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா என பரிணமித்து வருகிறது.
சீனா அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்தியாவும், ஜப்பானும் கடந்த ஐந்தாண்டுகளில் தங்கள் உறவை, அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த உறவாக மாற்றி வருகின்றன. மேலும், வெளிநாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதி மீதான தடையை ஜப்பான் நீக்கியதும் சீனாவுக்கு மிகப் பெரிய ஆபத்தையே விளைவிக்கும். இதன் மூலம் ஜப்பான், தனது வான்வெளி மற்றும் கடற்படைகளின் வலுவை அதிகரிக்கும். உலகளவிலான ஆயுத ஏற்றுமதியை இந்த தடை நீக்கம் மாற்றிவிடும். ராணுவத் தளவாடங்களில் பயன்படுத்தப்படும் மின்னணுக் கருவிகள் உற்பத்தியில் ஜப்பான் கடும் போட்டியைத் தருவதால், ரஷ்யாவின் சந்தை பாதிக்கப்படும்.
தடை நீக்கத்திற்கு முன்பாக, அமெரிக்காவிடம் ஜப்பான் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். இதன் மூலம் இந்த இரு நாடுகளும், சந்தர்ப்பத்திற்கேற்ப, ஆசிய பசிபிக் நாடுகள் தொடர்பான தங்கள் கொள்கைகளை, பரஸ்பரம் அனுசரித்துக் கொள்ளும் என்பது புலப்படுகிறது. இது சீனாவுக்கு எதிர்மறையான விளைவுகளையே தரும். இவ்வாறு அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.