நியூயார்க்: இந்தி நடிகர் ஷாரூக்கானை 2 மணிநேரத்துக்கும் மேலாக நியூயார்க் விமான நிலையத்தில் தடுத்து வைத்ததற்காக மன்னிப்பு கோருவதாக அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஷாருக் கான் விவகாரத்தில் அமெரிக்கா தொடர்ந்து நடந்து கொள்ளும் விதத்தை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.முன்னதாக ஷாரூக்கான் தடுக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்குமாறு இந்திய தூதர் நிருபமா ராவிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியிருந்தார்.
ஒவ்வொருமுறையும் தடுப்பதும் பின்னர் மன்னிப்பு கோருவதும் ஒரு கொள்கையாகவே அமெரிக்கா வைத்திருப்பதை ஏற்க முடியாது என்று கூறுமாறும் கிருஷ்ணா தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க அரசிடம் இந்தியாவின் கண்டனத்தை நிருபமா ராவ் பதிவு செய்தார்.
இதையடுத்து அமெரிக்காவின் சுங்கத்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள், ஷாருக்கானை தடுத்து வைத்தற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளனர்.
யேல் பல்கலைக் கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக நியூயார்க் வந்திருந்தார். அப்போது அவரை 2 மணி நேரம் விமான நிலையத்திலேயே அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.
அதன் பின்னர் யேல் பல்கலைக் கழக மாணவர்களிடையே பேசிய ஷாரூக்கான், ஒவ்வொரு முறையும் அமெரிக்கா வரும்போதெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது என்று கூறினார்.