இடைத் தேர்தல் வருதுல்ல.. புதுக்கோட்டைக்கு ரூ. 50 கோடி சிறப்பு நிதி: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: புதுக்கோட்டையில் இடைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அந்த நகராட்சிக்கு சிறப்பு நிதியாக ரூ. 50 கோடியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ முத்துக்குமரன் விபத்தில் பலியானதையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடக்கவுள்ளது. அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் நீடித்து வரும் நிலையில், அந்தக் கட்சியிடம் ஆலோசனை ஏதும் நடத்தாமலேயே, அங்கு அதிமுக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் அந்தத் தொகுதிக்கான அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளுக்காக சிறப்பு நிதியாக ரூ. 50 கோடி ஒதுக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து சட்டமன்றத்தில் விதி என் 110ன் கீழ் முதல்வர் வாசித்த அறிக்கையில்,

இந்தியாவிலேயே விரைந்து நகர்மயம் ஆகி வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. நகரங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் வலு சேர்க்கும் இயந்திரங்கள் ஆகும். அதே நேரத்தில், நகர்ப்புரங்களில் மக்கள் தொகை பெருகி வருவதன் காரணமாக, அடிப்படை வசதிகளின் தேவைகள் அதிகரித்து வருகின்றன. இதனை நிறைவு செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

புதுக்கோட்டை நகரம் தமிழ்நாட்டின் பழம்பெரும் நகரங்களில் ஒன்றாகும். இது வரலாற்று பராம்பரியமும், சிறப்பும் கொண்ட ஒரு நகரம் ஆகும். புதுக்கோட்டை மாவட்டம் 1974ம் ஆண்டு புதிய மாவட்டமாக மலர்ந்தது. ஆனால் அதற்கு 62 ஆண்டுகளுக்கு முன்னரே புதுக்கோட்டை நகராட்சி உருவாக்கப்பட்டது. 1912ம் ஆண்டில்துவக்கப்பட்ட புதுக்கோட்டை நகராட்சி 100 ஆண்டுகளை இந்த ஆண்டு நிறைவு செய்திருக்கிறது.

10.82 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தோற்றுவிக்கப்பட்ட இந்நகராட்சி தற்போது புதுக்கோட்டை ஊராட்சிப் பகுதி முழுவதுமாக இணைத்து எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 21.95 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக உயர்ந்துள்ளது. எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டதன் காரணமாக, 42 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புதுக்கோட்டை நகராட்சியில் தற்போது 180 கி.மீ. நீளமுள்ள சாலைகள், 6355 தெரு விளக்குகள், 2 பூங்காக்கள், ஒரு பேருந்து நிலையம், 43 பள்ளிக் கட்டடங்கள் மற்றும் பிற அலுவலக கட்டடங்கள், 10 நீர்த் தேக்கத் தொட்டிகள் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

நகராட்சிப் பகுதிகளில் சாலை அமைத்தல், மழைநீர் வடிகால்கள் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் குடிநீர் பணிகள் முதலான பல்வேறு பணிகளை மேற்கொள்ள 2011-12-ம் ஆண்டில், ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சி திட்டம் மற்றும் இதர திட்டங்களின் கீழ் கட்டமைப்பு வசதிகளுக்காக 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நகராட்சி 100 ஆண்டுகள் நிறைவு செய்யும் இந்த ஆண்டில், நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என புதுக்கோட்டை நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேலும், நூற்றாண்டு விழா காணும் இத்தருணத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்திட அரசிடம் நிதி உதவி கோரி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

புதுக்கோட்டை நகராட்சி நூறாண்டுகள் நிறைவு செய்துள்ளது என்பது பெருமைக்குரிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும். இதனை நினைவுகூரும் வகையில், புதுக்கோட்டை நகராட்சியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சிறப்பு உதவித் தொகையாக 50 கோடி ரூபாய் வழங்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதை இந்த மாமன்றத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், நூறாண்டுகள் நிறைவு செய்துள்ளதையொட்டி, நூற்றாண்டு விழா நினைவுத் தூண் மற்றும் நூற்றாண்டு விழா வளைவுகள் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன் என்றார் ஜெயலலிதா.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: