
மத்திய தொலைதொடர்புத் துறை மந்திரியாக ஆ.ராசா இருந்த போது அவரது கூடுதல் தனிச்செயலாளராக இருந்தவர் ஆசீர்வாதம் ஆச்சாரி. இவரை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியாக சி.பி.ஐ. சேர்த்துள்ளது.
சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆசீர்வாதம் ஆச்சாரி உள்பட சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கில் சி.பி.ஐ.யின் முக்கிய சாட்சியாக ஆசீர்வாதம் ஆச்சாரி கருதப்படுகிறார்.
இவர் சி.பி.ஐ. கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்த போது, ஆ.ராசா மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்தார். மேலும் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் அவர் அடிக்கடி தொடர்பு கொண்டது பற்றியும் விளக்கமாக கூறினார்.
நேற்று ஆசீர்வாதம் ஆச்சாரி கோர்ட்டுக்கு வந்தபோது, சந்தோலியா அருகில் உட்கார்த்திருந்த ஒருவரை காட்டி, அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். அவர் சுட்டிக்காட்டிய நபரை சி.பி.ஐ. அதிகாரிகள் பிடித்து விசாரித்த போது, அவர் கொலை மிரட்டல் எதுவும் விடுக்கவில்லை என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் இன்று சி.பி.ஐ. சாட்சியான ஆசீர்வாதம் ஆச்சாரியை ஆ.ராசாவின் வக்கீல் சுஷில்குமார் குறுக்கு விசாரணை செய்தார். பிறகு ஆ.ராசா சார்பில் வக்கீல் சுஷில்குமார் கோர்ட்டில் கூறியதாவது:-
இந்த வழக்கில் ஆசீர்வாதம் ஆச்சாரி பொய்யாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு சாட்சியாவார். அவர் சொல்வதெல்லாம் தவறான தகவல்களாகும். நேற்றுகூட அவர் தனக்கு கொலை மிரட்டல் என்று கூறி ஒரு நாடகத்தை இங்கு நடத்தினார். சந்தோலியா அருகில் இருப்பவரை பார்த்து அவர்தான் தன்னை மிரட்டினார் என்றார். சந்தோலியா ஜாமீன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 2-ந் தேதிவர உள்ளது.
ஜாமீன் கிடைக்காமல் செய்யவே அவர் இத்தகைய நாடகத்தை ஆடினார். ஆசீர்வாதம் ஆச்சாரி பொய் சாட்சி என்பதற்கு இந்த ஒன்றே ஆதாரமாக போதும். இவ்வாறு ஆ.ராசாவின் வக்கீல் சுஷில்குமார் கூறினார்.
இதையடுத்து சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி சைனி கூறுகையில், ஆசீர்வாதம் ஆச்சாரி இதற்கு முன்பு இத்தகைய மிரட்டல் புகார்கள் எதையும் தெரிவிக்கவில்லை. முன்பே அவர் கொலை மிரட்டல் பற்றி கூறி அது கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தால் நிறைய பேருக்கு ஜாமீன் கிடைத்து இருக்காது என்றார்.
thedipaar.com