புனேயில், காரில் ஹாரன் அடித்தற்காக டாக்டர் ஒருவர் மீது கற்களை வீசி 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில், டாக்டரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.புனேயிலுள்ள மஹதிபாக் காலனியை சேர்ந்தவர் பசல் ஷேக். டாக்டரான இவர் கடந்த சனிக்கிழமை காலை 11 மணியளவில் வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து குயெட்டா காலனியில் உள்ள தனது கிளினிக்குக்கு காரில் சென்றார்.
வழியில் உள்ள ரயில்வே கிராசிங்கில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்ததால், மாற்று வழியில் செல்ல அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக, முன்னாள் நின்ற பைக்கை வழிவிட செய்வதற்காக ஹாரன் அடித்துள்ளார். ஆனால், பைக்கில் வந்தவர்கள் வழிவிடாததால் தொடர்ந்து ஹாரன் அடித்ததாக தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த பைக்கில் வந்த 2 இளைஞர்கள் வேகமாக இறங்கி வந்து டாக்டரை அடித்துள்ளனர். பயந்துபோன டாக்டர் உடனடியாக காரின் கதவை பூட்டியுள்ளார். ஆனால், ஆத்திரம் அடங்காத அந்த 2 இளைஞர்களும் கற்களை எடுத்து வந்து டாக்டரின் கார் மீது வீசி தாக்கியுள்ளனர்.
இதில், காரின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. மேலும், டாக்டரின் தலையிலும் கண்ணாடிகள் கிழித்து காயம் ஏற்பட்டது. சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து 2 இளைஞர்களையும் மடக்கி பிடித்தனர். போலீசுக்கு தகவல் தெரிவித்து, 2 இளைஞர்களும் தப்பிவிடாதபடி பிடித்து வைத்திருந்தனர்.
பின்னர், 2 இளைஞர்களும் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். தலையில் காயம் ஏற்பட்டதால் அருகிலிருந்த மருத்துவமனையில் டாக்டர் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 2 இளைஞர்கள் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.