சென்னை: சென்னை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் முதல் கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி இன்று போடப்பட்டது.சென்னை, கோவை உட்பட தமிழ்நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்டோருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே விவசாயி ஒருவர் ஏற்கெனவே பலியாகியுள்ளார்.
இந்நிலையில் வேலூரிலும் நேற்று ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
டாமி புளு மாத்திரைகள்
இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாமிபுளு மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 4 லட்சம் மாத்திரைகள் தயாராக உள்ளன.
தடுப்பூசிகள்
மேலும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்துகளும் இன்று முதல் கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கு போடப்பட்டுள்ளன.. மத்திய அரசிடம் இருந்து மொத்தம் 25 ஆயிரம் தடுப்பு ஊசி மருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் தடுப்பு ஊசி மருந்துகளை தமிழக சுகாதாரத்துறை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்த்து காத்திருக்கிறது. இவை வந்த பிறகு பிற மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளன.