ஆத்தூர்: ஆத்தூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில், மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சி, செல்லியம்பாளையம் பகுதியில், தனியார் மகளிர் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி முள்ளிபள்ளம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகள் கல்பனா (18), எலக்ட்ரிக்கல் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பாடப்பிரிவில், முதலாம் ஆண்டு படித்து வந்தார். அக்கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதியில் தங்கி படித்து வந்த அவர், நேற்று மதியம் 2.10 மணியளவில், கல்லூரி விடுதிக்கு வந்துள்ளார். வயிற்று வலிப்பதாக சக மாணவிகளிடம் கூறிய, கல்பனா நேற்றிரவு 8.30 மணியளவில், கல்லூரி விடுதிக்குள் சுடிதார் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கல்லூரி நிர்வாகத்தினர், மாணவியின் உடலை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து, ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன் வழக்கு பதிவு செய்து, மாணவி தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
தினமலர்
தினமலர்