நீங்களும் வந்திடுங்க..ராசாவை வற்புறுத்திய ஸ்டாலின்.


டந்த செவ்வாயன்று டெல்லி வந்த ஸ்டாலின், விமான நிலையத்திலிருந்து நேராக லீலா பேலஸ் ஹோட்டலுக்குச் சென்றார். அங்கு கட்சிக்காரர்களுடன் பேசிவிட்டு  ஓய்வெடுத்தவர், மாலை நான்கு மணிக்கு ஹோட்டலிலிருந்து கிளம்பி திகார் சிறைக்குச் சென்றார். அங்கே ராசாவுடன் சுமார் இருபது நிமிடங்கள் பேசி யிருக்கிறார்.
அந்த சந்திப்பின்போது கனிமொழியைத் தொடர்ந்து ராசாவும் ஜாமீனில் வெளிவர வேண்டும் என்று வற்புறுத்தியதாகத் தெரிகிறது.

 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி, சித்தார்த் பெகுரா, கரீம் மொரானி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் ஆ.ராசாவையும் சித் தார்த் பெகுராவையும் தவிர மற்றவர்கள் அனைவரும்  ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். ‘தான் குற்றவாளி இல்லை என்பதால், எக்காரணத்தைக் கொண்டும் ஜாமீன்  கேட்க மாட்டேன்’ என்று ராசா இந்த டிசம்பர் மாத கடும்  குளிரிலும் பிடிவாதமாக திகார் சிறைக்குள் இருந்து வருகிறார். தன் தரப்பு வாதங்களை அவரே கோர்ட்டில் எடுத்துவைக்கிறார்.

‘நிரபராதியாகவே வெளியே வருவேன்’ என்று கூறிவரும் ராசாவுக்கு, அவரது முன்னாள் உதவியாளரான ஆசிர்வாதம் ஆச்சாரி, செவ்வாய்க்கிழமை சி.பி.ஐ. கோர்ட்டில்  கொடுத்த சாட்சியம் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதி சைனி முன்பு ஆச்சாரி வழங்கிய சாட்சியத்தில், ‘‘2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக 2007-ம் ஆண்டின் இறுதியில் அமைச்சகத்தில் சில கருத்து  வேறுபாடுகள் இருப்பதை அறிந்துகொண்டேன். இந்த லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக பிரதமர் அலுவலகம் உட்பட பல இடங்களுக்கு அனுப்புவதற்கான கடிதங்களை  டைப் செய்து  கொடுத்திருக்கிறேன். நவம்பர், டிசம்பர் மாதங்களில் இது தொடர்பாக அப்போதிருந்த அமைச்சர் ராசாவுக்கும், அப்போதைய தொலைத் தொடர்புத் துறை  செயலாளர் மாத்தூருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கத் தொடங்கின.

ஒரு நாள் நான் அமைச்சரின் அறைக்குப் போனபோது அங்கே மாத்தூரைப் பார்த்து ராசா சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். பதிலுக்கு மாத்தூர்  சன்னமான குரலில்  பதிலளித்துக் கொண்டிருந்தார். அவர்கள் பேசுவதை வைத்துப் பார்க்கும்போது 2ஜி  லைசென்ஸ் வழங்கும் விஷயத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந் திருக்கிறது. பின்னர் ஒருநாள், ‘மாத்தூர் ஓய்வு பெற்றபோது அவருக்கு ஏன் விருந்து கொடுக்கவில்லை?’ என ராசாவிடம் கேட்டேன். அதற்கு ‘மாத்தூர், எனக்கு சரியாக  ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை’ என்று அவர் என்னிடம் சொன்னார். அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது கனிமொழி பலமுறை தொலைத் தொடர்புத்துறை அலு வலகத்துக்கு வந்திருக்கிறார்’’ என்று கூறினார்.

கனிமொழி தரப்பு வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி ஆச்சாரியிடம் குறுக்கு விசாரணை செய்தார். ‘ஜூனியர் அதிகாரியான உங்களிடம் ராசா இப்படிப்பட்ட விஷயங்களைப்  பகிர்ந்துகொண்டார் என்பதை எப்படி நம்புவது?’ என்று ராம்ஜெத்மலானி கேட்டதற்கு, ‘அவருடன் தனக்கு பத்து ஆண்டுகால நெருக்கம் உண்டு’ என்று சொன்னார்  ஆச்சாரி. அதோடு, ராசாவை வேவு பார்த்ததாக ராம்ஜெத்மலானி கூறியதையும் அவர் மறுத்தார்.

அத்துடன் கடந்த வியாழனன்று நீதிபதி சைனி முன் விசாரணைக்கு ஆஜரான ஆச்சாரி, ‘‘சில மாதங்களுக்கு முன் என்னைக் கொல்ல முயன்ற நபர் சிறிது நேரத்துக்கு  முன்பு கோர்ட்டுக்கு வந்தார். ராசாவுக்குப் பக்கத்தில் இருந்த சந்தோலியாவிடம் அவர் பேசிவிட்டுச் சென்றார்’’ என்று கூறினார். இதனால் கோர்ட்டில் சிறிதுநேரம் பரபரப்பு  ஏற்பட்டது.

இதற்கிடையே, 2ஜி வழக்கில் ப.சிதம்பரத்துக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி சாட்சியம் அளித்துள்ளதால், காங்கிரஸ் கட்சியும் இப்போது பெரும் சிக்கலில் உள்ளது.  சிதம்பரத்துக்கு 2ஜி விவகாரத்தில் பங்கு உள்ளது என்றும் அவரை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் சுவாமி வலியுறுத்தி தொடர்ந்து கூறி வருகிறார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இதனால் தலைவலிதான்.

எனவே, இப்போதைய சூழலில் ஆ.ராசா ஜாமீனில் வெளிவர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புவதாகச் சொல்கிறார்கள். அப்படி அவர் வெளியே வந்தால் வழக்கு  விசாரணையில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்று அக்கட்சி நம்புவதாகவும் அதன் தொடர்ச்சியாக இதுகுறித்து தி.மு.க. தலைமையிடம் காங்கிரஸ் கட்சி பேசியதாகவும்,  இதையடுத்தே ஸ்டாலின் டெல்லிக்கு வந்து இறங்கியதாகவும் சொல்கிறார்கள்.

இந்தப் பயணத்தின்போது கட்சிக்காரர்கள் யாரும் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என்று கட்சித் தலைமை கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்ததால் யாரும்  விமான நிலையத்துக்குச் செல்லவில்லை.

ஸ்டாலின் திகார் சிறைக்குச் சென்றபோது அவருடன் டி.ஆர்.பாலு, ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோரும்  உடன் இருந்தனர். மற்ற இருவரும் வெளியே சென்ற பிறகு,  ராசாவிடம் தனியாக ஸ்டாலின் பேசியிருக்கிறார். அப்போது ஜாமீனில் வெளியே வருவது பற்றி ராசா என்ன கூறினார் என்று தெரியவில்லை.

ராசாவைச் சந்தித்த பிறகு புதன்கிழமை மதியம் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டார் ஸ்டாலின். ஸ்டாலினின் சந்திப்பைத் தொடர்ந்து தனது பிடிவாதத்தைக்  கைவிட்டு, ஆ.ராசா ஜாமீன் கோருவார் என்று கட்சித்தலைமை எதிர்பார்க்கிறது.

thedipaar.com
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: