இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்: "விக்கிபீடியா' அதிரடி

 நியூயார்க்: அமெரிக்க காங்கிரசில் தாக்கலாக உள்ள இரு மசோதாக்களை எதிர்த்து, இணையக் கலைக் களஞ்சியமான "விக்கிபீடியா' இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாகஅறிவித்துள்ளது.

இணைய தளங்களில் பதிப்புரிமை பெற்ற அறிவு சார் சொத்துக்களை பிறர் திருட்டுத் தனமாக எடுத்துப் பரப்புவதைத் தடுக்கும் வகையில், "இணையத் திருட்டு நிறுத்தல் சட்டம்' (எஸ்.ஓ. பி.ஏ.,) மற்றும் "அறிவுசார் சொத்து திருட்டு தடுப்புச் சட்டம் 2011' (ப்ரொடக்ட் ஐபி) இரு மசோதாக்கள், கடந்தாண்டு அக்டோபரில் அமெரிக்க காங்கிரசில் தாக்கலாயின. இவை அமெரிக்க காங்கிரசில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட உள்ளன. இம்மசோதாக்கள், இணைய தளங்களின் சுதந்திரச் செயல்பாடுகளை முடக்கி விடும் என கூகுள், யாஹூ மற்றும் விக்கிமீடியா உள்ளிட்ட பல்வேறு இணைய நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இம்மசோதாக்களை எதிர்த்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக இணைய கலைக் களஞ்சியமான "விக்கிபீடியா' அறிவித்துள்ளது.

இதுகுறித்து "விக்கிமீடியா' நிறுவனத்தின் தொடர்புத் துறைத் தலைவர் ஜே வால்ஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இம்மசோதாக்கள், இணையத்தின் சுதந்திர மற்றும் கட்டுப்பாடற்ற செயல்களை முடக்கிவிடும். அமெரிக்காவில் இயங்கிவரும் இணைய தளங்களை தணிக்கை செய்வதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்கித் தரும்' எனத் தெரிவித்துள்ளார். எனினும், இந்த வேலை நிறுத்தம் அமெரிக்காவில் மட்டுமே. உலகின் பிற பகுதியினர் வழக்கம் போல், "விக்கிபீடியா'வைப் பயன்படுத்தலாம். "விக்கிபீடியா'வைப் போல அமெரிக்காவில் இயங்கி வரும், சமூக செய்தித் தளமான "ரெட்டிட்', தொழில்நுட்ப இணையமான "போயிங் போயிங்' உள்ளிட்ட சில நிறுவனங்களும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.

36.50 கோடி வாசகர்களைக் கொண்ட விக்கிபீடியா: "விக்கிபீடியா அறக்கட்டளையின்' இலவச இணையதளம் தான் "விக்கிபீடியா'. இது 2001ம் ஆண்டு ஜன., 15ல் தொடங்கப்பட்டது. இதை நிறுவியவர் ஜிம்மி வால்ஸ். இதன் துணை நிறுவனராக லாரன்ஸ் மார்க் சஞ்சர் உள்ளார். இதன் பெயர், விக்கி + என்சைக்ளோ பீடியா என்ற இரு வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கபப்ட்டது. ஹவாய் மொழியில், "விக்கி' என்றால் விரைவு என்று அர்த்தம். என்சைக்ளோபீடியா என்றால் தகவல் களஞ்சியம் என அர்த்தம். பல்வேறு தகவல்கள் விக்கிபீடியாவில் சேமிக்கப்பட்டுள்ளன. 2 கோடி கட்டுரைகள் இந்த இணையதளத்தில் உள்ளன. இதில் 38 லட்சம் கட்டுரைகள் ஆங்கில மொழி கட்டுரைகள். இந்த இணையதளத்தின் சிறப்பம்சம், இக்கட்டுரைகள் அனைத்தும், உலகம் முழுவதும் உள்ள விக்கிபீடியா இணையதள பங்களிப்பாளர்கள் மூலம் எழுதப்பட்டவை என்பது தான். மேலும் ஒருவர் எழுதிய கட்டுரையை, தகுதியான ஆதாரத்துடன் திருத்துவதற்கு மற்றவருக்கு உரிமை உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு தகவலும் தரமான தரத்துடன் விக்கிபீடியா இணையதளத்தில் கொடுக்கப்படுகிறது. உலகம் முழுவதும் தற்போது ஒரு லட்சம் பங்களிப்பாளர்கள் (கட்டுரை எழுத்தாளர்கள்) இந்த இணையதளத்துக்கு உள்ளனர். 2012 ஜன., நிலவரப்படி 283 மொழிகளில் தகவல்கள் உள்ளன. "அலெக்சா' நிறுவன கருத்துக்கணிப்பின் படி, விக்கிபீடியாவிற்கு 36 கோடியே 50 லட்சம் வாசகர்கள் உள்ளனர். ஒரு மாதத்துக்கு 27 லட்சம் பக்கங்கள், அமெரிக்காவில் மட்டும் பார்க்கப்படுகிறது.
dinamala
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: