ரோம்: இத்தாலியில் பாறை மீது மோதி கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்து காணாமல் போனவர்களின் எண்ணிக்கை, 29 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களில் ஒருவரான இந்தியரின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என, ஐ.நா., கூறியுள்ளது.இத்தாலி தலைநகர் ரோம் அருகில் உள்ள கிக்லியோ போர்டோ தீவுக்கருகில் உள்ள பாறை மீது மோதி, கோஸ்டா கான்கொரிடா என்ற ஆடம்பர சொகுசுக் கப்பல் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில், ஆறு பேர் பலியாயினர்.
அதிகரிப்பு: இந்நிலையில், இத்தாலி கடற்பாதுகாப்பு அதிகாரிகள், 29 பேர் காணாமல் போனதாக நேற்று அறிவித்தனர். அவர்களில், 14 பேர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள். இத்தாலியர் ஆறு பேர், பிரான்சு நாட்டவர் நான்கு பேர், அமெரிக்கர்கள் இருவர், பெரு, ஹங்கேரி மற்றும் இந்தியாவைச் சேர்ந்தோர் தலா ஒருவர். மும்பையைச் சேர்ந்த ரெபல்லோ ரஸ்ஸல் டெரன்ஸ், 33 என்ற இந்தியர் அக்கப்பலில் பணியாளராக இருந்தார். அவரைத் தேடும் பணியில் இந்தியத் தூதரகம் ஈடுபட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஆபத்து: கப்பலில் 2,300 டன் எரிபொருள் இருந்தது. இவ்விபத்தால், அந்த எரிபொருள் கடலில் கலக்க நேரிடும் என, இத்தாலி சுற்றுச் சூழல் அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. கிக்லியோ போர்டோ தீவு அருகில் உள்ள கடற்பகுதி அரிய கடல்வாழ் உயிரினங்கள் நிறைந்த பகுதி என்பது குறிப்பிடத் தக்கது. இதனால், அப்பகுதியில் விரைவில் அவசர நிலை பிரகடனம் செய்யப் போவதாக இத்தாலி அரசு அறிவித்துள்ளது.
இந்தியத் தூதரகம் ஏற்பாடு: சம்பவ இடத்திற்கு ரோமில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரியைச் செல்லும்படி, மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார். கப்பலில் இருந்து மீட்கப்பட்ட, 202 இந்தியர்களும் நேற்று ரோமுக்கு பத்திரமாக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு நாடு திரும்புவதற்கான தற்காலிக ஆவணங்களும், பணமும் கொடுப்பதற்கான ஏற்பாடுகளில் இந்தியத் தூதரகம் இறங்கியுள்ளது.இதுகுறித்து அமைச்சர் கிருஷ்ணா விடுத்துள்ள அறிக்கையில், "கப்பலில் இருந்த இந்தியப் பணியாளர்கள் மீட்கப்பட்டு விட்டனர். காணாமல் போன ரஸ்ஸலைத் தேடும் பணி தொடர்கிறது. தேடுதலில் உதவி செய்வதற்காக இரு இந்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
கசிந்த உரையாடல்கள்: கைதாகியுள்ள கப்பல் கேப்டன் பிரான்சிஸ்கோ ஷெட்டினோ மீது, கப்பல் சாயத் துவங்கிய உடனேயே வெளியேறி விட்டார் என, அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதத்தில், கப்பலின் கறுப்புப் பெட்டியில் பதிவான உரையாடல்களை இத்தாலி பத்திரிகை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கேப்டனுக்கும் மற்றொருவருக்கும் இடையில் நடந்த உரையாடல்கள், பயணிகள் வெளியேறும் முன்பே அவர்கள் வெளியேறி விட்டதை நிரூபிக்கிறது.
இந்தியாவைச் சேர்ந்த ரெபல்லோ ரஸ்ஸல் டெரன்ஸ், 33, என்ற பணியாளர் காணாமல் போனவர்களில் ஒருவர். இவர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தான் தனது விடுமுறைக் காலம் முடிந்து பணியில் சேர்ந்தார். சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே இவர் உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்தார். சம்பவம் நடந்த போது, ரஸ்ஸல், தனது ஓய்வறையில் இருந்துள்ளார். அவரது ஓய்வறை கப்பலின் கீழ் மட்டத்தில், பாறை மோதிய இடத்திற்கு அருகில் இருந்தது. பாறையில் கப்பல் மோதிய பின், கப்பலின் ஒரு பக்கம் இருந்த அனைவரும் மறு பக்கத்திற்குச் சென்ற போது, ரஸ்ஸலும் தனது நண்பர் சிட்னி என்பவருடன் தப்பித்துச் சென்றார். ஆனால் கூட்ட நெருக்கடியில், இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பின் ரஸ்ஸலின் கதி என்னவாயிற்று என்பது தெரியவில்லை. மும்பையில் உள்ள இவரது பெற்றோர், தங்கள் மகனை எதிர்பார்த்து தவிப்பில் உள்ளனர்.
dinamalar