படகில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், பயணித்ததே பழவேற்காடு படகு விபத்து சம்பவத்தில் உயிர் சேதத்திற்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது.சென்னையில் இருந்து, 60 கி.மீ., தொலைவில் உள்ளது பழவேற்காடு ஏரி. பழவேற்காடு, லைட்அவுஸ்குப்பம், கூனங்குப்பம், வைரவன்குப்பம், பள்ளிகுப்பம், அரங்கன்குப்பம் உள்ளிட்ட, 52 மீனவ கிராமங்கள் இங்கு உள்ளன. சிறந்த சுற்றுலா இடமாகத் திகழும் இங்கு, பறவைகள் சரணாலயம், படகு, கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்கள் இயற்கையாக உள்ளன. இதனால் விடுமுறை நாட்களில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் பலர் வந்து செல்கின்றனர். இவ்வாறு வருபவர்களில் பெரும்பாலானோர், படகு சவாரியையே அதிகம் விரும்புகின்றனர். குடும்பத்தினருடன் வருபவர்கள், ஏரியில் மட்டும் சவாரி சென்று விட்டு திரும்பி விடுகின்றனர். ஆனால், காதலர்கள், இளைஞர்கள், உற்சாக பானம் அருந்த விரும்புவோர் ஏரியைக் கடந்து, கடல் பகுதியோரமாகச் செல்கின்றனர். சிலர் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, சுற்றுலாப் பயணிகளை ஆபத்தான பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
இவ்வாறு செல்லும்போது, எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி வருகிறது. சுற்றுலா வரும் பயணிகள், எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, படகில் பயணித்து வருகின்றனர். படகில் பயணிப்பவர்களுக்கு, "லைப் ஜாக்கெட்', ரப்பர் மிதவை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. இதனால் விபத்தில் சிக்குபவர்கள் பலியாகி வருகின்றனர். கடந்த காலங்களில், பழவேற்காடு பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவங்கள் அதிகம் உள்ளன. அதே போன்ற ஒரு சம்பவம் தான், நேற்றும் நடந்துள்ளது. ஒவ்வொரு முறை, விபத்து நடக்கும் போது மட்டும் அதிகாரிகள் சுறுசுறுப்பாக நடவடிக்கை எடுப்பதும், அதன் பின்னர் அவற்றை மறந்து விடுவதும் தொடர்கிறது. எனவே இனியாவது, படகில் பயணிப்பவர்களை கண்காணித்து, முறைப்படுத்த சுற்றுலாத் துறையும், போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளூர் எஸ்.பி., வனிதா கூறும் போது, "இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, பழவேற்காடு ஏரியைச் சுற்றிலும், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்' என்றார்.
தடம் மாறிய பயணம்: சுந்தரபாண்டியன், ஒவ்வொரு கிறிஸ்துமஸ் அன்றும் பூந்தமல்லி அருகில் உள்ள, "குயின்ஸ்லேண்ட்' பொழுது போக்கு பூங்காவிற்கு செல்வது வழக்கம். ஆனால், நேற்று காலை கிறிஸ்துமஸ் கொண்டாடி, உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் பிரியாணி வழங்கி விட்டு புறப்படுவதற்குள், 11 மணிக்கு மேலாகி விட்டது. இதையடுத்து, அருகில் உள்ள பழவேற்காடு ஏரிக்குச் செல்லலாம் என முடிவு செய்து, கடையில் வேலை பார்க்கும் அனிதா என்பவரையும் அழைத்துக் கொண்டு பழவேற்காடு சென்றனர். ஏற்கனவே திட்டமிட்டபடி பொழுது போக்கு பூங்காவிற்குச் சென்றிருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காதே என, அவரது உறவினர்கள் அழுது புலம்பினர்.