நெல்லை: கூடங்குளத்தி்ல் 3வது, 4வது அணு உலைக்களுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று 35 பஞ்சாயத்து தலைவர்கள் இந்திய அணு சக்தி தலைவர் ஜெயினை இன்று சந்தித்து வலியுறுத்தவிருக்கிறார்கள்.நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரூ.13,500 கோடி மதிப்பீட்டில் தலா 1000 மெகா வாட் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் அணு உலை மூலம் விரைவில் உற்பத்தியை தொடங்குவதற்காக ஊழியர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.
முதல் அணு உலையில் உற்பத்தியை தொடங்கிய பிறகு இரண்டாவது அணு உலையின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கிடையே கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள 3வது, 4வது அணு உலைகளின் பணிகளையும் உடனே தொடங்க வேண்டும் என்று இந்திய அணு சக்தி கழக தலைவர் ஜெயினை இன்று சந்தித்து வலியுறுத்த கூடங்குளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த 35 தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து அணு உலை ஆதரவு இயக்க தலைவர் விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம், செட்டிகுலம் பகுதியைச் சேர்ந்த 13 கிராம பஞ்சாயத்துகளின் வளர்ச்சி பணிகளுக்காக ரூ.500 கோடியில் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது. இதற்கான பட்டியல் அந்தந்த பஞ்சாயத்துகளின் சார்பில் கலெக்டரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி திட்ட பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட 13 பஞ்சாயத்துகள் தவிர்த்து எஞ்சியுள்ள ராதாபுரம் பஞ்சாயத்தைச் சேர்ந்த 35 பஞ்சாயத்து தலைவர்களும் அணு விஜய் நகரியத்தில் அணு சக்தி கழக தலைவர் ஜெயினை இன்று சந்திக்க முடிவு செய்துள்ளனர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.