வாஷிங்டன்: அமெரிக்காவின் வரலாற்றுப் புகழ் பெற்ற நகர் ஒன்றின் மேயராக, இந்தியாவைச் சேர்ந்த சத்யேந்திர சிங் ஹூஜா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ளது சார்லொட்டஸ்வில்லே என்ற நகரம். அமெரிக்காவின் அதிபர்களாக இருந்த தாமஸ் ஜெபர்சன், ஜேம்ஸ் மேடிசன் மற்றும் ஜேம்ஸ் மன்றோ ஆகிய மூவரும், இந்நகரை சேர்ந்தவர்கள் தான். தலைநகர் வாஷிங்டனில் இருந்து 193 கி.மீ., தென்மேற்கில் உள்ள இந்நகரத்தில், மொத்தம் 43 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் இந்திய சீக்கியர் சத்யேந்திர சிங் ஹூஜா ஒருவர் தான். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர் விர்ஜினியா பல்கலைக் கழகத்தில், பேராசிரியராகப் பணியாற்றுகிறார். கடந்த 2007ல், நகர கவுன்சில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தற்போது மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டாண்டு கால மேயர் பதவியில், நகர மேம்பாட்டிற்காக உழைக்கப் போவதாக, சிங் உறுதியளித்துள்ளார்.