முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தீர்க்கமான நடவடிக்கை எடுக்காவிடில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளையும் அரசிடமே ஒப்படைத்துவிடுவோம் என 40 சங்கங்கள் இணைந்து நடத்திய அனைத்து சமுதாய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக& கேரளா எல்லையில் கடந்த 21 நாட்களாக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் தேனி மாவட்டம் சின்னமனு£ரில் அனைத்து சமுதாயத்தினர் நேற்று மறவர் மக்கள் மன்றத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் 40 சங்கங்களின் நிர்வாகிகள், விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு அகமுடையார் முன்னேற்ற சங்க தலைவர் ஆதிமூலம் தலைமை வகித்தார். மறவர் முன்னேற்ற சங்க தலைவர் மதிவாணன், பிரமலைக்கள்ளர் சங்க தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தனர். அதில், முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதால் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அவமதித்து வரும் கேரள அரசை மத்திய அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
இடுக்கி மாவட்டத்தை திரும்பப்பெற்று தமிழகத்தோடு மத்திய அரசே இணைக்க வேண்டும். முல்லைப் பெரியாறு நீர்தேங்கும் பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 28ம் தேதி 10,000 பேர் பங்கேற்கும் பேரணி நடத்துவது எனவும், இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிடில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை உத்தமபாளையம் தாசில்தாரிடம் ஒப்படைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கேரளாவுக்கு சென்ற காய்கறிகள் பறிமுதல்: போடி மெட்டு மலைச்சாலையில் 21 நாட்களுக்கு பிறகு நேற்று போக்குவரத்து துவங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஆட்டோ, ஜீப்புகள் எல்லை வரை சென்று வந்தன. நேற்று மீண்டும் போக்குவரத்து துவங்கியது. ஜீப், கார், வேன்கள் அதிகளவில் இப்பாதை வழியாக சென்றது. ஆனால் இவ்வழியாக காய்கறிகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் ஒரு வேனில் காய்கறிகளை கொண்டு செல்ல முயன்றனர். இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
thedipaar.com