இனி தமிழ்நாட்டுக்கு வருவதற்கு மன்மோகன்சிங் ரொம்பவே யோசிப்பார். அவர் போகும் திசை எல்லாம் கறுப்புக் கொடியோடு வந்து 'வரவேற்பு’ கொடுத்த காட்சி தமிழக வரலாற்றில் அபூர்வமானது. நேரு பிரதமராக இருந்தபோது 'பிரிவினை கேட்பவர்கள்.......’ என்று ஒரு ஆங்கில வார்த்தையைச் சொல்லி விமர்சித்ததால், அவர் வருகையின்போது கறுப்புக் கொடி காட்டப்பட்டது. எமர்ஜென்சியைக் கொண்டு வந்ததால் இந்திராவுக்கு எதிராக கறுப்புக் கொடிப்போராட்டம் நடந்தது. இப்படி விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் சம்பவங்கள் நடந்துள் ளன. இதில், மன்மோகனும் சேர்ந்திருப்பது அவருக்கு ஏற்பட்ட சோகம்தான்!
'கணிதமேதை இராமானுஜத்தின் 125-வது பிறந்த நாள் விழாவுக்காக பிரதமர் தமிழகம் வருகிறார்’ என்ற அறிவிப்பு வெளியானதுமே எதிர்ப்புகள் கிளம்பின. 'முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து கறுப்புக் கொடி காட்டுவோம்’ என்று விஜயகாந்த் முதலில் அறிவிக்க... காரைக்குடி செல்லும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என்று வைகோ சொல்ல... சகல திசைகளில் இருந்தும் கண்டன ஏவுகனைகள் சீறிப் பறந்தன. ஆனால் எப்போதும் போல் அலட்டிக்கொள்ளாமல் வந்தார் என்றாலும், மக்களைப் பார்த்துக் கையசைக்கவும் முடியாத அளவுக்கு தமிழக நிலைமை சீரியஸ்.

26-ம் தேதி காலை 7 மணி முதலே, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஆயிரக்கணக்கான தே.மு.தி.க. தொண்டர்கள் கறுப்புக் கொடியுடன் திரளத் தொடங்கினார்கள். குவிக்கப்பட்ட போலீ ஸார், சாலையை மறித்தபடி அரண் போன்று நின்று கொண்டார்கள். வாகனங்களை எல்லாம் வேறு ரூட்டில் திருப்பி அனுப்பவே... ஸ்தம்பித்து நின்றது சென்னை.
சரியாக 8.40-க்கு பனகல் மாளிகை அருகே சீறலுடன் வந்து நின்றது விஜயகாந்த் கார். கறுப்புச் சட்டை, கறுப்புக் கண்ணாடி சகிதம் காரில் இருந்து இறங்கிய விஜயகாந்தைப் பார்த்ததும், 'கேப்டன்... கேப்டன்...’ என்று தொண்டர்கள் கூட்டம், ஒட்டுமொத்தமாக அவரைச் சூழ்ந்துகொண்டது. கையில் கறுப்புக்கொடியை எடுத்த விஜயகாந்த், பிரதமர் தங்கி இருந்த கவர்னர் மாளிகையை நோக்கி வீறுநடை போட ஆரம்பித்தார். பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான கண்டனக் குரல்கள் எழுப்பியபடி அவருடன் சேர்ந்து கூட்டமும் முன்னேற... எதிர் முனையில் தயாராக காத்து நின்றது போலீஸ். சைதாப்பேட்டை சின்னமலை அருகே விஜயகாந்த் வந்ததும், 'உங்கள் அனைவரையும் கைது செய்கிறோம்’ என்றது போலீஸ். மாநகரப் பேருந்தில் ஏறி உட்கார்ந்துகொண்டார். 'யாரும் எந்தப் பிரச்னையும் பண்ணக் கூடாது’ என்று சொல்லி தொண்டர்களை சமாதானப்படுத்தினார் விஜயகாந்த்.

அடுத்த அரை மணி நேரத்தில் மெமோரியல் அரங்கம் முன்பு அரங்கேறியது, த.மு.மு.க. சார்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம். வழக்கமாக சிவப்புத் துண்டுடன் காட்சி தரும் த.மு.மு.க-வின் நிறுவனரான குணங்குடி அனீஃபா, கறுப்பு நிறத் துண்டுடன் வந்து நின்றார். நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்கவேண்டிய பொதுச்செயலாளர் ஹைதர் அலி, மன்மோகன் வருகை நெரிசலில் சிக்கிக்கொண்டதால், 10.30 மணிக்குத்தான் வந்து சேர்ந்தார். உடனே, பிரதம ருக்கு எதிரான இடி முழக்கத்தை ஆரம்பித்தார். 'அமெரிக்காவின் பாதங்களை நக்கும் ஆசாமிகளை நாம் தலைமை அமைச்சர்களாகப் பெற்று இருக்கிறோம்’ என மன்மோகனைச் சாடியவர், 'தமிழர்களுக்கு இறையாண்மை மீது நம்பிக்கை இருக் கிறது. இந்தியா எனும் தேசம் பல நாடுகளாகச் சிதறுண்டு போகும் நிலையை உருவாக்கி விட வேண்டாம். முல்லைப் பெரியாறுக்காக தேனியில் தொடங்கிய போராட்டத்தை, தமிழகம் முழுவதும் பரவவைத்துவிடாதீர்கள்’ என்று ஆக்ரோஷம் காட்டினார்.
அன்று, பிற்பகல் அழகப்பா பல்கலைக்கழக விழாவில் கலந்து கொள்வதற்காக, காரைக்குடி போனார் மன்மோகன். அங்கு, சென்னையை விட பலத்த எதிர்ப்பு. அண்ணா சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் திரளான கூட்டம் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த... பெரியார் சிலை அருகே, 'சலோ சலோ... டெல்லி சலோ’ என மன்மோகனுக்கு எதிராக கோஷமிட்டபடி கறுப்புக் கொடி ஊர்வலம் நடத்தினார் ம.தி.மு.க-வின் துணை பொதுச்செய லாளர் மல்லை சத்யா.

சத்யா பேசிய போது, ''காங்கிரஸ் எப்போதெல்லாம் மத்திய அரசை ஆள்கிறதோ... அப்போதெல்லாம் ஒட்டிப் பிறந்தாலும் ஒதுக்கியே வைக்கப்படும் இடது கையைப் போலத்தான் நம்மைப் பார்க்கிறது. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளாவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழகத்துக்குக் கொடுக்க மறுக்கிறது மத்திய அரசு.
தேன் கூட்டைக் கலைத்துவிட்டது போல் தமிழனைத் தட்டி எழுப்பிவிட்டு இப்போது அவதிப்படுகிறது கேரளம். 'நீங்கள் நினைத்தால்தான் தமிழர்களை அமைதிப்படுத்த முடியும்’ என்று நேற்று முன்தினம் இரவு, தலைவர் வைகோவைத் தொடர்புகொண்டு அரை மணி நேரம் மன்றாடி இருக்கிறார் கேரளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் வயலார் ரவி. மக்களை சந்திக்கப் பயந்துகொண்டு பிரதமர் வான் வழிப்பயணம் போனது, இந்தக் கறுப்புத் துண்டுக்கும் மக்கள் எழுச்சிக்கும் கிடைத்த மகத்தான வெற்றி'' என்றார்.
மன்மோகன் மறக்க முடியாத பயணம் இது!
thedipaar.com