அம்மா அடித்ததால், ஐந்து வயதில் வீட்டை விட்டு ஓடிப்போனவர், 21 வருடங்களுக்குப் பிறகு, நேற்று வீட்டுக்கு திரும்பினார். மகனை அடையாளம் கண்டவுடன், பாசத்தில் கண்ணீர் விட்டு அவர் தந்தை அழுத சம்பவம், அந்தப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆலந்தூர், அப்பாவு முதலி தெருவில் சந்தேகப்படும்படியாக, நேற்று அதிகாலை ஒரு இளைஞர் நிற்பதைக் கண்ட பரங்கிமலை போலீசார், அவரை விசாரித்தனர். அவர் கூறியதாவது:என் பெயர் கங்கமுத்து,26. அப்பா பெயர் இருசப்பன். ஒன்றாம் வகுப்பு படித்த போது, பள்ளி செல்ல மறுத்து அம்மாவிடம் அழுது அடம்பிடித்தேன். கோபத்தில் அம்மா அடித்து விட்டார். விவரம் தெரியாத அந்த சிறிய வயதில், கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினேன். எங்கே செல்வது என்று தெரியாமல் ரயிலேறி, திருவாரூர் சென்று விட்டேன். அலைந்து திரிந்து மீண்டும் சென்னைக்கு திரும்பினேன். பல இடங்களில் வேலை பார்த்தேன். பெற்றோரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு தோன்றவில்லை. இப்போது, மந்தைவெளியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.
பெற்றோரைப் பார்க்கும் ஆசை சில நாட்களாக ஏற்பட்டது. ஒரு வாரமாக இந்த பகுதியில் சுற்றி அலைந்து கொண்டிருந்தேன். வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆலந்தூர் எஸ்.ஜே.தியேட்டரில் என் தாத்தா வேலை பார்த்த சம்பவம் நினைவுக்கு வந்தது. அதை நினைத்து அழுது கொண்டிருந்தேன். இவ்வாறு கங்கமுத்து கூறினார்.
போலீசார் அவர் சொன்ன அடையாளங்களை விசாரித்தனர். ஆலந்தூர் கண்ணன் காலனியில் இருசப்பன் வசித்தது தெரிந்தது. அவரை விசாரித்து மகனை ஒப்படைத்தனர். தந்தை, மகனைக் கண்டவுடன் பாசத்தில் கண்ணீர் வடித்தார்.
இது குறித்து இருசப்பன் கூறியதாவது, கறிக்கடையில் வேலை செய்கிறேன். எனக்கு மூன்று மகன்கள். மனைவி ராஜேஸ்வரி இறந்து பதினாறு ஆண்டுகள் ஆகின்றன. மகனைப் பிரிந்து சோகத்தில் பித்து பிடித்து இறந்து விட்டாள். கங்கமுத்து வீட்டை விட்டு ஓடிப்போனவுடன், பல இடங்களில் அவனை தேடியலைந்தோம். மீண்டும் அவன் திரும்பி வருவான் என்று கனவில் கூட நினைக்கவில்லை. இவ்வாறு கூறி, மகனை கட்டிப் பிடித்து அழுதார். 21 ஆண்டு பிரிவுக்குப் பின் தந்தை மகன் சந்தித்த நிகழ்வு, பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.