புதுச்சேரி, டிச. 30- தமிழகம் மற்றும் புதுச்சேரியை மிரட்டி வந்த தானே புயல் இன்று காலை கரையைக் கடந்தது. இதில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 12 பேர் தமிழகத்திலும் 7 பேர் புதுச்சேரியிலும் பலியாகியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டைக்குப்பம் பகுதியில் மரம் பெயர்ந்து விழுந்ததில் பிரகாஷ் என்பவர் வீடு இடிந்தது. இதில் சிக்கிய பிரகாசின் மனைவி சுகந்தி வீட்டுக்குள்ளேயே உயிரிழந்தார்.
சங்கராபுரம் ஆலந்தூரில் குருவப்ப நாயுடு என்ற முதியவர் இன்று அதிகாலை தெருவில் கிடந்த மின்கம்பியை மிதித்தார். இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பிணமானார்.
அதுபோல புதுச்சேரி உப்பளம் பிரான்சுவா தோட்டத்தில் ஒரு வீடு இடிந்தது. வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலருக்கு காயம் ஏற்பட்டது. வானூரில் வீடு இடிந்து ஒருவர் பலியானார். 6 பேர் காயம் அடைந்தனர்.
ஆவடி பட்டாபிராமில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முன்னாள் ராணுவ வீரர் ஏசுதாஸ் (67) மின்சாரம் தாக்கி இறந்தார்.
புயலின் கோர தாண்டவத்தில் தமிழகத்தில் பலத்த பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அதோடு உயிர்ச்சேதமும் ஏற்படுவது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தை சேர்ந்த 10 குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேசிய பேரிடர் மீட்புப்பணிப் படையைச் சேர்ந்த 15,000 வீரர்கள் மீட்பு பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப்பணி உதவிகளுக்கான தொலைபேசி எண்கள்
சென்னை மாநகராட்சி - 1913, 044-25619237
காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் - 1077,
காஞ்சீபுரம் போலிஸ் கட்டுப்பாட்டு அறை - 9445465536, 04112-27238001
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் - 04116 - 27661200
திருவள்ளூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறை - 04116 - 27661010
maalaimalar.com