

பெருமாள்சாமி... திண்டுக்கல் மாவட்டம்,கொடைக்கானல் தாலூகா,வெங்கலப்பட்டியைச் சேர்ந்த விவசாயி. இவருக்கு உலகத்திலேயே மகிவும் பிடித்த விஷயம் குழந்தைகள்தான். ஆனால் இவருக்கு திருமணமாகி நீண்டவருடமாகியும் குழந்தை பிறக்கவில்லை. இதன் காரணமாக தனது 45 வது வயதில் ரத்னம் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு சில வருடங்கள் கழித்து ஆண் குழந்தை பிறந்தது
வராது வந்த மாமணி போன்ற இந்த குழந்தைக்கு சுருளிமோகன் என்று பெயர் வைத்து சீராட்டி, பாராட்டி வளர்த்தனர். பெருமாள்சாமியின் உலகமே மகன் சுருளிமோகன்தான் என்றானது. சுருளிமோகனுக்கு வயது 23 ஆனபோதும் குழந்தையை போலத்தான் பார்த்துக்கொண்டார். ஒரு நாளைக்கு பல முறை மகனைப் பார்ப்பதும், பேசுவதுமாகவே காலம் கழிந்தது. காலாகாலத்தில் சுருளிமோகனுக்கு திருமணம் செய்து வைத்து தனது வாரிசுகளை பெருக்கவேண்டும் என்று பெருமாள்சாமி நினைத்துக்கொண்டு இருக்கும் போது, கொஞ்சமும் எதிர்பாரத அந்த சம்பவம் நடந்ததில் பெருமாள்சாமியை நிலைகுலைந்து போனார்.
ஆம்... மோட்டார் பைக்கில் சென்ற சுருளிமோகன் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்து போனார். குழந்தையே இல்லாமல் இருந்திருந்தால்கூட பராவாயில்லை, நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்து பிறகு குழந்தை உண்டாகி அது கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து வாலிபனான நிலையில் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று பெருமாள்சாமி தன்னை பார்க்கவந்தவர்களிடம் எல்லாம் சொல்லி, சொல்லி மாய்ந்து போனார்.
இப்படி புத்திர சோகத்தில் சிக்கி மீள முடியாதிருந்த பெருமாள்சாமியை ஆறுதல் படுத்த ஒரே வழி, இன்னோரு குழந்தையை உண்டாக்குவதுதான் என்று முடிவு செய்த நண்பரொருவர் அவரை பழநியில் உள்ள பாலாஜி கருத்தரித்தல் மைய டாக்டர் செந்தாமரைச் செல்வியிடம் குடும்பத்துடன் கொண்டுபோய்விட்டார்.
பெருமாள்சாமியின் 80 வயதை சுட்டிக்காட்டிய டாக்டர் செந்தாமரைச் செல்வி குழந்தை விஷயத்தை தவிர்க்க பார்த்தார், ஆனால் பெருமாள்சாமியோ தவித்துப் போய்விட்டார். எப்படியாவது எனக்கொரு வாரிசு உருவாக்கி கொடுங்கள் என்ற அவரது கண்ணீருக்கு ஆறுதலளிக்கும் முறையில் மருத்துவம் மேற்கொள்ளப்பட்டது.
பெருமாள்சாமியின் மனைவி ரத்னத்திற்கு "இக்சி' முறை (டெஸ்ட ட்யூப் பேபி)மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு மகப்பேறு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. விளைவு பெருமாள்சாமி- ரத்னம் தம்பதியினருக்கு கடந்த மாதம் 14ந்தேதி இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. என் பிள்ளை சுருளிமோகன், இரண்டு ஆளா பிறந்து வந்துட்டான் என்று பெருமாள் சாமி ஆனந்தத்தில் ஆழ்ந்துள்ளார்.
தாத்தா ஆன நிலையில் அப்பாவாகியிருப்பது மற்றவர்கள் கண்களுக்கு கேலியாகவும், கிண்டலாகவும் தெரியலாம், ஆனால் என் நிலையில் இருந்து பார்ப்பவர்களுக்குதான் தெரியும் எனது புத்திரசோகம் என்கிறார் பெருமாள்சாமி கண்கலங்க.
(இந்த வயதில் குழந்தை பெற்று வளர்ப்பதில் உள்ள பிரச்னை குறித்து ஓரு மருத்துவராக இல்லாமல் மனிதநேய ஆலோசகராக என்ன கூறினீர்கள், தொழில்நுட்ப ரீதியாக இப்படி குழந்தை பிறப்பதை எப்படி சொல்கிறீர்கள், இன்னும் இது விஷயத்தில் உள்ள உங்கள் சந்தேகங்கள், கருத்துக்களை, கேள்விகளை பழநி பாலாஜி கருத்தரித்தல் மையத்திற்கு போன் செய்து, டாக்டர் செந்தாமரைச் செல்வியிடம் பேசி விளக்கம் பெற்றுக்கொள்ளலாம் போன் எண்: 04545-242121)
-எல்.முருகராஜ்