நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணனுக்கு பிரிட்டன் "நைட்ஹூட்' விருது அறிவிப்பு

  லண்டன்: அமெரிக்க இந்தியரும், 2009ல் வேதியியல் பிரிவில் நோபல் பரிசு பெற்றவருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு,58, பிரிட்டன் அரசு "நைட்ஹூட்' விருது அறிவித்துள்ளது. பிரிட்டனின் மிக உயர்ந்த விருதுகளுள் ஒன்று, "நைட்ஹூட்'. சில சாதனைகள் மற்றும் சேவைகளுக்காக வழங்கப்படும் இந்த விருது, மிக மிக அரிதான சந்தர்ப்பத்தில் மட்டுமே, வெளிநாட்டினருக்கு வழங்கப்படும். பொதுவாக, பிரிட்டனின் நீதிபதிகள் மற்றும் குடிமை அதிகாரிகள் தான், இந்த விருதினைப் பெறுவது வழக்கம். கடந்த 2009ல், வேதியியல் பிரிவில், மூலக்கூறு உயிரியலில் அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்ததற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் நோபல் பரிசு பெற்றார். இந்நிலையில், பிரிட்டன் அரசு, 2012ம் ஆண்டுக்கான புத்தாண்டு கவுரவ விருது பெறுவோர் பட்டியலை, நேற்று வெளியிட்டது. அதில், மூலக்கூறு உயிரியலில் குறிப்பிடத்தக்க சேவைகளைப் புரிந்துள்ளதால், ராமகிருஷ்ணனுக்கு, பிரிட்டனின் உயர்விருதான "நைட்ஹூட்' விருது வழங்கப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இவர், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், மூலக்கூறு உயிரியல் பிரிவில், மருத்துவ ஆய்வகத்தில் உயர் பதவியில் உள்ளார். இதுகுறித்து, ராமகிருஷ்ணன் கூறுகையில், "பிரிட்டனில் வெளிநாட்டவர் குடியேறுவதைப் பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கும் இச்சூழலில், பிரிட்டன் சமூகத்திற்கு, வெளிநாட்டில் இருந்து அந்நாட்டில் குடியேறியவர்கள், அதிகளவில் பங்களிப்பு செய்துள்ளனர் என்பது, இந்த விருதின் மூலம் நிரூபணமாகியுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலையின் மூலக்கூறு உயிரியல் மருத்துவ ஆய்வகத்தை நிறுவியர்களில் பலர், வெளிநாட்டில் இருந்து பிரிட்டனில் குடியேறியோர் தான்' என்றார். "நைட்ஹூட்' விருது பெற்றவர்களின் பெயருக்கு முன்னால்,"சர்' பட்டம் சேர்க்கப்பட்டு அழைக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராமகிருஷ்ணன் தவிர்த்து, ரஷ்யாவைச் சேர்ந்தோரும், தற்போது பிரிட்டனில் வசிப்போருமான, பேராசிரியர்கள் ஆண்டர் ஜெய்ம் மற்றும் கான்ஸ்டான்டின் நோவோஸ்லெவ் ஆகிய இருவருக்கும், இந்த "நைட்ஹூட்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர, இந்தியர்கள் பலருக்கு பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
தினமலர்
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: