புதுடில்லி: லோக்பால் மசோதாவை நேற்றே, ராஜ்யசபாவில் தாக்கல் செய்ய வேண்டும் என, பா.ஜ., மற்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அரசு தரப்பு மறுத்துவிட்டது. அதனால், இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ஊழலை ஒழிக்க வகை செய்யும், லோக்பால் மசோதா நேற்று முன்தினம், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா நேற்று, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில நடைமுறைகள் காரணமாகவும், நேற்றே தாக்கல் செய்து, உடனே மசோதா மீதான விவாதத்தை தொடர அரசு தரப்பு விரும்பாததாலும், இன்று மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. அதனால், ஊழலை வெளிப்படுத்துவோர் தொடர்பான மசோதாவை, நேற்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி செய்தால், லோக்பால் மசோதா குறித்து, இன்று எட்டு மணி நேரத்திற்கும் மேலாக விவாதிக்கலாம் என, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்தார்.அவர் ராஜ்யசபாவில் இந்தத் தகவலை தெரிவித்ததும், "மதியம் 2 மணியில் இருந்து நாங்கள், லோக்பால் மசோதாவுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அந்த மசோதாவுக்காகவே, பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடர் நீட்டிக்கப்பட்டது' என, பா.ஜ., கட்சியைச் சேர்ந்த அலுவாலியா கூறினார். அவரின் கருத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரியும் ஆதரித்தார். அவர் கூறுகையில், "ஊழலை வெளிப்படுத்துவோர் தொடர்பான மசோதாவை, இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால், நாளை (இன்று) வரை விவாதம் தொடரும். சபையை நீங்கள் நீட்டிக்காத வரையில், லோக்பால் மசோதா மீதான விவாதத்திற்கு எட்டு மணி நேரம் கிடைக்காது' என்றார்.
உடன் அலுவாலியா, "சபையை நீட்டிக்க யார் சம்மதிப்பர்?' என்றார். உடன் அவருக்கும், அமைச்சர் பன்சாலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது. இதையடுத்து, இரண்டு மசோதாக்களும் நாளை (இன்று) ஒன்றன்பின் ஒன்றாக தாக்கல் செய்யப்படும் என, அறிவித்த சபையின் துணைத் தலைவர் ரகுமான்கான், சபையை மாலை 5 மணிக்கு முன்னதாக ஒத்தி வைத்தார். ஊழலை வெளிப்படுத்துவோர் தொடர்பான மசோதாவை, நேற்றே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும்படி, அமைச்சர்கள் பன்சாலும், நாராயணசாமியும் கூறியதை யாரும் காதில் வாங்கவில்லை.
விவாதிப்பது தப்பா? : இதற்கிடையில், "தேர்தல் நன்னடத்தை விதிகள் பார்லிமென்டிற்கு பொருந்தாது. எனவே, லோக்பால் மசோதா தொடர்பாக, விவாதம் நடத்துவதில் எந்தத் தப்பும் இல்லை. பார்லிமென்ட் சுயேட்சையான மற்றும் அரசியல் சட்ட ரீதியான ஒரு அமைப்பு. அதற்கு முழு சுதந்திரம் உண்டு. அதனால், தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கும், பார்லிமென்டிற்கும் தொடர்பு இல்லை' என தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கூறினார்.
வெங்கையா நாயுடு , பா.ஜ., மூத்த தலைவர் : ராஜ்யசபாவில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால், லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாது. அந்த மசோதா தோல்வி அடையும். காங்கிரஸ் கட்சியினரால் பெரும்பான்மை ஆதரவைத் திரட்ட முடியாது. பலமான லோக்பால் மசோதா விஷயத்தில், நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது.