நம் நாட்டு கார் மார்க்கெட் பட்ஜெட் கார்களை அடிப்படையாக வைத்தே ஏற்றம் பெற்று வருகிறது. எனவே, ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் விலையிலான சிறிய கார்களை அறிமுகப்படுத்த உள்நாட்டு கார் நிறுவனங்கள் தவிர, வெளிநாட்டு கார் நிறுவனங்களும் கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளன.இதில், நடுத்தர மக்களின் நம்பிக்கையை பெற்ற மாருதி நிறுவனம் எந்தவொரு போட்டியையும் சமாளிக்கும் வகையி், அடுத்து அறிமுகப்படுத்த இருக்கும் புதிய 800 கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய சிறப்பு தொகுப்பில் மாருதியின் புதிய 800 கார், ரெனோ நிறுவனத்தின் காம்பெக்ட் எஸ்யூவி மாடலான டஸ்ட்டர் மற்றும் போர்ஷே நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் புதிய 911 கார்களின் விபரங்களை காணலாம்.
நியூ மாருதி 800:நம் நாட்டு சாலைகளில் பட்டி தொட்டியெங்கும் புகழ் பரப்பிய மாருதி 800 மாசுக் கட்டுப்பாட்டு பிரச்னைகளால் மாநகரங்களில் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்த இடத்தை நிரப்புவதற்கு சரியான மாடலாக புதிய 800 காரை மாருதி களமிறக்குகிறது.
பெயரில் மட்டும்தான் 800 ஒட்டிக்கொண்டிருக்கும். மற்றபடி, வடிவமைப்பில் முற்றிலும் மாறுபட்ட காராக இருக்கும். தற்போது ரகசியமாக சோதனை செய்யப்பட்டு வரும் இந்த கார் பாரத் ஸ்டேஜ் -5 விதிகளுக்கு உட்படும் 800 சிசி எஞ்சினுடன் வர உள்ளது.
அதிக மைலேஜ், தாராள இடவசதியுடன் வரும் இந்த கார் பழைய 800 காரைப் போலவே மாருதியின் கேம் சேஞ்சர் மாடலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கும் விலை: ரூ.2 லட்சம்
ரெனோ டஸ்ட்டர்:ப்ளூயன்ஸ், கோலியோஸ், பல்ஸ் வரிசையில் பிரான்சை சேர்ந்த ரினால்ட் அடுத்து களமிறக்க உள்ள காம்பெக்ட் எஸ்யூவிதான் டஸ்ட்டர். 105 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் எம்பிஎப்ஐ பெட்ரோல் எஞ்சின் மற்றும 85 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் டஸ்ட்டர் வருகிறது.
வரும் ஜூன் மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கும் டஸ்ட்டருக்கு இப்போதே புக்கிங் துவங்கிவிட்டது ரெனோ. ஆனால், விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. கம்பீரமான காம்பெக்ட் எஸ்யூவியை விரும்புவர்களுக்கு ஏற்ற மாடல். அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் உண்டு.
எதிர்பார்க்கும் விலை: ரூ.9 லட்சம்
போர்ஷே நியூ 911:ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் புகழ்பெற்ற போர்ஷே நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றாக 911 வரிசை கார்கள் திகழ்கின்றன. இந்த வரிசை கார்களை மேம்படுத்தி வரும் செப்டம்பரில் புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருகிறது போர்ஷே. முதலில் 3.4 லிட்டர் எஞ்சினுன் 911 கரீரா மற்றும் 3.8 லிட்டர் எஞ்சினுடன் 911 கூபே மாடல்களில் விற்பனைக்கு வருகிறது.
முதலில் 7 ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கொண்டதாக வருகிறது. வடிவமைப்பில் பல புதுமைகளுடன் கூடுதல் சிறப்பமசங்களுடன் வருதோடு, ஜோரான கையாளுமை மற்றும் அற்புதமான ரைடிங் அனுபவத்தை கொடுக்கும் வகையில் புதிய சேஸிஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேல்தட்டு வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.
எதிர்பார்க்கும் விலை: ரூ.90 லட்சம்