அணை உடையும்.. அணை உடையும் என்று கேரளாவில் எல்லா கட்சிகளும் கோரஸாக பாட்டுப் பாடிக் கொண்டிருக்க... உடைந்தது என்னவோ கொங்கு முன்னேற்றக் கழகம்தான்’’ என்று அக்கட்சியினரே வேடிக்கையாகச் சொல்கிறார்கள்! முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் கேரள அரசைக் கண்டித்து, கடந்த 22-ம் தேதி கொ.மு.க. சார்பில் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட் சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ஆனால், கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமி புறக்கணிக்கப்பட்டார். எல்லா கட்சிகளிலும் தலைவர்தான் மற்ற நிர்வாகிகளைப் புறக்கணிப்பார். ஆனால், ‘‘உலக அரசியலில் முதல்முறையாக தலைவரைப் புறக்கணித்த கட்சி கொ.மு.க. தான்’’ என்று அக்கட்சியினர் மத்தியில் பெரு மையாகப் பேச, அதுதான் உச்சகட்ட காமெடி!
தேர்தலுக்கு முன்பே கொ.மு.க.வில் விரிசல் ஏற்பட்டது. அடுத்து சட்டசபைத் தேர்தல் தோல்வி, அந்த விரிசலை ஆழப்படுத்தியது. உள்ளாட்சித் தேர்தலோ இன்னும் பெரிதானது. அப்போதே அக்கட்சி உடைந்திருக்கும். இருந்தும் ஒரு வழியாக நடத்தினர். இந்நிலையில், முல்லைப் பெரியாறுக்காக ஆர்ப்பாட்டம் நடத்த ஈரோடு நகர் முழு வதும் ‘ஃப்ளக்ஸ் பேனர்களை’ வைத்து அசத்தினார்கள் கட்சித் தொண்டர்கள். ஆனால், பேனர் மற்றும் சுவரொட்டிகளில் கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமியின் பெயர் மட்டும் காணவில்லை. இதுதான் பிரிவை ஏற்படுத்தியிருக்கிறது.
கட்சியில் என்னதான் நடக்கிறது என்ற குழப்பத்துடன் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்துக்கு வந்தனர். இருந்தும் தலைவர் பெஸ்ட் ராமசாமியும், பொருளாளர் பாலசுப்பிரமணியனும் கடைசிவரை வரவே இல்லை. என்னதான் அங்கு நடக்கிறது என்று சிலரைச் சந்தித்தோம்.
‘‘கட்சி ஆரம்பித்தபோது பெஸ்ட் ராமசாமியும், ஈஸ்வரனும் ஒன்றாக இணைந்து செயல்பட்டனர். இந்த ஒற்றுமையைப் பார்த்துத்தான் பலர் கட்சியில் சேர்ந்தனர். கிராம அ ளவில் கிளைகள் வேரூன்றின. கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கொங்கு மண்டலத்தில் ஈரோடு, திரு ப்பூர், கோவை, பொள்ளாச்சி உட்பட 12 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு ஏழு லட்சம் வாக்குகளைப் பெற்றோம்.
அதன் பிறகுதான் பெரிய கட்சிகள் எங்களைத் திரும்பிப் பார்த்தன. பெரிய கட்சி ஒன்று நாங்கள் ஓட்டுக்களைப் பிரித்ததாலேயே பல தொகுதிகளை இழந்தது. கடந்த சட் டமன்றத் தேர்தலின்போது எங்களுக்குத் தனி மரியாதையே இருந்தது.
இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதா? அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதா? என்று மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் எல்லோரிடமும் கருத்துக் கேட்கப்பட்டது. பெரும்பாலானோர் அ.தி.மு.க.வையே ‘டிக்’ செய்தனர். ஆனால், பெஸ்ட் ராமசாமியும், ஈஸ்வரனும் சேர்ந்து தி.மு.க.வு டன் கூட்டணி அமைத்தார்கள். சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததும், இருவரும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை கூறிக்கொண்டனர். இருவர் மீது நிர்வாகிகளும் தொண்டர்களும் கடும் அதிருப்தியில் இருந்தனர். அதிருப்தியில் இருந்த தொண்டர்களை தன் பக்கம் திருப்பி வெற்றி கண்டார் ஈஸ்வரன். ‘தலைவர் எடுத்த தன் னிச்சையான முடிவால்தான் படுதோல்வி அடைந்தோம்’ என்று அவர் கோஷ்டி பிரசாரம் செய்தது. பெஸ்ட் ராமசாமி தரப்போ, மௌனமாகவே இருந்தது. அதன் பிறகே பெஸ்ட் ராமசாமியை ஓரம் கட்டும் வேலைகள் தொடங்கின. முதலில் அவரை தலைவர் பதவியில் இருந்து டம்மியாக்கும் விதத்தில் ஈஸ்வரன் தரப்பு அனைத்து முயற்சிகளிலும் இறங்கியது.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடந்த கொ.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார்கள் ஈஸ்வரன் ஆதரவாளர்கள். இந்தக் கூட்டத்தில், பெஸ்ட் ராமசாமிக்கு வயதாகிவிட்டதால், கட்சியை வழி நடத்திச் செல்லும் அதிகாரம் ஈஸ்வரனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு பெஸ்ட் ராமசாமியும், அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கொ.மு. க.வை வழி நடத்திச் செல்லும் அதிகாரம் ஈஸ்வரனுக்கு கொடுக்கப்பட்டது. பிறகு, இருவருக்குமிடையே விரிசல் அதிகமானது. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா என்ன? அப்படித்தான் முல்லைப் பெரியாறு பிரச்னை ஆர்ப்பாட்டத்தில் பெஸ்ட் ராமசாமியை வேண்டுமென்றே கட்சி புறக்கணித்தது’’ என்றனர்.
கொ.மு.க. மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘கடந்த சட்டமன்றத் தேர்தலில் சூலூர் தொகுதியில் போட்டியிட்ட ஈஸ்வரனுக்கு எதிராக ராமசாமியின் ஆதரவாளர்களே உள்ளடி வேலைகளைச் செய்தனர். உள்ளாட்சித் தேர்தலிலும் அதிகாரபூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை நிறுத்தினர். இதையெல்லாம் தெரிந்தும் பெஸ்ட் ராமசாமி கண்டு கொள்ளவில்லை. கட்சியை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றதில் அவருக்கே முழுப் பொறுப்பு. இனி ஈஸ்வரனுக்குத் துணை நிற்போம்’’ என்றனர் ஆவேசமாக.
பெஸ்ட் ராமசாமி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து ஈஸ்வரனிடம் கேட்டபோது, ‘‘தலைவருக்கு உடல்நிலை சரியில்லை. பொருளாளர் வெளிநாடு சென்றுள்ளார். மற்றபடி எந்தக் காரணமும் இல்லை’’ என்று மட்டும் சொன்னார்.
பெஸ்ட் ராமசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். ‘‘என் உடல்நலம் நன்றாகவே இருக்கிறது. கட்சித் தலைவர் என்ற முறையில் என்னிடம் யாரும் ஆலோசிப்பதில்லை. இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, நான் புறக்கணிக்கப்படுகிறேன் என்று சொல்லாமல் என்ன சொல்வது?’’ என்று கூறி இணைப்பைத் துண்டித் தார்.
thedipaar.com