| தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. மாணவ-மாணவிகள் தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவுக்கு, "அவலூர்பேட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர்களே பிட் கொடுப்பதால் நன்றாக படிக்காதவர்களும்கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள் என்ற நிலை இருப்பதாக" ஒரு மின்னஞ்சல் வந்தது. இதைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கு ஆட்சியர் ரகசியமாக சென்று ஆய்வு நடத்தினார். அப்போது கணித வினாக்களுக்கான பதில்கள் தயாரிக்கப்பட்டு ஜெராக்ஸ் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்ததை நேரடியாகப் பார்த்தார். இதைத் தொடர்ந்து ஆசிரியர்களிடம் பிட் இருக்கிறதா? என்று ஒவ்வொருவரையும் தனித்தனியாக சோதித்தார். அப்போது 7 ஆசிரியர்களிடம் இருந்த எராளமான பிட்டுகள் கைப்பற்றப்பட்டன. ஆசிரியர்கள் சிக்கியதைத் தொடர்ந்து மாணவர்களும் தங்களிடமிருந்து பிட்டுகளை ஜன்னலில் தூக்கி வீசி எறிந்தனர். மேலும் ஒரு ஆசிரியரிடமிருந்து ஆயிரம் ரூபாய் நோட்டும் ஒரு மாணவரின் தேர்வு எண்ணும் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பள்ளி நிர்வாகத்திடம் ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா நீண்ட நேரம் விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்சுல் மிஸ்ரா, மாணவர்களுக்கு பிட் கொடுக்க ஆசிரியர்களும் கல்வி அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். மிகவும் கண்டிப்பாக இருந்த தேர்வுமைய ஆசிரியர்கள் ரவுடிகளால் மிரட்டப்பட்டுள்ளனர். அவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார். மாணவர்களிடம் பிட் இருந்தால் ஆசிரியர்கள் பிடிப்பார்கள். மாணவர்களுக்காக ஆசிரியர்களே பிட் கொண்டுவந்தால் ஆட்சியர்தான் பிடிப்பாரோ? என்ற கேள்வி தற்போது பலர் மத்தியிலும் எழுந்துள்ளது. |
மாணவர்களுக்கு பிட்டு கொடுத்த 7 ஆசிரியர்கள் கைது
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail