
சென்னை: ""அ.தி.மு.க., பொதுக் குழுவிற்காக இப்போதே சாலையில் டிஜிட்டல் பேனர்களை அதிகளவில் கட்டி வருகின்றனர். அவர்கள் பேனர் கட்டினால் மட்டும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதா?'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தே.மு.தி.க., சார்பில் கிறிஸ்துமஸ் விழா, சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பொதுமக்களுக்கு கேக் மற்றும் மட்டன் பிரியாணி வழங்கி தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: அ.தி.மு.க., பொதுக் குழுவிற்காக இப்போதே சாலையில் டிஜிடல் பேனர்களை அதிகளவில் கட்டி வருகின்றனர். நாங்கள் பேனர் கட்டினால் உடனே அவிழ்த்து விடும் போலீசார், இதை கண்டு கொள்ளவில்லை. அ.தி.மு.க.,வினர் பேனர் கட்டினால் மட்டும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதா?
கடிதம் விடு தூது: கடந்த ஆட்சியில் கருணாநிதி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார். இப்போது ஜெயலலிதாவும் கடிதம் எழுதிக் கொண்டு இருக்கிறார். மாற்றம் வேண்டும் என்பதற்காக தான் மக்கள் ஓட்டுப் போட்டுள்ளனர். முல்லைப் பெரியாறு அணை பிரச்னை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், அதைப் பற்றி கருத்து சொல்ல முடியாது என மத்திய அமைச்சர் வாசன் சொல்கிறார். கடந்த 2006ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியும், அதை நிறைவேற்றாதது ஏன் என்று நாங்கள் கேட்பதற்கு இதுவரை பதில் இல்லை. இரண்டு மாநில மக்களையும் இப்பிரச்னையில், மத்திய அரசு துண்டாட பார்க்கிறது. நிலைமை எல்லை மீறி போய்விட்டது.
வாஜ்பாய்-மன்மோகன் ஒப்பீடு: முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தங்க நாற்கர சாலைத் திட்டத்தை பார்வையிட நெல்லூரில் இருந்து சென்னை வரை காரிலேயே வந்தார். ஆனால், இன்றைக்கு பிரதமர் மன்மோகன்சிங், 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் விழாவில் பங்கேற்க விமானத்தில் தமிழகம் வருகிறார். அப்படி என்றால் குற்றவாளிகளுக்கு பிரதமர் சப்போர்ட் செய்கிறாரா?. கர்நாடகா, கேரளா மாநிலங்கள், தமிழகத்தை வடிகால் வாரியமாகவே பயன்படுத்தி வருகின்றன. அங்கு மழை வெள்ளம் அதிகமாகும்போது, தமிழகத்திற்கு திருப்பி விடுகின்றனர். முல்லைப் பெரியாறு அணை, கூடங்குளம் அணுமின் நிலையம், மீனவர் பிரச்னைகளில் மத்திய அரசு தொடர்ந்து மவுனமாகவே உள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத பிரதமர், தமிழகம் வருவதை கண்டித்துதான் நாங்கள் கறுப்புக் கொடி ஆர்பாட்டம் செய்ய இருக்கிறோம். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
கறுப்புக் கொடி காட்ட தே.மு.தி.க., ரெடி: முல்லைப் பெரியாறு அணை பிரச்னை, மீனவர் பிரச்னை, கூடங்குளம் பிரச்னைகளில் மத்திய அரசு மவுனம் சாதிப்பதை கண்டித்து தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டி ஆர்பாட்டம் நடத்தப்படும் என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருந்தார். அதன்படி, இன்று சென்னையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக தே.மு.தி.க., தலைமை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில வாசகங்கள் அடங்கிய பதாகைகள், கறுப்புக் கொடிகள், தனியாரிடம் ஆர்டர் கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ளது. அவை நேற்று லாரி நிறைய கட்சி அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டது.
ரகசிய ஏற்பாடு: இந்த ஆர்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி கிடைக்காது என்பதால், அதை சமாளித்து ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தே.மு.தி.க., தலைமை பல்வேறு ரகசிய ஏற்பாடுகளை செய்துள்ளது. இது குறித்த, ஆலோசனைக் கூட்டம் கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கட்சி தலைவர் விஜயகாந்த், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட செயலர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்க, இந்த ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்து 2,000 தொண்டர்களை அழைத்து வர வேண்டும் என அப்போது முடிவு செய்யப்பட்டது.