மும்பை: வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நடந்த காந்தியவாதி அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் நிறைவு பெற்றது. ஹசாரேவின் உடல்நிலை மற்றும் ஆதரவாளர்களின் வலியுறுத்தல் காரணமாக 3 நாள் உண்ணாவிரதத்தை அவர் இரண்டு நாட்களில் முடித்துக்கொண்டார். வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி சமூக சேவகர் அன்னா ஹசாரே, மும்பையில் நேற்று உண்ணாவிரதம் துவக்கினார். இரண்டாம் நாள் உண்ணாவிரத போராட்டம் இன்று தொடர்ந்து நடந்தது. அன்னாவின் உடல் நிலைகுறித்து மருத்தவர்கள் வருத்தம் தெரிவித்ததுடன் உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்தினர். இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று மக்கள் மத்தியில் பேசிய அன்னா ஹசாரே , இன்று மாலை உண்ணாவிரதத்தை நிறைவு செய்கிறேன். டிசம்பர் 31ம் தேதி முதல் 2ம் தேதி வரை டில்லி ராம்லீலா மைதானத்தில் மீண்டும் உண்ணாவிரதம் நடைபெறும். ஐந்த மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலி்ல் மத்திய அரசுக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளேன். லோக்பால் மசோதாவை எதிர்த்தவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளேன். ஜெயில் நிரப்பும் போராட்டத்திற்கு மக்கள் தயாராக வேண்டும். லோக்சபாவுக்கு பொதுத்தேர்தல் நடக்க இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. அதுவரை பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஊழலுக்கு எதிராக தொடர்ந்து பிரசாரம் செய்வேன். இளைஞர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். அவர்கள் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும். இளைஞர்களால் அன்னாவை காட்டிலும் அதிகம் சாதிக்க முடியும். என்னை பற்றி விமர்சனம் செய்பவர்கள் பற்றி கவலைப்படப்போவதில்லை. இதனால் ஏமாற்றமும் அடையப்போவதில்லை மரத்தின் மீது கல் எறிந்தால் அது பழத்தை கொடுக்கும். தற்போது ஜெயில் நிரப்பும் போராட்டம் நடத்துவது சரியாக இருக்காது. 5 மாநிலங்களில் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மற்ற கட்சிகளை விட காங்கிரஸ் கட்சி எங்களை அதிகம் ஏமாற்றி விட்டது. சிதம்பரம் மீது தாக்கு: டில்லியில் நான் கைது செய்யப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தான் காரணம். என்னை கைது செய்த அவர்கள் அதிகாலை 6 மணிக்குள் விடுதலை செய்ய திட்டமிட்டனர். ஆனால் நான் அதனை மறுத்து விட்டேன். என்னை விமானப்படை விமானம் மூலம் புனே கொண்டு செல்ல திட்டமிட்டனர் எனவும் கூறினார்.முன்னதாக அன்னா உடல்நிலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உண்ணாவிரதத்தை கைவிட மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். உண்ணாவிரதத்தை கைவிடாவிட்டால் அவரது சிறுநீரகம்செயலிழக்கும் அபாயம் உள்ளது என கூறினார். இது குறித்து அன்னா ஹசாரேவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறுகையில், அன்னா உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று நாங்கள் வலியுறத்தியுள்ளோம். தவறும் பட்சத்தில் அவரது சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் உள்ளது. அவரது உடலில் நீர் வற்றிப்போவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக கூறினர்.மேலும் அவர்கள், அன்னாவின் உடல்வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது எனவும், அவரது ரத்த அழுத்தம் குறைந்துள்ளதால் நடப்பதற்கு சிரமப்படுவார். அவரது ரத்த அழுத்தம் அமர்ந்திருக்கும்போது 120/90 என்ற அளவில் உள்ளது. நிற்கும்போது 105/70 என்ற அளவில் உள்ளது. நாடித்துடிப்பு 71 ஆக உள்ளது. மருத்துவர்கள் என்ற ரீதியில் அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.இறுதி முடிவை அவர்தான் எடுக்க வேண்டும் என கூறினர். மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிரித்விராஜ் சவுகானும், அன்னா உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
எதிர்பார்த்த அளவு மக்கள் வரவில்லை; அன்னாவின் உண்ணாவிரத போராட்டம் 2வது நாளை எட்டியுள்ள நிலையில் எதிர்பார்த்த அளவு மக்கள் வரவில்லை. 2வது நாள் போராட்டத்தில் 4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை தான் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து அன்னா குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து அன்னா குழு
உறுப்பினர்களில் ஒருவர் கூறுகையில், மும்பையில் நாங்கள் எதிர்பார்த்த அளவு மக்கள் வரவில்லை. டில்லியில் அன்னா உண்ணாவிரதம் இருந்த போது அதிகளவு மக்கள் வந்தனர். டில்லியை தவிர மற்ற இடங்களில் கூட்டம் குறைவாக உள்ளது. இதற்கு வருடம் நிறைவடைவது காரணமாக இருக்கலாம் என கூறினார். அன்னா போராட்டத்தில் உ.பி., அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலிருந்து அதிகம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.
பயனில்லாத மசோதா- அன்னா குழு; மத்திய அரசு பலனில்லாத லோக்பால் மசோதாவை தாக்கல் செய்துள்ளதாக அன்னா குழு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பிரஷாந்த் பூஷன் கூறுகையில், மத்திய அரசு பலனில்லாத லோக்பால் மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இதனை மக்கள் கேட்கவில்லை. எங்களது போராட்டம் தொடரும். ராஜ்யசபாவில் நடைபெறுவதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சி.பி.ஐ.,யை சேர்க்காமல் எந்தவித அதிகாரமும் இல்லாத லோக்பால் மசோதாவை தாக்கல் செய்துள்ளது.
dinamalar.com