இந்திய மாணவர் கனடாவில் சுட்டுக்கொலை

இந்திய மாணவர் கனடாவில் சுட்டுக்கொலை டொராண்டோ, டிச  31-     
 
கனடாவின் சர்ரே நகரத்திலுள்ள பல்பொருள் அங்காடியில் பகுதி நேர வேலை செய்யும்   இந்திய மாணவர் அலோக் குப்தா( 27) கிறிஸ்துமஸ் தினத்தன்று கடைஉரிமையாளருடன்  சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாட அன்று மதியம் கடைக்கு சென்றார்.  
 
அப்போது  கடைக்கு வந்த அடையாளம் தெரியாத ஒரு நபர்  துப்பாக்கியால் குப்தாவை கண்மூடி தனமாக சுட்டான். பின்னர்  உயிருக்கு  ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் வழியிலே உயிரிழந்தார்.  
 
இந்த சம்பவம் தொடர்பாக இன்னும் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் கடையில் திருட வந்தவன் தான் அவரை சுட்டுள்ளான் என கருகின்றோம்.கும்பல்  தாக்குதல் நடத்தப்படவில்லை  என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.  
 
துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார் என்றாலும் மரணத்தில் சந்தேகம் உள்ளது பிரேத பரிசோதனை மூலம் உறுதி செய்ய வேண்டும் என குப்தா குடுபத்தினர் தெரிவித்துள்ளனர்.
maalaimalar.com

தண்ணீர் மேல் செல்லும் கார்



வளர்ந்து வரும் விஞ்ஞான மாற்றத்தில் புது புது கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. பொதுவாக கார் தரையில் செல்லும் என்றே எல்லோருக்கும் தெரியும். மிக அண்மையில் பறக்கும் கார்களும் வந்து அதிசயிக்க வைத்தன.
ஆனால் தற்போது தண்ணீரின் மேல் செல்லும் கார்கள் வந்துள்ளன. இவை தரையிலும் சரி தண்ணீரிலும் சரி இலகுவாகவும், எளிதாகவும் பயணிக்க கூடிய வசதிகளை கொண்டுள்ளது.
பிரத்தியேக இயந்திரம் ஒன்றின் உதவியுடன் இவை தண்ணீரில் செல்லும் வல்லமையை கொண்டுள்ளது.

2012 ஐ வரவேற்கும் உலகம்



2011 ஐ வழி அனுப்பு 2012ம் ஆண்டுக்குள் நாம் காலடி எடுத்து வைக்கின்றோம். இந்நிலையில் பல நாடுகளில் Fireworks விடப்பட்டிருந்தன.
இதனில் சில வீடியோ காட்சிகள் உங்கள் பார்வைக்கு

தமிழ்ப்புத்தாண்டு: கருணாநிதி கொதிப்பு

 சென்னை: "சித்திரைத் திங்கள் முதல் நாளில் விழா கொண்டாடுவோரை, நாம் வேண்டாமென்று தடுக்கவில்லை. அதே நேரத்தில், நம்மைப் பொறுத்தவரை, தைத் திங்கள் முதல் நாள் தான், தமிழ்ப்புத்தாண்டு தொடங்கும் நாள்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றது முதல், தி.மு.க., அரசின் முக்கிய திட்டங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களுக்கு வழங்கப்பட்ட அலுவலகங்களைக் கூட, மீண்டும் கைப்பற்றக் கூடிய அளவுக்கு இது சென்றிருக்கிறது. வாழ்க அவர்களுடைய பரந்த, சிறந்த உள்ளம். அந்த வரிசையில், தை முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு என, தி.மு.க., ஆட்சியில் சட்டம் இயற்றியதை மாற்றி, சித்திரை முதல் நாள் தான் புத்தாண்டு என, சட்டசபையில் மசோதா நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவித்து, அ.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதன் மூலம், தி.மு.க.,வுக்கோ, அது நடத்திய ஆட்சிக்கோ, அவமானமில்லை.

மறைமலை அடிகள் தலைமையில், திரு.வி.க., சுப்பிரமணிய பிள்ளை, சச்சிதானந்த பிள்ளை, வெங்கசாமி நாட்டார், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட அறிஞர்கள், 1921ம் ஆண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடினர்.அந்தக் கூட்டத்தில் அவர்கள் எடுத்த முடிவுகள் மூன்று. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாகப் பின்பற்றுவது. அதையே, தமிழாண்டாகக் கொண்டாடுவது. வழக்கத்தில், திருவள்ளுவர் காலம் கி.மு., 31ஐக் கூட்டினால், திருவள்ளுவராண்டு வரும் என்பதை மேற்கொள்வது என்பன. கடந்த 1939ல், திருச்சியில் அகில இந்திய தமிழர் மாநாடு, சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில், ஈ.வெ.ரா., கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேஸ்வரன், கா.சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சிசுந்தரம், திரு.வி.க., மறைமலை அடிகள், பி.டி.ராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

அந்த மாநாடும், தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு; பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்று தீர்மானித்தது. தற்போது, அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழகத்தில் உலவிய அந்தத் தமிழறிஞருக்கெல்லாம் இழைக்கப்படும் அவமானம்.அவர்கள் எப்படி வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும். நம்மைப் பொறுத்தவரை, தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் தான். அதே நேரத்தில், சித்திரைத் திங்கள் முதல் நாளில் விழா கொண்டாடுவோரை, நாம் வேண்டாமென்று தடுக்கவும் இல்லை. இதை அப்போதே அறிவித்துள்ளோம்.இவ்வாறு, கருணாநிதி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்வு?

