
மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிக்கல்கள் ‘ரவுண்ட்’ கட்டி அடிக்கிறது & இது தேசிய செய்தி. அதைவிட பெரிய சிக்கலில் சிக்கித் தலைமறைவாகி இருக்கிறார் சிதம்பரத்தின் முக்கிய சிஷ்யர் & இது லோக்கல் செய்தி.
காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் சேலம் மாவட்டத் தலைவராக முன்பு இருந்தவர், தற்போது காங்கிரஸ் தலைமை செயற்குழு உறுப்பினர், பல்லவன் கிராம வங்கி இயக்குனர் என்று பல முகங்கள் இருந்தாலும், ‘சிதம்பரத்தின் சிஷ்யர்’ என்ற அடையாளம்தான் சேலம் மாவட்ட காங்கிரஸின் முக்கியப் புள்ளிகளுள் ஒருவரான வெங்கட்ராமனுக்கு முழு பலம்.
அந்த வெங்கட்ராமனைத்தான் கொலை வழக்கு ஒன்றில் சேலம் போலீஸார் தேடிவருகின்றனர். தனது நம்பிக்கைக்குரிய சுந்தரமூர்த்தி (எ) கார்த்திக் என்பவரை ஆட்களை ஏவி கொலை செய்தார் என்பதே அவர் மீதுள்ள குற்றச்சாட்டு. கடந்த சில நாட்களாகவே இந்தக் கொலை வழக்கில் அரசல்புரசலாக அடிபட்டு வந்த வெங்கட்ராமனின் பெயர் தற்போது எஃப்.ஐ.ஆரில் முக்கிய குற்றவாளியாக இடம் பெற்றுவிட்டது.
இதை அறிந்து அவர் தலைமறைவாகி விட்டார். இதுவரை எந்தப் பிரச்னைகளிலும் சிக்காமல் பரம சாதுவாக வலம் வந்த வெங்கட்ராமன், தற்போது போலீஸாரால் கொலைக் குற்றவாளியாகத் தேடப்பட்டு வருவது சேலம் மாவட்ட காங்கிரஸார் மத்தியில் மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம்.
‘‘கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டையாம் பட்டி அடுத்துள்ள எட்டிமாணிக்கம்பட்டி அருகே உள்ள சோளக்காட்டில் காங்கிரஸ் பிரமுகர் வெங்கட்ராமனின் சிஷ்யர் கார்த்தி என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
கார்த்திக்கின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணையை மேற்கொண்ட போலீஸாருக்கு அவரின் செல்போன் மூலமாக முக்கிய ‘க்ளூ’ ஒன்று கிடைத்தது.
கொலை செய்யப்படுவதற்கு முன்பு கார்த்திக்கின் செல்போனுக்கு குறிப்பிட்ட ஒரு நம்பரில் இருந்து நான்கு அழைப்புகள் வந்திருந்தன. அந்த போனுக்குச் சொந்தக்காரரான சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த வருண் (எ) விஜயை தூக்கிய போலீஸ், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டது.
ஒத்துழைப்பையும் தராமல் கொலையைப் பற்றி எதுவுமே தெரியாது என்று வருண் முரண்டு பிடிக்க, ‘முறைப்படி’ விசாரித்திருக்கிறார்கள் போலீஸார். அதன்பிறகு, உண்மைகளைக் கக்கியிருக்கிறார் வருண்.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் குமார் (எ) சிவக்குமார் என்பவன் தான் இந்தக் கொலையைச் செய்தான் என்றும் அவனுக்கு உதவியாக தானும் இந்தக் கொலையில் பங்கேற்றதாகவும் தெரிவித்திருக்கிறான் வருண். குமார், கார்த்திக் இவர்கள் இருவருமே காங்கிரஸ் பிரமுகரான வெங்கட்ராமனின் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தவர்கள்.
சேலம் ஐந்து ரோடு ஸ்டேட் பாங்க் காலனியில் இருக்கும் வெங்கட்ராமனின் வீட்டுக்கு அடிக்கடி போய்வரும் அளவுக்கு நெருக்கமானவர்களாக இருந்தவர்கள். வெங்கட்ராமனே இந்தக் கொலையைச் செய்ய ஆட்களை ஏவியவர் என்று தெரிந்து கொண்ட போலீஸாருக்கு கொலைக்கான காரணம் பற்றித் தெரிய வர, அதிர்ந்து போனார்கள்.
வெங்கட்ராமனின் மனைவி ராஜேஸ்வரிக்கும், அவர்களது அண்டை வீட்டுக்காரரான பஸ் அதிபர் ஒருவருக்கும் இடையே முறையற்ற தொடர்பு இருந்திருக்கிறது. இதனை நேரில் பார்த்த கார்த்திக் வெங்கட்ராமனை ‘ப்ளாக் மெயில்’ செய்து பணத்தைக் கறந்திருக்கிறான்.
தனக்கு விசுவாசியாக இருந்தவன் தன்னிடமே மிரட்டி பணம் பறிக்கிறானே என்று கொதித்துப் போன வெங்கட்ராமன், கார்த்திக்கை இனி உயிரோடு விட்டு வைக்கக் கூடாது என்று முடிவுக்கு வந்திருக்கிறார்.
தன்னுடைய மற்றொரு விசுவாசியான பெட்ரோல் பங்க் குமாரை அழைத்து, கார்த்திக்கை போட்டுத் தள்ளுமாறு கூறி, கணிசமான ஒரு தொகையை அவனிடத்தில் தந்திருக்கிறார். பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்த குமார், தான் வேலை பார்த்து வந்த பங்க்கில் தனக்கு வாடிக்கையாளராக அறிமுகமாகி, பிறகு நண்பனாக மாறிவிட்ட வருணையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கிறான்.
கடந்த 11-ம் தேதியன்று கார்த்திக்கை குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு போனில் பேசி வரவழைத்தான் குமார். அங்கு வந்த கார்த்திக்கை எட்டிமாணிக்கம்பட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். வருணும் அவனுடன் சென்றிருக்கிறான்.
அங்கே ஒரு சோளக்காட்டில் வைத்து கார்த்திக்கைத் தாக்கி, ஒரு பெரும் தொகையைத் தனக்குத் தரவில்லை என்றால் தலைவரது (வெங்கட்ராமன்) மனைவி பற்றிய ரகசியங்களை தான் போஸ்டர் அடித்து வெளியிடப் போவதாக கார்த்திக்கை சொல்லச் சொல்லி அதனைத் தனது செல்போன் மூலம் வீடியோவாகப் படமாக்கியிருக்கிறான் குமார்.
கொலை வழக்கு விவகாரங்களில் இருந்து தப்பிக்க ஆயுதமாகப் பயன்படுத்தவே இப்படி ஒரு வீடியோவை எடுக்குமாறு வெங்கட்ராமன் கூறியதாக குமார் போலீஸில் சொல்லியிருக்கிறான். கொலை நடந்த பிறகு வேறு ஒரு செல்போனில் இருந்து வெங்கட்ராமனிடம் பேசிய பின்பே குமார் தலைமறைவாகியிருக்கிறான்.
திருச்சியில் ஒரு லாட்ஜில் தலைமறைவாகத் தங்கியிருந்த கொலையாளி குமாரைத் தனிப்படை போலீஸார் கைது செய்து சேலம் அழைத்து வந்தனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி முதலான ஆயுதங்களை வீசியெறிந்த இடங்களை குமார் காட்ட, அவற்றை போலீஸார் கைப்பற்றினர்.
போலீஸிடம் பிடிபட்டுள்ள கொலையாளி குமார், ‘‘தான் வெங்கட்ராமனின் கட்டளையைச் செயல்படுத்திய கருவி மட்டுமே என்று வாக்குமூலம் தந்துள்ளான்’’ என்கிறார்கள்.
இதற்கிடையே, இந்த வழக்கில் இருந்து தப்பிக்க பல தில்லாலங்கடி வேலைகளை எல்லாம் வெங்கட்ராமன் செய்திருக்கிறார். அவரது முயற்சி ஏதும் பலனளிக்கவில்லை. தன் மீதான போலீஸ் பிடி இறுகுவதை அறிந்த வெங்கட்ராமன், தற்போது தலைமறைவாகி விட்டார். எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்கிறார்கள் போலீஸார்.
thedipaar.com