இஸ்லாமாபாத்: இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அதிகாரிகள் தரப்பு பேச்சுவார்த்தையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு இரு நாடுகளும், தங்கள் படைகளை விலக்கிக் கொள்வது பற்றி நேற்று ஆலோசிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கிடையிலான வெளியுறவுச் செயலர்கள் மட்டத்திலான பேச்சு, கடந்த இரு நாட்களாக பாக்., தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்தது. முதல் நாளான நேற்று முன்தினம், காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்கள் பேசப்பட்டன. இதில், பாக்., தரப்பில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் இரு நாட்டுப் படைகளும், இனி 30 கி.மீ., தொலைவில் தள்ளி நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதேபோல், வழிதவறியோ அல்லது வேறு காரணங்களாலோ, எவ்வித உள்நோக்கமும் இன்றி, பாக்.,ல் இருந்து இந்தியாவுக்குள் வந்து விடும் நபர்களை மீண்டும் பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்வது, கடலிலும் அதேபோன்று வழிதவறும் மீனவர்களை உரியவர்களிடம் ஒப்படைப்பது ஆகியவையும் பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்டன. மேலும், 2003ல் அமலான இருதரப்பு போர் நிறுத்தம், இருதரப்பு ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர்களிடையிலான நேரடி தொலைபேசித் தொடர்பு, இருதரப்பு கடற்பாதுகாப்புப் படைகளுக்கிடையிலான நேரடி தொலைபேசித் தொடர்பு, வான்வெளியில் எல்லை அத்துமீறல்கள் பற்றிய ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் அமலாக்கம் தொடர்பான தகவல்களை இருதரப்பும் பரிமாறிக் கொண்டன. அதோடு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டிய வர்த்தகம், சுற்றுலா பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், "இருதரப்பும் பரஸ்பரம் அணுசக்தி கொள்கைகளை புரிந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தற்போதைய பேச்சு, இருதரப்பிலான புரிதலை மேலும் வலுவாக்க உதவும்' என பாக்., வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் பசித் நேற்று தெரிவித்தார். "இந்தப் பேச்சில், இக்கட்டான சூழலில், முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா எதிர்பார்க்கிறது. ஆனால் அதற்கு பாக்., சம்மதிக்காது' என பாக்.,ல் இருந்து வெளிவரும், "தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன்' பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.