 புதுடில்லி: பெட்ரோல் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் வரை உயர்த்த, எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு, நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு அதிகரித்துள்ளது. இழப்பை குறைக்கும் வகையில், உள்நாட்டில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு, குறைந்தது ரூ.2.10லிருந்து, அதிகபட்சமாக ரூ.2.13 வரை அதிகரிக்க, எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்றபடி, ஒவ்வொரு மாதமும், முதல் தேதியும், 15ம் தேதியும், பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கும் உரிமை, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, பெட்ரோல் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு, இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் விலை உயர்வை அறிவிப்பது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இருக்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. எனவே, விலை உயர்வு அறிவிப்பை வெளியிடுவதற்கு முன், அரசியல் ரீதியான ஒப்புதலையும் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

http://img.dinamalar.com/data/gallery/gallerye_231948842_376872.jpg


 ""துரோக கும்பலுக்கு மன்னிப்பே கிடையாது,'' என, அ.தி.மு.க., பொதுக்குழுவில் சூளுரைத்த முதல்வர் ஜெயலலிதா உடனடியாக, கட்சியில் துரோக கும்பலின் ஆதரவாளர்களை களையெடுக்கும் பணியையும் துவக்கி விட்டார். ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை அ.தி.மு.க.,வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு இனி நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. கோவையில் குடியிருந்தபடி அதிகார மையமாக செயல்பட்டு வந்த சசிகலாவின் நெருங்கிய உறவினரான ராவணன் மீது கடும் கோபத்தில் ஜெயலலிதா இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதை நிரூபிக்கும் வகையில், ராவணனுடன் நெருக்கமாக இருந்த பலர் மீதும், அடுத்தடுத்து நடவடிக்கைகள் பாய்கின்றன. கோவை, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் ராவணனின் ஆணைக்கேற்ப செயல்பட்டு, உண்மையான கட்சிக்காரர்களைக் கலங்கடித்த கோவை விஜயகுமார், ஈரோடு மோகன் உள்ளிட்ட பலரும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அசோகன், சீனிவாசன், ராஜமாணிக்கம், ஆசைத்தம்பி, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்மணி, லியோ உள்ளிட்ட எட்டு பேர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புடன், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் விஜயகுமார் தான், ராவணனுக்கு வலது கரமாக செயல்பட்டு, கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும், உத்தரவுகளை பிறப்பித்து வந்தவர். உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வில், இவரது ஆதிக்கம் அதிகம் என, அப்போதே புகார்கள் கிளம்பின. இவரது வீட்டின் மீது, தாக்குதலும் நடந்தது; கோமதி நாயகம் என்ற, தொண்டர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மோகன் பற்றியும், எக்கச்சக்கமான புகார்கள் வாசிக்கப்படுகின்றன. ராவணன் பெயரில், கொங்கு மண்டல அமைச்சர்களை, இவர் ஆட்டுவித்தார் என்பது முக்கிய குற்றச்சாட்டு. இவர்களை, கட்சியை விட்டு நீக்கியதை போல, ராவணனின் ஆதரவில் குறுக்கு வழியில் பதவி பெற்ற பலரையும், அந்தப் பதவிகளில் இருந்து இறக்க வேண்டுமென்ற கோரிக்கையும், வலுக்கத் துவங்கியுள்ளது. ராவணனின் சிபாரிசில் பதவி பெற்றவர்கள் பட்டியலில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என பலரும் இடம் பெறுகின்றனர். அதேபோல, எம்.எல்.ஏ., மற்றும் கவுன்சிலர்கள் பலரும், "சீட்' வாங்கியதன் பின்னணியையும், கட்சித் தலைமை விசாரிக்க வேண்டும் என்பதே, தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கோவை மாநகராட்சியில் முக்கியமான பதவியிலுள்ள ஒருவரும், ராவணனின் ஆதரவிலேயே அந்த பதவியைக் கைப்பற்றினர். நில அபகரிப்பு, போலி ஆவணம் தயாரித்தது என பல புகார்கள், அவர் மீதிருக்கும் நிலையில், அவருக்கு அந்த பதவி தரப்பட்டபோதே, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பிரபல லாட்டரி அதிபருக்கு, நிலங்களை வாங்கிக் கொடுத்து, அவருக்கு "பார்ட்னர்' ஆக செயல்பட்ட ஒருவருக்கும், கோவை மாநகராட்சியில் "மண்டல' பொறுப்பு தரப்பட்டது. இதற்காக, இவர்கள் ராவணனுக்கு செலுத்திய தொகை பற்றி, முன்னுக்குப் பின் முரணாக பல தகவல்கள் உலவுகின்றன. கட்சிக்கு தொடர்பில்லாமலும், கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்காமலும், ராவணனின் ஆதரவால் பதவி பெற்ற பலரும், இப்போது தங்கள் பதவிக்கு, எப்போது ஆபத்து வருமோ என்ற அச்சத்தில், கதி கலங்கிப் போயுள்ளனர். காலம் காலமாக, கட்சிக்கு விசுவாசமாக இருந்து, தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த பலரும், கட்சித் தலைமையின் அதிரடியில், ஆனந்தக் கூத்தாடுகின்றனர். மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் குறித்து உளவுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டசபை தேர்தலில் "சீட்' கேட்டு கிடைக்காதவர்களிடம், அதற்கான காரணங்கள்; வெற்றி வாய்ப்பு இருந்தும், மாவட்டத்தில் சில தொகுதிகள் கூட்டணிக்கு தாரைவார்க்கப்பட்டது குறித்து விசாரணை நடக்கிறது. ஒரு மாவட்ட நிர்வாகியின் சமீபகால நடவடிக்கைகள், தி.மு.க., ஆட்சியில் அவரது வளர்ச்சி, தி.மு.க.,வினருடன் உள்ள "உள்குத்து' குறித்தும் அலசப்படுகிறது. சட்டசபை தேர்தலின் போது, கொடைக்கானல் வந்த டாக்டர் வெங்கடேஷை, மாவட்ட நிர்வாகிகள் சிலர், "சீட்' கேட்டு சந்தித்தனர். இதுகுறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. பழைய விஷயங்களை, உளவுத் துறையினர் தோண்டுவதால், அ.தி.மு.க., நிர்வாகிகள் "கிலி'யில் உள்ளனர். அதிகார மையங்களால் ஓரங்கட்டப்பட்டவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமலர் 

நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணனுக்கு பிரிட்டன் "நைட்ஹூட்' விருது அறிவிப்பு

  லண்டன்: அமெரிக்க இந்தியரும், 2009ல் வேதியியல் பிரிவில் நோபல் பரிசு பெற்றவருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு,58, பிரிட்டன் அரசு "நைட்ஹூட்' விருது அறிவித்துள்ளது. பிரிட்டனின் மிக உயர்ந்த விருதுகளுள் ஒன்று, "நைட்ஹூட்'. சில சாதனைகள் மற்றும் சேவைகளுக்காக வழங்கப்படும் இந்த விருது, மிக மிக அரிதான சந்தர்ப்பத்தில் மட்டுமே, வெளிநாட்டினருக்கு வழங்கப்படும். பொதுவாக, பிரிட்டனின் நீதிபதிகள் மற்றும் குடிமை அதிகாரிகள் தான், இந்த விருதினைப் பெறுவது வழக்கம். கடந்த 2009ல், வேதியியல் பிரிவில், மூலக்கூறு உயிரியலில் அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்ததற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் நோபல் பரிசு பெற்றார். இந்நிலையில், பிரிட்டன் அரசு, 2012ம் ஆண்டுக்கான புத்தாண்டு கவுரவ விருது பெறுவோர் பட்டியலை, நேற்று வெளியிட்டது. அதில், மூலக்கூறு உயிரியலில் குறிப்பிடத்தக்க சேவைகளைப் புரிந்துள்ளதால், ராமகிருஷ்ணனுக்கு, பிரிட்டனின் உயர்விருதான "நைட்ஹூட்' விருது வழங்கப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இவர், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், மூலக்கூறு உயிரியல் பிரிவில், மருத்துவ ஆய்வகத்தில் உயர் பதவியில் உள்ளார். இதுகுறித்து, ராமகிருஷ்ணன் கூறுகையில், "பிரிட்டனில் வெளிநாட்டவர் குடியேறுவதைப் பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கும் இச்சூழலில், பிரிட்டன் சமூகத்திற்கு, வெளிநாட்டில் இருந்து அந்நாட்டில் குடியேறியவர்கள், அதிகளவில் பங்களிப்பு செய்துள்ளனர் என்பது, இந்த விருதின் மூலம் நிரூபணமாகியுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலையின் மூலக்கூறு உயிரியல் மருத்துவ ஆய்வகத்தை நிறுவியர்களில் பலர், வெளிநாட்டில் இருந்து பிரிட்டனில் குடியேறியோர் தான்' என்றார். "நைட்ஹூட்' விருது பெற்றவர்களின் பெயருக்கு முன்னால்,"சர்' பட்டம் சேர்க்கப்பட்டு அழைக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராமகிருஷ்ணன் தவிர்த்து, ரஷ்யாவைச் சேர்ந்தோரும், தற்போது பிரிட்டனில் வசிப்போருமான, பேராசிரியர்கள் ஆண்டர் ஜெய்ம் மற்றும் கான்ஸ்டான்டின் நோவோஸ்லெவ் ஆகிய இருவருக்கும், இந்த "நைட்ஹூட்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர, இந்தியர்கள் பலருக்கு பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
தினமலர்

நண்பன் திரைக்குப் பின்னால் உள்ள காட்சிகள்



பிரமாண்ட தயாரிப்பாளர் ஷங்கர் தயாரிப்பில் உருவாகி கொண்டிருக்கும் படம் நண்பன். திரைப்படத்தின் பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில சுவாரசியமான காட்சிகள் வெளியாகியுள்ளன.
பொங்கலின் புதுவரவாக திரையிடப்பட இருக்கும் நண்பன் படத்தின் திரைக்கு பின்னால் உள்ள காட்சிகளை காணொளியில் காணலாம்.

’Why this கொலவெறி‘ 2011ஆம் மிகப் பிரபலமான யூடியூப் பாடலாகும்!



2011 இன் 'Top Song' ஆக யூடியூப்பில் 40 மில்லியனுக்கு மேல் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது '3' திரைப்படத்துக்காக தனுஷ் பாடிய 'why this கொல வெறி' பாடல்.
2011 இன் மிக பிரபல்யமான யூடியூப் பாடலாக தெரிவாகியிருப்பது ஜஸ்டின் ஃபீபரின் பாடலோ அல்லது ஏற்கனவே தெரிந்த பாடகர்களுடைய பாடல்களோ அல்ல.

 இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாத ஒரு பாடல் என வர்ணிக்கிறார் சி.என்.என் இன் அலி வெல்ஷி. இதன் ஒரிஜினல் பாடலை யூடியூப்பில் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 28 மில்லியனை கடந்துள்ளதாம்.

 யூடியூப் Searching Box (தேடுதல் கட்டத்தில்) இல் வெறுமனே நீங்கள் Why என்று மட்டும் டைப் செய்தாலே, இப்பாடல் தான் காட்டுகிறதாம்.

 நூற்றுக்கு மேற்பட்ட இப்பாடலின் இமிடேஷன்கள் மற்றும் நியூசிலாந்து தெருக்களிலும் இப்பாடலுக்கு நடனமாடப்படும் ஃபிளாஷ் மாப் என இப்பாடல் மேலும் பிரபலம் ஆகிவருகிறது.

 கவனமாக வாகனம் ஓட்டுங்கள். ஹெல்மெட் அணியுங்கள் என இந்திய தெருக்களில் விளம்பர பலகைகளுக்கும் இந்த பாடல் வரிகளை பயன்படுத்த தொடங்கியிருக்கிரார்கள் என ஹிட்ஸுக்கு உதாரணமும் காட்டுகிறார் அலி வெல்ஷி. 'கொலவெறி ரசிகர்களே'! இப்போ சந்தோஷமா உங்களுக்கு!

 மேலதிக தகவல் : யூடியூப்பின் முதல் 100 பாடல்களுக்குள் 48 வது இடத்தை பிடித்திருக்கிறது 'கொல வெறி' பாடல்.
manithan.com

உலக அமைதிக்கான சிம்பு பாடிய Love Anthem Song



பிரபல பாப் பாடகர் ஏகான் மற்றும் ராப் இசைக்கலைஞர் ரிஹானா ஆகியோருடன் இணைந்து உலக அமைதிக்காக ஒரு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார் நடிகர் சிம்பு.
இதுவரை லூசுப்பெண்ணே... எவன்டி உன்ன பெத்தான் போன்ற பாடல்களை எழுதி இளைஞர்கள் மத்தியில் வரவேற்பும், பெண்கள் மத்தியில் அதிருப்தியையும் சம்பாதித்து கொண்ட சிம்பு, பெண்களையும் திருப்திபடுத்தும் விதமாக, சமீபத்தில் ஒஸ்தி படத்தில் பொண்டாட்டி பாடலை எழுதினார்.
இந்தபாடலை கேட்டு பலரும் தங்களுக்கு வரப்போகிற கணவர் இப்படி இருக்கமாட்டாரா...என்று பெண்களை ஏங்க வைத்தார். இந்நிலையில் இப்போது எல்லாவற்றுக்கும் மேலாக ஒருபடி மேலே போய், உலக அமைதிக்காக ஒரு பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார்.
பிரபல அமெரிக்க பாப் பாடகர் ஏகான் மற்றும் ராப் இசைக் கலைஞர் ரிஹானா ஆகியோருடன் சேர்ந்து இந்த பாடலை உருவாக்கிறார் சிம்பு. 96 மொழிகளில் காதல் என்று பொருள்படும் வார்த்தைகளை இப்பாடலில் பயன்படுத்தி இருக்கிறார் சிம்பு.
96 மொழிகளையும், பல கோடி மக்களையும் இணைக்க, தடைகளை உடைத்து, அனைவரும் உடையாத பந்தங்களாக.. இதோ உலக அமைதிக்காக ஒரு இந்தியனின் சிறு பங்களிப்பு என்று சிம்பு சொல்லியிருக்கிறார்.
மேலும் அன்புக்கான பாடலாக, உலகத்தின் அன்பு கீதமாக இந்த பாடல் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.நேற்று வெளியான இப்பாடல், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் தனுஷின் கொலவெறி பாடல், அவரை பிரதமர் விருந்தில் பங்கேற்கும் அளவுக்கு கொண்டு போய் நிறுத்தியுள்ளது. இதனால் புகழின் உச்சியில் இருக்கிறார் தனுஷ்.
அதேபோல் சிம்புவும், தனுஷூக்கு நிகராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சி தான், இந்த உலக அமைதி பாடல் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.
manithan.com

சென்னையில் 10 முகாம்களில் பொதுமக்கள் தஞ்சம்: 54 இடங்களில் மரம் விழுந்தது: நிவாரண ஏற்பாடுகள் தீவிரம்

சென்னையில் 10 முகாம்களில் பொதுமக்கள் தஞ்சம்: 54 இடங்களில் மரம் விழுந்தது: நிவாரண ஏற்பாடுகள் தீவிரம் சென்னை, டிச. 30- 
 
சென்னையில் நேற்று இரவு வீசிய சூறைக்காற்றில் 54 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த மரங்கள் அனைத்தும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன. பாண்டி பஜாரில் மரம் விழுந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் சேதம் அடைந்தது.
 
மயிலாப்பூர் இசபெல்லா ஆஸ்பத்திரி அருகில் வேரோடு மரம் சாய்ந்தது. வேளச்சேரி ராஜலட்சுமி நகர், சைதாப்பேட்டை சி.ஐ.டி. நகர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்தன. ஓட்டேரி, அண்ணா சாலை ஜிம்கானா கிளப் அருகில் ஆகிய 2 இடங்களில் மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால் அப்பகுதியில் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது.  
 
சென்னையில் கடலோர பகுதிகளில் வசித்து வந்தவர்களில் 2,730 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் 10 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. 8 பள்ளிகள், 2 சமுதாய கூடங்களில் நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.
 
இவர்களுக்கு உணவு வழங்குவதற்காக 4 இடங்களில் சமையல் கூடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளவர்களுக்கு நேற்று மட்டும் 15 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்று காலையில் 9 ஆயிரத்து 500 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. 4 ஆயிரத்து 500 பிரட் பாக்கெட்டுகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  
 
சென்னையில் உள்ள சுரங்க நடைபாதைகள் மற்றும் ரெயில்வே மேம்பாலங்களுக்கு அடியில் தேங்கும் தண்ணீரையும் மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றி வருகிறார்கள். மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் 88 பம்புகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழை வெள்ளம் தேங்கினால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல, 6 படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
 
சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் இணைந்து நிவாரண ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர்.
maalaimalar.com

சென்னையில் சூறைக்காற்று: 50 விமானங்கள் தாமதம்

சென்னையில் சூறைக்காற்று: 50 விமானங்கள் தாமதம் ஆலந்தூர், டிச. 30-
 
'தானே' புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் சென்னை உள்நாட்டு, பன்னாட்டு விமான நிலையங்களில் விமானங்கள் வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
 
சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர்,உள்ளிட்ட நக ரங்களுக்கு செல்லும் விமா னங்கள் 3 முதல் 5 மணி வரைதாமதமாக வந்து செல்கிறது.
 
இதே போல் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் விமானங்களும் தாமதமாக வருகிறது. மலேசியாவில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு 11.30 மணிக்கு வந்து 12.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 9 மணி நேரம் தாமதமாக இன்று காலை 8.40 மணிக்கு வந்தது. பின்னர் 9.40 மணிக்கு மீண்டும் மலேசியா புறப்பட்டு சென்றது.
 
இதே போல் அதிகாலை 4.30 மணிக்கு வரவேண்டிய குவைத் ஏர்லைன்ஸ் விமானம் காலை 7.10 மணிக்கு வந்தது. காலை 6.15 மணிக்கு வரவேண்டிய ஓமன் ஏர்லைன்ஸ் பகல் 12.30 மணிக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. சார்ஜாவில் இருந்து வரவேண்டிய 5 விமானங்களும் தாமதமாக வந்தன.
 
சூறைக்காற்று காரணமாக நேற்று மதியம் முதல் இன்று பிற்பகல் வரை 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்து செல்வதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
maalaimalar.com

தானே புயல்: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

தானே புயல்: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு புதுச்சேரி, டிச. 30-    
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியை மிரட்டி வந்த தானே புயல் இன்று காலை கரையைக் கடந்தது. இதில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 12 பேர் தமிழகத்திலும் 7 பேர் புதுச்சேரியிலும் பலியாகியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.
 
