இறந்த தலிபான்களின் உடல்கள் மீது சிறுநீர் கழித்த அமெரிக்க வீரர்கள்- ஆப்கனில் கொந்தளிப்பு

US Marines urinating on Taliban corpses வாஷிங்டன்: இறந்த தலிபான் தீவிரவாதிகளின் உடல்கள் மீது அமெரிக்க மெரைன் வீரர்கள் நான்கு பேர் சுற்றி நின்று சிரித்தபடி சிறுநீர் கழிப்பது போன்ற வீடியோ வெளியாகி இஸ்லாமிய நாடுகளில் பெரும் கொந்தளிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கர்களின் இந்த செயலால் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் பெரும் கொதிப்பு எழுந்துள்ளது. இதனால் பெரும் தர்மசங்கடத்துக்குள்ளான அமெரிக்கா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

யூடியூப் மூலம் இந்த வீடியோ முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. அதில் மூன்று தலிபான் தீவிரவாதிகளின் உடல்கள் கீழே கிடக்கின்றன. அதைச் சுற்றி நிற்கும் நான்கு அமெரிக்க மெரைன் வீரர்கள்,சிரித்தபடியும், பேசியபடியும் சிறுநீர் கழிக்கின்றனர். உடல்கள் மீதே அவர்கள் சிறுநீர் கழிப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இவர்கள் மனிதர்களா அல்லது மிருகங்களா என்று கேட்கும் அளவுக்கு அமெரிக்கர்களின் இந்த இழிசெயல் உள்ளது.

இந்த வீடியோ குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க இஸ்லாமிய நல்லுறவு கவுன்சில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பெனட்டாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.அதில் போர் விதிமுறைகளை மீறும் வகையில் அமெரிக்க வீரர்கள் செயல்பட்டிருப்பது அநாகரிகமாக, கண்டிக்கத்தக்க வகையில் உள்ளதாக கடிதத்தில் கவுன்சில் கூறியுள்ளது.

இதுபற்றி பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி மற்றும் கடற்படை செய்தி தொடர்பாளர் ஸ்டீவர்ட் அப்டன் கூறுகையில், இது மிகவும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இந்தக் காட்சியை யார் வீடியோ எடுத்தது, யார் இணையதளத்தில் வெளியிட்டது என்பது தெரியவில்லை. போர் விதிமுறைகளில் மிகவும் கண்ணியம், நேர்மையை பின்பற்றும் நாடு அமெரிக்கா.அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இணையதளத்தில் வெளியான காட்சி உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாரபட்சமின்றி அமெரிக்க வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

வீடியோ காட்சி மற்றும் அதில் ஈடுபட்டதாக கூறப்படும் அமெரிக்க வீரர்கள் தொடர்பாக அமெரிக்க கடற்படையின் கிரிமினல் புலனாய்வு பிரிவு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ராணுவ சீருடையில் உள்ள அந்த நான்கு வீரர்களும், தலிபான்களின் உடல்களை இழுத்து வந்து கீழே போடுகிறார்கள். பின்னர். அவற்றைச் சுற்றி நின்று கொண்டு சிரித்தபடி பேசுகின்றனர். ஒருவர் படம் எடுக்கிறார். அப்போது ஒரு வீரர், இன்று சிறந்த நாள் நண்பரே என்று மற்றவர்களைப் பார்த்துக் கூறுகிறார்.

இறந்த உடல்கள் தலிபான்களுடையதா அல்லது ஆப்கனின் குடிமக்களா அல்லது வேறு யாரேனுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் மெரைன் வீரர்கள் நிலை கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் காந்தகார் மற்றும் ஹெல்மான்ட் மாகாணங்களில் உள்ளனர்.

மேலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையின் கீழ் கிட்டத்தட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பையும் 2014ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானிடம் ஒப்படைத்து விட்டுநாட்டை விட்டு வெளியேற நேட்டோ படைகள் திட்டமிட்டுள்ளன என்பது நினைவிருக்கலாம்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படையினர் பல்வேறு விதி மீறல்கள்,மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய வீடியோவைப் பார்க்கும்போது பின்லேடன் உடலை அமெரிக்க வீரர்கள் என்னவெல்லாம் செய்தார்களோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: