புதுடில்லி: முல்லைப் பெரியாறு அணை நீர் பங்கீடு குறித்து சுப்ரீம் கோர்ட் முடிவு எடுக்கலாம். அணை நீரை பயன்படுத்தி தமிழகம் எடுத்து வரும் நீர் மின்சாரத்தில் கேரளாவுக்கும் பங்குண்டு. இதுகுறித்து, சுப்ரீம் கோர்ட் நியாயமான தீர்ப்பை வழங்கவேண்டும்' என உயர்மட்டக் குழுவிடம் கேரளா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.முல்லைப் பெரியாறு பிரச்னையை, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஆனந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு விசாரித்து வருகிறது. இக்குழுவிடம், கேரள அரசு சார்பில், வக்கீல் ரமேஷ்பாபு நேற்று பிராமணப் பத்திரம் தாக்கல் செய்தார். அதில், "முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பகுதியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவும், நதியில் மீன்களை வளர்க்கவும் கேரள அரசுக்கு உரிமை உள்ளது. அணை நீரை பங்கீடு செய்வது குறித்து சுப்ரீம் கோர்ட் முடிவு எடுக்கலாம். அணை நீரை பயன்படுத்தி, தமிழகம் உற்பத்தி செய்து வரும் மின்சாரத்தில் கேரளாவுக்கும் பங்குண்டு. அணை பலமற்றது என்பதற்கான தொழில்நுட்ப வல்லுனர்களின் ஆதாரங்கள் இல்லை என்றாலும், அணையை செயல்படாமல் செய்ய கேரளாவுக்கு அதிகாரமுண்டு. இவ்விஷயத்தில், சுப்ரீம் கோர்ட் நியாயமான முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் அறியும் கருவி; புவியியல் துறை நடவடிக்கை: முல்லைப் பெரியாறு அணையில் நிலநடுக்கத்தை அறியும் கருவியை, மத்திய புவியியல் துறை வல்லுனர்கள் பொருத்தியுள்ளனர். முல்லைப் பெரியாறு அணை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக, கேரள அரசு புகார் கூறி வருகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்து, நிலநடுக்கத்தால் அணையில் எந்த சேதமும் ஏற்படவில்லை. கூடுதல் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியும் இது இல்லை என, தமிழக அரசு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், அண்மையில் ஐவர் குழுவின் உறுப்பினர்களான தாத்தே, மேத்தா ஆகியோர் சமீபத்தில் அணையைப் பார்வையிட்டனர். இவர்களின் ஆலோசனையின் பேரில், அணையில் நிலநடுக்கத்தை அறிய, "சீஸ்மோகிராப்' கருவியை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பேரில், கோல்கட்டாவில் உள்ள மத்திய புவியியல் துறை வல்லுனர்கள் சாம், பர்த்தி ஆகியோர், அணையில் உள்ள ஒயர்லெஸ் அறைக்கு அருகில், "சீஸ்மோகிராப்' கருவியைப் பொருத்தினர். இங்கு ஏற்படும் நிலநடுக்கம் குறித்து, சேட்டிலைட் மூலமாக கோல்கட்டாவில் அறிய முடியும்.
dinamalar