விழுப்புரம் மாவட்டம் கோட்டைக்குப்பம் பகுதியில் மரம் பெயர்ந்து விழுந்ததில் பிரகாஷ் என்பவர் வீடு இடிந்தது. இதில் சிக்கிய பிரகாசின் மனைவி சுகந்தி வீட்டுக்குள்ளேயே உயிரிழந்தார்.    
 
சங்கராபுரம் ஆலந்தூரில் குருவப்ப நாயுடு என்ற முதியவர் இன்று அதிகாலை தெருவில் கிடந்த மின்கம்பியை மிதித்தார். இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பிணமானார்.  
 
அதுபோல புதுச்சேரி உப்பளம் பிரான்சுவா தோட்டத்தில் ஒரு வீடு இடிந்தது. வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலருக்கு காயம் ஏற்பட்டது.   வானூரில் வீடு இடிந்து ஒருவர் பலியானார். 6 பேர் காயம் அடைந்தனர்.
 
ஆவடி பட்டாபிராமில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முன்னாள் ராணுவ வீரர் ஏசுதாஸ் (67) மின்சாரம் தாக்கி இறந்தார்.
 
புயலின் கோர தாண்டவத்தில் தமிழகத்தில் பலத்த பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அதோடு உயிர்ச்சேதமும் ஏற்படுவது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தை சேர்ந்த 10 குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேசிய பேரிடர் மீட்புப்பணிப் படையைச் சேர்ந்த 15,000 வீரர்கள் மீட்பு பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
 
மீட்புப்பணி உதவிகளுக்கான தொலைபேசி எண்கள்
 
சென்னை மாநகராட்சி - 1913, 044-25619237
காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் - 1077,
காஞ்சீபுரம் போலிஸ் கட்டுப்பாட்டு அறை - 9445465536, 04112-27238001
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் - 04116 - 27661200
திருவள்ளூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறை - 04116 - 27661010
maalaimalar.com

நிவாரண பணிகளுக்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு: முதல்வர்

சென்னை: தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இதில் உடனடி நிவாரணம், அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்தப்படும். சாலைகளில் சாய்ந்து கிடக்கும் மரங்களை உடனடியாக அகற்றவும், சேதமடைந்துள்ள மின்கம்பங்களை சரி செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். புயல் இழப்பு சேத மதிப்பீடுகளை உடனடியாக கணக்கீடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சேத விபர அறிக்கைகளை விரைந்து அளிக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தினமலர்

தொண்டர்களுக்கு ஜெயலலிதா எச்சரிக்கை

சென்னை: அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்பவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என முதல்வர் ஜெயலலிதா தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை வானரகத்தில் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் பேசிய முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, அ.தி.மு.க.,வின் தேசிய அளவிலான வெற்றிக்கு தொண்டர்கள் இப்போதிலிருந்தே தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு உண்டு என்றும், அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த பிரமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக அ.தி.மு.க., உருவெடுக்கும் என்று கூறிய ஜெயலலிதா, அடுத்து அமையவுள்ள மத்திய அரசில் அ.தி.மு.க., பங்கெடுக்கும் என்றும் உறுதிபட தெரிவித்தார். தொண்ரடர்களிடம் பதவியிலிருப்பவர்கள் தோழமையுடன் பழக வேண்டும். தலைமை மீது சந்தேகம் கொண்டு பேசுபவர்களுக்கும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வோருக்கும் மன்னிப்பே கிடையாது என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.
தினமலர் 

"தானே' புயல் கரையை கடந்தது :ஓடுகள் பறந்தன ; மரங்கள் முறிந்தன; மின்சாரம் துண்டிப்பு

 
சென்னை: வங்க கடலோரத்தில் மையம் கொண்டுள்ள "தானே' புயல் இன்று காலையில் கரையை கடந்து வருகிறது. கடலூர் மற்றும் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் போது கடும் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை இருக்கும் என்பதால் கடலோர மாவட்ட பகுதி மக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். புயல் தாக்கும் என்ற பகுதியில் வாழும் மக்கள் மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் கடலூர் பெரும் பாதிப்பை சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.
சென்னைக்கு தென்கிழக்கே 800 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள குறைவழுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலில், சென்னையிலிருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே 107.526 கடல் மைல் தூரத்தில் மையம் கொண்டிருக்கும், "தானே' புயல், படிப்படியாக நகர்ந்து, இன்று காலை, புதுச்சேரி - கடலூர் இடையே கரையைக் கடக்கிறது. இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ., சூறைக்காற்றுடன் இன்று பலத்த மழை பெய்யும். கரையை கடக்கும் பகுதியில், மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையிலிருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே, 456.989 கடல் மைல் தூரத்தில், "தானே' புயலாக உருவெடுத்தது. இதன் காரணமாக, கடந்த நான்கு நாட்களாக கடல் கொந்தளிப்பாகக் காணப்படுகிறது.புயல் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை, சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. ஆனால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் பலத்த காற்றை தொடர்ந்து நள்ளிரவு முதல் மழை, விட்டு விட்டு பெய்யத் துவங்கியது.நெல்லூருக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என, முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது புதுச்சேரி அருகே இன்று காலை கரையை கடக்கும் பகுதியில் மணிக்கு 135 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்று இரவு முதல் புதுச்சேரி மற்றும் கடலூர், சென்னை நாகை , உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. கடலூர் மற்றும் புதுச்சேரியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை யொட்டிய பகுதிகளில் குடிசை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகள் காற்றில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. புயல் தாக்கும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடல் கொந்தளிப்பு மட்டும் இருந்தது. பெருத்த சேதம் ஏற்பட்டதாக இதுவரை எவ்வித தகவலும்இல்லை. மழை மட்டும் தொடர்ந்து பெய்து வருகிறது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விழுப்புரத்தில் ஒருவர் பலி: விழுப்பரம் மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது; கடுமையான காற்றும் வீசி வருகிறது. சங்கராபுரத்தில் மரம் விழுந்து ஒருவர் பலியானார். வானூர்- மரக்காணம் பகுதியில் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதில் சிலர் காயம் அடைந்தனர். இந்த பகுதியில் அதிகாரிகள் முகாம் இட்டுள்ளனர். கடும் காற்று காரணமாக மரங்கள், மொபைல் கோபுரங்கள் விழுந்து, கிழக்கு கடற்கரை சாலை, விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தினமலர்

மின்கம்பி அறுந்து விழுந்து மாடுகள் சாவு

திருவள்ளூர், டிச.29: புயல் காரணமாக வீசிய பலத்த காற்றில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால் திருவள்ளூர் அருகே 2 பசு மாடுகள், ஒரு கன்று ஆகியவை வியாழக்கிழமை உயிரிழந்தன.

