புத்தாண்டு பிறப்பதற்கு முன்பே கோலிவுட்டில் புதுப் பிரச்னை ஒன்று பிறந்திருக்கிறது. அதுவும் ஈழத் தமிழர்கள் பெயரால்! ‘இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் ஆதரவாளரான கருணாவின் உதவியுடன் சுவிஸில் நடக்கும் புத்தாண்டு விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, பின்னணிப் பாடகர் கிரிஷ் உட்பட தமிழ்த் திரையுலக பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள். இது ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனத் துரோகம்’ என்கிற சர்ச்சை எழுந்துள்ளது.
ஸ்விஸ் நாட்டில் இலங்கைத் தமிழர்கள் அதிகம். உலக நாடுகள் பலவும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருந்தாலும், ஸ்விஸ் மட்டும் தடை விதிக்கவில் லை. இங்குள்ள புலிகளின் ஆதரவாளர்களால் ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் ‘புத்தாண்டும் புது நிமிர்வும்’ என்கிற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. வரும் 2012 புத்தாண்டு அன்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், வருகிற புத்தாண்டில் இதற்குப் போட்டியாக ‘புத்தாண்டின் புதிய மகிழ்வு’ என்கிற பெயரில் ஒரு நிகழ்ச்சியை மற்றொரு பிரிவினர் நடத்துகின்றனர். விடு தலைப் புலிகளுக்கு எதிராக செயல்பட்ட கருணாவின் ஆதரவாளர்கள் சிலர்தான் இந்தப் போட்டி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தமிழ் சினிமா கலைஞர்கள் இதில் பங்கேற்பதால்தான் கடும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்து மக்கள் கட்சி உட்பட பல அமைப்புகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இந்த நிகழ்ச்சியைக் கண்டித்து புலிகள் ஆதரவு அமைப்பான ‘சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு’ ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ‘‘கடந்த பன்னிரண்டு வரு டங்களாக ஆங்கிலப் புது வருடத்தை முன்னிட்டு நாங்கள் நடத்தி வந்த ‘புத்தாண்டும் புது நிமிர்வும்’ கலை நிகழ்வுக்கு எதிராக சிறீலங்கா அரசின் ஆலோசனைகள் பெற்று ஒரு குழுவினர் செயல்படுகிறார்கள். எங்களது லட்சியப் பயணத்தின்போது எங்களுக்கு பலம் சேர்த்த தமிழகக் கலைஞர்கள் இனி வரும் காலங்களிலும் எங்களுக்குத் துணை இருப்பீர்கள் என நம்புகிறோம்’’ என்கிறது அந்த அறிக்கை..
இந்த அமைப்பைச் சேர்ந்த ரஞ்சன் என்பவர் சுவிஸில் இருந்து நம்மிடம் தொடர்புகொண்டு பேசினார். “நாங்கள் பல வருடங்களாக கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். இதன்மூலம் கிடைக்கும் பணத்தை ஈழப் போரில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துக்கு வழங்குகிறோம். கவிஞர் தாமரையிடம் பேசி இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சிக்கு நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா ஆகியோரை அழைக்கச் சொல்லி இருந்தோம். நடிகர் கருணாஸ், பாடகி மாளவிகா, பாடகர் கிருஷ்ணா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள் என்று கூறியிருந்தோம். ஆனால், இப்போது ரஞ்சன் என்று என் பெயரிலேயே ஒரு புது ரஞ்சன் புறப்பட்டிருக்கிறார். எங்களுக்கு எதிராக ஒரு போட்டி விழாவையும் அவர் ஏற்பாடு செய்துள்ளார். ராஜபக்ஷேவின் கைக்கூலிகளிடம் இருந்து நிதி உதவி பெற்று நடக்கும் இந்நிகழ்ச்சியில் தமிழ் சினிமா கலைஞர்கள் பங்கு பெறுகிறார்கள். இதுபற்றி வைகோ, சீமான், கொளத்தூர் மணி ஆகியோருக்குத் தகவல் சொல்லி இருக்கிறோம்’’ என்று வருத்தப்பட்டார் ரஞ்சன்.
இவரால் குற்றம் சாட்டப்படும் புது ரஞ்சனும் நம்மிடம் தொடர்புகொண்டு பேசினார்.
“நான் கருணாவின் ஆதரவாளர் இல்லை. ராஜபக்ஷேவின் உதவி பெற்று நிகழ்ச்சியை நடத்தவும் இல்லை. மனோ, கிரிஷ் ஆகியோர் கொழும்புக்கு இசை நிகழ்ச்சி நடத்தச் சென்றபோது அவர்களை போகக் கூடாது என்று தடுத்தவன் நான். இந்தப் புத்தாண்டு தினத்தில் நாங்கள், ‘உச்சிதனை முகர்ந்தால்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கிரிஷ், சங்கீதா இருவருக்கும் பாராட்டு விழா நடத்துகிறோம். இதற்கு நடிகர் ஜீவாவையும் அழைத்து வருவதாக கிரிஷ் சொல்லி இருக்கிறார். மற்றபடி இதில் எந்த அரசியலும் இல்லை’’ என்றார்.
இதுபற்றி தாமரையிடம் கேட்டதற்கு, “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் இருக்கிற ரஞ்சன்தான் அசல். இவருக்காகத்தான் நான் இங்கு நடிகர்களிடம் பேசினேன். ஆனால், இடையில் புதிதாக ஒரு ரஞ்சன் புகுந்து குழப்பியிருக்கிறார். இந்தப் புது ரஞ்சன் ராஜபக்ஷேவிடம் பண உதவி பெற்றுக்கொண்டு விளையாடி வருகிறார்.ஜீவா, கிரிஷ் ஆகியோரிடம் சரியானவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்குப் போகுமாறு நான் கூறியிருக்கிறேன். கடந்த ஆண்டு மாவீரர் நாளுக்கு நான் சுவிஸ் சென்றிருந்தபோது எனக்கு அவர்கள் குறி வைத்திருந் தனர். ஆனால், எனக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் பாதுகாப்புக் கொடுத்தனர். கருணாவின் உளவுப் பிரி வினர் தமிழ்நாட்டி லும் இருக்கிறார்கள் என்பதுதான் மகா கொடுமை’’ என்று உணர்ச்சிவசப்பட்டார்.
ஜீவா வட்டாரத்தில் விசாரித்தபோது, அவர் இந்தப் பயணத்தைப்பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
thedipaar.com