உங்க திட்டம்தான் என்ன? வைகோவிடம் மன்றாடிய போலீஸ்.


'தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் அத்தனை வழிகளையும் அடைத்து, பொருளாதார ரீதியிலான பாதிப்பை அந்த மாநிலத்துக்கு உருவாக்குவோம். உணர்வுமிகு தமிழினமே... எல்லைகள் நோக்கி எழுந்து வா!’ என வைகோ விடுத்த முற்றுகை அழைப்பு பெரும் எழுச்சியை உருவாக்கியது நிதர்சனம். 
கடந்த 21-ம் தேதியன்று தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் 13 சாலைகளிலும் முற்றுகைப் போராட்டம் நடத்தும் முன்பே, கேரள எல்லையை ஒட்டிய மாவட்டங்களுக்குச் சென்று, கட்சியினரை உசுப்பேற்றியிருந்தார் வைகோ. ம.தி.மு.க-வின் முற்றுகை முயற்சிக்கு பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு கள் இயக்கம், தமிழ் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளோடு, மக்களும் பெரும் படையாக திரண்டனர்.
போராட்டத்துக்கு முந்தைய நாளே தேனி வந்த வைகோ, அங்கு உள்ள அவரது மகள் வீட்டில் தங்கினார். வைகோவின் போராட்டத் திட்டம் என்ன என்று தெரியாமல் போலீஸாருக்கு ஏக டென்ஷன்.  நள்ளிரவு நேரத்தில், வைகோ தங்கி இருந்த வீட்டுக்குப் போன டி.எஸ்.பி. ஒருவர், ''சார்... உங்க திட்டம் என்னன்னு சொல்லிடுங்க. அறிவிப்பு இல்லாம எதுவும் பண்ணிடாதீங்க. ஏற்கெனவே ரொம்பவும் பதட்டமா இருக்கு'' என்று பவ்யமாக கேட்க, ''உங்ககிட்ட சொல்லாம நான் எதுவும் பண்ண மாட்டேன். நீங்க கம்பம் தாலுக்காவுலதானே ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கீங்க. நான் சீலையம்பட்டி வரைக்கும் போறேன். அதுக்கு அனுமதி கொடுங்க'' என்று கேட்டாராம். உடனே அந்த டி.எஸ்.பி., உயரதிகாரிகளிடம் ஆலோசித்துவிட்டு ஒப்புக் கொண்டார். அதன்பிறகும் கட்சிக்காரர்களுடன் ஆலோசனை செய்துவிட்டு வைகோ படுக்கப் போனபோது, நேரம் அதிகாலை 4 மணி.
காலை 7 மணிக்கு பழ.நெடுமாற​னும், பேராசிரியர் சரஸ்வதியும் அங்கே வந்து சேர... அவர்களுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார் வைகோ. பிறகு, தனது பிரசார வேனில் ஏறி, கம்பத்தை நோக்கிப் புறப்பட்டார். சீலையம்​பட்டியில் போலீஸ் அமைத்திருந்த செக்-போஸ்டில் அவரை தடுத்து நிறுத்தினார்கள். வேனில் இருந்த​படியே மைக் பிடித்த வைகோ, ''நாம் உண்ணாவிரதம் இருப்பதாலோ பேரணி நடத்துவதாலோ கேரளாக்காரர்கள் அசைந்து கொடுக்க மாட்டார்கள். அவர்களுக்குப் பொருளாதார ரீதியிலான பாதிப்பை உண்டாக்க வேண்டும். அரிசி, பருப்பு, காய்கறியில் தொடங்கி பால், இறைச்சி வரை அத்தனைக்கும் தமிழகத்தை எதிர்பார்த்துத்தான் இருக்கிறது கேரளா. இது அத்தனையும் அங்கே போகாமல் தடுத்தால், ஒவ்வொன்றின் விலையும் கூடும். அப்போதுதான் கேரளஅரசு வழிக்கு வரும். இன்று நான் மறிக்கிறேன். தினமும் நீங்கள் மறியுங்கள். அணையை உடைக்கும் முடிவை கேரள அரசு கைவிட்டால், நாம் இதை செய்யப்போவதில்லை. இல்லையென்றால், இந்தப் போராட்டம் நிரந்தர பொருளாதார முற்றுகைப் போராட்​டமாக மாறும்'' என்று கர்ஜித்துவிட்டு வேனில் இருந்து இறங்கினார்.
அடுத்து, கம்பத்தை நோக்கி முன்னேற முயற்சித்த வைகோவை தடுத்து நிறுத்தி கைது செய்தது போலீஸ். வைகோவை வேனில் ஏற்றியதுமே, கூடி இருந்த மொத்தக் கூட்டத்தினரும் வேன் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் எவ்வளவோ பேசிப் பார்த்தும், அசைந்து கொடுக்கவில்லை. ''கூட்டத்தை சமாதானப்படுத்துங்க சார்...'' என்று வைகோவிடமே தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீண்குமார் அபினபூ வேண்டுகோள் வைக்க... வேனில் இருந்து இறங்கி மைக்கில் பேசினார் வைகோ. ''நமது நோக்கம் போலீஸோடு சண்டை போடுவது அல்ல; பொருளாதாரத் தடை விதிப்பது மட்டும்தான். அதையும் மீறி அவர்கள் அணையை உடைக்க நினைத்தால், இங்கிருந்து ஒரு லட்சம் பேர் தடைகளை மீறித் திரண்டு, முல்லைப் பெரியாறுக்குப் போகலாம். நம் தமிழர்களின் வீரம் என்னவென்று அப்போது காட்டலாம். இப்போது தயவு செய்து வழி விடுங்கள்'' என்று உணர்ச்சிகரமாக வேண்டுகோள் வைக்க.... மக்களும் வழி விட்டார்கள். ''நான் நடந்தே தேனி வரைக்கும் வருகிறேனே...'' என்ற வைகோவின் வேண்டுகோளை போலீஸாரால் புறக்​கணிக்க முடியவில்லை.
அதனால், மறுபடியும் போலீஸ் வேனில் ஏறாமல், தேனியை நோக்கி 10 கிலோ மீட்டரும் கோஷங்களை எழுப்பியபடி நடந்தே வந்தார் வைகோ.
தேனிக்கு நிகராக கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களிலும் ஏக உஷ்ணம். கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள க.க.சாவடியில் ம.தி.மு.க-வினர் தோழமை இயக்கங்களுடன் பெருந்திரளாக குவிந்தனர். ஆனைக்கட்டி, வளந்தாயமரம், வேளந்தாவளம் என்று அனைத்து எல்லைச் சாலைகளிலும் முற்றுகையிட்டு அதிர வைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, நெல்லை மாவட்டம் செங்கோட்டை என்று 13 சாலைகளிலும்  எழுச்சிமிகு முற்றுகைப் போராட்டம் நடந்திருக்கிறது. கேரள அரசுக்கு இப்போது விழிப்பு ஏற்பட்டிருக்குமா?
thedipaar.com
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: