ரஷ்யாவிடமிருந்து அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியா வாங்கியுள்ளது. இதன் மூலம் இவ்வகையான நீர் மூழ்கி கப்பல்களை வைத்திருக்கின்ற நாடுகளின் வரிசையில் இந்தியா இணைந்துகொண்டுள்ளது.சுமார் 100 கோடி டொலர்கள் மதிப்புள்ள இந்த ரஷ்யத் தயாரிப்பு நீர்மூழ்கிக் கப்பலை இந்தியக் கடற்படை அடுத்த 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்கியுள்ளது.
இதன் மூலம் சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வரிசையில் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை வைத்திருக்கின்ற நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளது.
8,140 டன் எடையிலான அக்குலா-II வகையைச் சேர்ந்த இந்தக் கப்பல் ரஷ்யாவில் கே-152 நேர்பா என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இப்போது இந்தியா அதற்கு ஐ.என்.எஸ் சக்ரா II என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கான விழா ஆந்திரா மாநிலம் விசாகபட்டிணத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, இந்தக் கப்பலை அதிகாரப்பூர்வமாக கடற்படையிடம் சேர்த்தார்.
கப்டன் பி. அசோகன் தலைமையிலான 80 கடற்படை வீரர்கள் இந்தக் கப்பலில் பணியில் இருப்பார்கள்.
சர்வதேச சட்ட நியமங்களுக்கு அமைவாக, இந்தக் கப்பல் அணு ஆயுதங்கள் எதனையும் கொண்டுசெல்லாது, கப்பல்-ஏவுகணைகளை மட்டுமே சுமந்து செல்லும்.
அணுசக்தியால் இயங்கக்கூடிய இந்த நீர்மூழ்கிக் கப்பல் தரைக்கு வராமல் மூன்று மாதங்களுக்கு மேல் தொடர்ச்சியாக கடலுக்கு அடியில் பயணிக்கும் திறன் கொண்டது.
கடந்த 2009ம் ஆண்டிலேயே இந்தியாவிடம் இந்தக் கப்பல் ஒப்படைக்கப்படவிருந்தது. பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் அது தாமதமடைந்துவந்தது.
2008ம் ஆண்டு நவம்பரில், இந்தக் கப்பலில் தீயணைப்பு பொறிமுறை தவறுதலாக இயங்கியதால் ஏற்பட்ட விபத்தில் 20 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா, அதன் சொந்தத் தயாரிப்பிலும் அணுசக்தி-நீர்மூழ்கிக் கப்பலொன்றை உருவாக்கிவருகின்றது. இந்த ஆண்டுக்குள் அதுவும் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.