டெல்லி: இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக பிக்ரம் சிங்கை நியமிக்க தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.தற்போதைய ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கின் பதவிக் காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து கிழக்குப் படைப் பிரிவின் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பிக்ரம் சிங் புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் பிக்ரம் சிங்கை புதிய தலைமை தளபதியாக நியமிக்கக் கூடாது என்று கோரி முன்னாள் கடற்படை தளபதி லட்சுமிநாராயண் ராம்தாஸ் தலைமையிலான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் குழு உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த அதிகாரிகள் குழு தாக்கல் செய்த மனுவில், அரசியல் செல்வாக்கினாலே பிக்ரம் சிங்குக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் 2001-ம் ஆண்டு மார்ச் மாதம் காஷ்மீரில் போலி என்கவுன்ட்டர் மூலம் 60 வயது முதியவரை சுட்டுக் கொன்றவர் என்றும்,
காங்கோவில் அமைதி காக்கும் படையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் மீதான பாலியல் பலாத்கார புகார்களை விசாரிக்கக் கூட முன்வாராதவர் பிக்ரம் சிங் என்றும் கூறப்பட்டுள்ளது.
1999 கார்கில் போரின் போது ராணுவ செய்தித் தொடர்பாளராக பதவி வகித்த பிக்ரம் சிங் மீது மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் குழுவின் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.