 திருவள்ளூர் மாவட்டத்தில் தானே புயல் காரணமாக பரவலாக லேசான மழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. செவ்வாப்பேட்டையை அடுத்த அயத்தூர் சீனிவாசா நகரில் வியாழக்கிழமை பிற்பகலில் பலத்த காற்று வீசியது. இதில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது.

 இதில் அயத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோதண்டரெட்டி என்பவரது 2 பசுமாடுகள், 1 கன்று ஆகியவை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். இதுகுறித்து கோதண்டரெட்டி கொடுத்த புகாரின் பேரில் செவ்வாப்பேட்டை போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை

திருவள்ளூர், டிச.29: தானே புயல் காரணமாக பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி அறிவித்துள்ளார்.

 வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தானே புயலால் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி அறிவித்துள்ளார்.

புயலால் திசை மாறி ஆந்திரத்தில் கரை சேர்ந்த மீனவர்கள் மீட்பு

கும்மிடிப்பூண்டி, டிச.29: தானே புயல் காரணமாக திசை மாறி இஸ்ரோ கட்டுப்பாட்டில் ஆந்திர எல்லையில் கரை சேர்ந்த தமிழக மீனவர்களை தமிழக போலீஸôர் மற்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனர்.

 திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளான பாட்டை குப்பம், நொச்சிக்குப்பம், பெத்தானியா குப்பம், வெங்கடேசபெருமாள் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 122 மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

 இந்நிலையில் தானே புயல் காரணமாக திசை மாறி ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள இஸ்ரோவுக்குச் சொந்தமன ஸ்ரீஹரிக்கோட்டாவை அடுத்த புளியஞ்சேரிகுப்பம், ஜோனாபாளையம் ஆகிய தடை செய்யப்பட்ட பகுதிகளில் மீனவர்கள் 122 பேர் கரை சேர்ந்தனர். அப்போது அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

 இதுகுறித்து மீனவர்கள் ஆரம்பாக்கம் ஊராட்சித் தலைவர் ஆறுமுகத்துக்கு தகவல் கொடுத்ததை அடுத்து ஊராட்சித் தலைவர் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி குமார், இன்ஸ்பெக்டர் வேணுகோபால், ஒன்றிய குழு தலைவர் குனம்மாள் கோபால் ஆகியோர் கூடூர் ஆர்டிஓ வீரபாண்டியனிடம் மீனவர்கள் தொடர்பாக பேசினர்.

 பின்னர் போலீஸôர் மற்றும் அதிகாரிகள் 6 வேன்களில் ஆந்திர மாநிலம் சென்று 122 மீனவர்களையும் மீட்டு அழைத்து வந்தனர்.

அமெரிக்க விசா கோரி விண்ணப்பித்தார் ஏமன் அதிபர்

வாஷிங்டன் : ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே, மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, அமெரிக்காவிடம் விசா கோரி விண்ணப்பித்துள்ளார். ஏமனில், அதிபர் சலேவுக்கு எதிராக, மக்கள் கடந்த 10 மாதங்களாகப் போராடி வருகின்றனர். வளைகுடா நாடுகள் கூட்டுறவு கவுன்சில் ஒப்பந்தப்படி, அடுத்தாண்டில் அதிபர் தேர்தல் நடக்கும். இதுவரையில் அதிபர் செய்த குற்றங்களுக்கு அவர் மீது வழக்குகள் போடப்பட மாட்டாது.
ஆனால், அதிபர் தனது ஆட்சியில் ஆயிரக்கணக்கானோரை ராணுவம் மூலம் கொன்று குவித்ததற்கு தண்டனை பெற வேண்டும் என, மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாட்டில் அமைதி நிலவவும், மருத்துவ சிகிச்சை பெறவும் அமெரிக்கா செல்ல சலே முடிவெடுத்தார். இதற்காக, அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும், அதற்கு அமெரிக்கா அனுமதியளித்ததாகவும் செய்திகள் வெளியாயின.
ஆனால், நேற்று முன்தினம் வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில், சலேவுக்கு அனுமதியளிப்பது குறித்து இன்னும் ஆலோசித்து வருவதாகவும், அவர் விசாவுக்காக விண்ணப்பிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று ஏமனில் உள்ள அமெரிக்க தூதரகத்தில், மருத்துவ சிகிச்சைக்காக விசா கோரி சலே விண்ணப்பித்துள்ளார். இத்தகவலை, ஏமன் ஆளும் கட்சி மூத்த பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், அவரது விண்ணப்பம் மீதான பரிசீலனை தொடர்வதாக, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் நேற்று, மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ஜப்பான் - இந்தியா உறவு : பீதியில் சீனா புலம்பல்

politics பீஜிங் : "சீனாவை அடக்கி வைப்பதற்காக இந்தியாவோடு உறவாடி வருகிறார் ஜப்பான் பிரதமர்' என சீனாவின் அதிகாரபூர்வ நாளிதழ் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளது. ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடா, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது குறித்து, சீனாவின் அதிகாரபூர்வ நாளிதழான "சைனா டெய்லி' யில் நிபுணர்கள் கூறியதாக எழுதப்பட்டிருப்பதாவது: ஆசிய பசிபிக் நாடுகளுடன் ஜப்பான் தனது உறவுகளை அதிகரித்து வருகிறது. இந்த நாடுகளுடனான பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகள் மூலம் சீனாவை கொஞ்சம் அடக்கி வைக்கலாம் என ஜப்பான் கருதுகிறது.
இந்த அடிப்படையில் தான் ஜப்பான் பிரதமர் நோடா, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த இரு நாடுகளும், தங்கள் மண்டல ஒத்துழைப்பை பாதுகாப்பு ரீதியில் மட்டுமல்லாமல், வர்த்தக ரீதியிலும், சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. ஜப்பானின் இந்த ஒத்துழைப்பு இதுவரை, இரு முனை உறவாக இருந்து வந்தது. தற்போது, பலமுனை உறவாக அதாவது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா என பரிணமித்து வருகிறது.
சீனா அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்தியாவும், ஜப்பானும் கடந்த ஐந்தாண்டுகளில் தங்கள் உறவை, அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த உறவாக மாற்றி வருகின்றன. மேலும், வெளிநாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதி மீதான தடையை ஜப்பான் நீக்கியதும் சீனாவுக்கு மிகப் பெரிய ஆபத்தையே விளைவிக்கும். இதன் மூலம் ஜப்பான், தனது வான்வெளி மற்றும் கடற்படைகளின் வலுவை அதிகரிக்கும். உலகளவிலான ஆயுத ஏற்றுமதியை இந்த தடை நீக்கம் மாற்றிவிடும். ராணுவத் தளவாடங்களில் பயன்படுத்தப்படும் மின்னணுக் கருவிகள் உற்பத்தியில் ஜப்பான் கடும் போட்டியைத் தருவதால், ரஷ்யாவின் சந்தை பாதிக்கப்படும்.
தடை நீக்கத்திற்கு முன்பாக, அமெரிக்காவிடம் ஜப்பான் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். இதன் மூலம் இந்த இரு நாடுகளும், சந்தர்ப்பத்திற்கேற்ப, ஆசிய பசிபிக் நாடுகள் தொடர்பான தங்கள் கொள்கைகளை, பரஸ்பரம் அனுசரித்துக் கொள்ளும் என்பது புலப்படுகிறது. இது சீனாவுக்கு எதிர்மறையான விளைவுகளையே தரும். இவ்வாறு அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://img.dinamalar.com/data/gallery/gallerye_001215671_375329.jpg



சென்னை: வங்கக் கடலில், கிழக்கு மற்றும் தென்கிழக்கே, 268.817 கடல் மைல் தூரத்தில் மையம் கொண்டிருக்கும், "தானே' புயல், நாளை (30ம் தேதி), நெல்லூருக்கும், கடலூருக்கும் இடையே கரையைக் கடக்கிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக் கூடும் என்றும், 24 மணி நேரத்தில், அது கரையை நெருங்கும் போது, வலுவிழக்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 20ம் தேதி துவங்கியது. வங்கக் கடலில் பல முறை உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக, சீசனில் கிடைக்க வேண்டிய மழையை விட, தமிழகத்தில் கூடுதலாக மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும், இயல்பை விட அதிக மழை கிடைத்தது.

வழக்கமாக, மார்கழி மாதத்தில் தான் பனிப்பொழிவு துவங்கும். ஆனால், இந்த ஆண்டு தட்பவெப்பநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால், முன்னதாகவே பனி பொழியத் துவங்கியது. இதன் காரணமாக, தமிழகத்தில் இரவு நேரத்தில், 19 டிகிரி செல்சியசை ஒட்டியே, வெப்பளவு இருந்தது. இதனால், அதிகமான பனிப்பொழிவு உணரப்பட்டது.
சில வாரங்கள் ஓய்வுக்குப் பின், தென்கிழக்கு வங்கக் கடலில், கடந்த 24ம் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது மேலும் வலுப் பெற்று, கடந்த 26ம் தேதி, தென்கிழக்கு வங்கக் கடலில், சென்னையிலிருந்து தென்கிழக்கே, 456.989 கடல் மைல் தூரத்தில், புயலாக உருவெடுத்தது. இதற்கு, "தானே' என, பெயர் சூட்டப்பட்டது. இதன் காரணமாக, கடல் கொந்தளிப்பாகக் காணப்படுகிறது. கடல் சீற்றத்தால், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் கிராமங்களில், தண்ணீர் புகுந்துள்ளது. கரையோரம் நிறுத்திய படகுகள், கடலில் அடித்துச் செல்லப்பட்டன; பல படகுகள் சேதமடைந்தன. நேற்று காலை 5:30 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து தென்கிழக்கே, 322.580 கடல் மைல் தூரத்தில் மையம் கொண்டுடிருந்த "தானே' புயல், வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. நேற்று பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து தென்கிழக்கே, 268.817 கடல் மைல் தூரத்தில், மையம் கொண்டுள்ளது. நாளை (30ம் தேதி) காலை நெல்லூருக்கும், கடலூருக்கும் இடையே தானே புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் எச்சரிக்கை கூண்டு

புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு, 90 முதல் 100 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். இதனால், கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படும். இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். சூறைக்காற்றில், மரங்கள் வேரோடு சாயலாம்.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், எண்ணூர், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில், புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது; பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கடல் சீற்றம் காரணமாக, அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்புகின்றன. நேற்று மாலை முதல், பலத்த சூறைக்காற்றும் வீசத் துவங்கியது.
தமிழகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பள்ளிக் கல்வி நிர்வாகத்திற்கும், புயல் எச்சரிக்கை குறித்து, அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கடலோர மாவட்டங்களில் வசிக்கும் பகுதியில் பாதிப்பு அதிகமிருக்கும் இடங்களில் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆறுதல் : இவ்வளவு எச்சரிக்கைகளுக்கும் இடையே, புயல் தரையை நெருங்கும் போது, சற்றே வலுவிழக்கும் வாய்ப்புள்ளது எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது, சற்று ஆறுதலான செய்தி.
கடலூர் துறைமுகத்தில் 8ம் எண் கொடியேற்றம் : வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் கரையை நோக்கி நகர்ந்து வருவதால், கடலூர் துறைமுகத்தில் 8ம் எண் எச்சரிக்கைக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நேற்று முன்தினம் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது மேலும், தீவிரமடைந்து புயலாக மாறி கடலூருக்கும், நெல்லூருக்குமிடையே கரையை கடக்கும் என, வானிலை மையம் நேற்று அறிவித்தது. தற்போது அந்த புயலுக்கு, "தானே' என பெயரிடப்பட்டுள்ளது. "தானே' புயல் கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால், சென்னைக்கு தென் கிழக்கே 400 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல், கடலூர்-நாகப்பட்டினமிடையே நாளை (30ம் தேதி) கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கனமழையுடன் 60 முதல் 65 கி.மீ., வரை பலத்த சூறைக் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக, கடலூர் துறைமுகத்தில் எச்சரிக்கைக் கொடி எண்.8 ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

நாரதர் வேலை பார்க்கிறார் ஜெட்லி: சிங்வி கடும் தாக்கு ; லோக்பால் மசோதா: ராஜ்யசபாவில் காரசாரம்

Top news புதுடில்லி: லோக்பால் மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும், தி.மு.க.,உள்பட எதிர்கட்சிகளான பா.ஜ., இடதுசாரிகள் , அ.தி.மு.க., மற்றும் பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், கட்சியினர் வலியுறுத்துவதால் இன்று ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா நிறைவேறுமா என்ற நிலையில் விவாதம் சென்று கொண்டிருக்கிறது. 
பலமில்லாத லோக்பால் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாகவும், திருத்தப்பட்ட மசோதா கொண்டு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்றும் இன்றைய ராஜ்யசபாவில் பா.ஜ., கட்சி தலைவர் அருண்ஜெட்லி பேசினார். இவருக்கு பதிலடியாக காங்., மூத்த தலைவர் அபிஷேக்சிங்வி பேசுகையில்: அருண்ஜெட்லி எங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பிளவை ஏற்படுத்த நாரதர் முனி வேலை பார்க்கிறார் என்று கடுமையாக சாடினார். இவரது பேச்சுக்கு பா.ஜ., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
கார்ப்ரேட் நிறுவனங்கள் : நாட்டில் உள்ள தனியார் கார்ப்பேரட் நிறுவனங்கள் லோக்பால் கண்காணிப்புக்குள் கொண்டு வரவேண்டும். இதன் மூலம் அரசியல்வாதிகள் இதில் பணம் போடுவதை தடுக்க முடியும். லோக்பால் கூட்டாட்சி தத்துவத்தை கேள்வி எழுப்புகிறது. அரசியலமைப்புக்கு எதிரானதாக இருக்கிறது. வலுவான சட்டமாக இயற்ற வேண்டும். திருத்தப்பட்ட மசோதாவை அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு இடதுசாரி தலைவர்களில் ஒருவராஜ சீததாராம்யெச்ச;ரி பேசினார். லோக்பால் மசோதாவை ராஜ்யசபாவில் பிரதமர் அலுவலக விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி இன்று காலையில் தாக்கல் செய்தார். தாக்க்ல் செய்து பேசிய போது இந்த மசோதா 40 ஆண்டுகாலமாக தற்போது கெண்டு வரப்பட்டுள்ளது. இதில் தேவையான அம்சங்கள் உள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார். அவை துவங்கியதும் இன்று பிரதமர் வரவில்லை. இதனால் எதிர்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். ஒரு கூட்டத்தில் இருப்பதாகவும், அவர் விரைவில் வருவார் , மாலையில் அவர் மசோதா தொடர்பாக பேசுவார் என ஆளும் கட்சியினர் தெரிவித்தனர். ஆனால் தொடர்ந்து எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் அவைத்தலைவர் அன்சாரி அவையை 10 நிமிடங்கள் ஒத்தி வைத்தார். பின்னர் அவை கூடியதும் பிரதமரும் வந்திருந்தார். முன்னதாக இந்த மசோதா நிறைவேற்றுவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து காங்., உயர்நிலை குழு காலையில் அவசரமாக கூடி விவாதித்தது. 
லோக்பாலை பொம்மையாக வைத்திருக்கிறது அரசு: இன்றைய விவாதத்தின்போது பேசிய பா.ஜ., மூத்த தலைவரான அருண்ஜெட்லி கூறுகையில்: இந்த மசோதா பலமில்லாததாக உள்ளது. நாங்கள் விரும்புவது பலமான மசோதா. மத்திய அரசு ஒரு பொம்மை போன்ற லோக்பால் மசோதாவை கொண்டு வந்திருக்கிறது. மாநில அரசின் அதிகாரத்தில் தலையிட அனுமதிக்க முடியாது. சி.பி.ஐ., தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக விளங்க வேண்டும். ஊழல் ஒழிப்பு மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏதுவான விஷயங்கள் இந் மசோதாவில் இல்லை. நாட்டு மக்களின் கருத்ததை நாம் மதிக்க வேண்டும். இந்த மசோதா கொண்டுவரும் நேரத்தில் அனைத்து கட்சியினரின் உண்மை முகத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். இது போன்ற பலமில்லாத இந்த மசோதாவை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அருண்ஜெட்லி பேசினார். நாரதர் வேலை பார்க்கிறார் ஜெட்லி:நாரதர் வேலை பார்க்கிறார் அருண் ஜெட்லி என்று காங்., மூத்த தலைவரும் பார்லி., நிலைக்குழுதலைவருமான அபிஷேக்சிங்வி கூறினார். அவர் ராஜ்யசபாவில் பேசுகையில்: இந்த மசோதா கூட்டாச்சி தத்துவத்தை தாக்குவதாக அமையவில்லை. பா,ஜ., நாட்டு மக்களுக்கு அரசு குறித்து தவறான எண்ணத்தை உருவாக்குகிறது. அருண்ஜெட்லி திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவை அவரது கட்சி நலனுக்காக கேட்கிறார். இதுபோன்று பேசி எங்கள் கூட்டணியை உடைக்க முயற்சி செய்கிறார். இது போன்ற நாரதர் வேலைலையத்தான் ஜெட்லி பார்க்கிறார். லோக்பால் மசோதா வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற உண்மை நிலையை பா.ஜ., தெரிவிக்க வேண்டும். தேர்ல் ஆணையம் போல லோக்பால் செயல்பட ‌முடியும். இவ்வாறு சிங்வி பேசினார்.